Friday, April 18, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

-

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

ரிலையன்சின் அதிபர் முகேஷ் அம்பானி குடியிருக்கும் “ஆன்டிலியா” எனும் 27 மாடி குடிசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் வினவில் முன்னர் வந்த கட்டுரையை படியுங்கள்.
தற்போது ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி அம்பானியின் குடும்பம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு நீரை பயன்படுத்துகிறது என்பதை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அதன்படி கிரேட்டர் மும்பையின் முனிசிபால்டி நிர்வாகம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கு மாதம் ஐந்து இலட்சம் லிட்டர் நீரைக் கொடுக்கிறதாம்.

அதாவது தினசரி 17,000 லிட்டர் நீர். கற்பனை செய்ய முடியவில்லையா? பிளாஸ்டிக் குடம் கணக்கில் சொன்னால் தினசரி 850 குடங்கள். இவ்வளவு நீரை பயன்படுத்துவதற்கு அம்பானியின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்? அம்பானி அவரது சம்சாரம், மூன்று குழந்தைகள் மட்டுமே.

குடும்பத்தில் 5 உறுப்பினர்கள். 5 பேர் வாழும் ஆன்டிலியாவின் பரப்பளவு 5 இலட்சம் சதுர அடிகள். 5 பேர்களுக்கு தேவைப்படும் ஒரு மாத நல்ல நீர் 5 இலட்சம் லிட்டர். எல்லாம் ஐஞ்சுக்கு ஐந்து என்று மேட்சாகத்தான் பொருந்துகிறது. எனினும் அம்பானியின் நீர் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆன்டிலியா குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார்களை கழுவ, நாய்களை குளிப்பாட்ட இன்ன பிற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் அந்த நீர் பயன்படுகிறது. இது போக நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.

மேலும் நீருக்காக முனிசில்பாடி நிர்வாகம் வசூலிக்கும் தொகையை அம்பானி தவறாது கட்டிவிடுகிறார். பிசினசில்தான் அவர் அரசை ஏமாற்றுவார், அது  போக அவர் ஒழுங்காக நீர்வரி கட்டும் நல்ல குடிமகன்தான்.  நாமும் அவரது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் விதிக்கும் கப்பத்தை ஒழுங்காக கட்டுகிறோம் அல்லவா அது போலத்தான் அம்பானியும் நல்ல பிள்ளையாக நீர்வரி கட்டுகிறார்.

இந்த தண்ணி கணக்கு என்பது முனிசிபால்டி அளிக்கும் நல்ல நீர் மட்டும்தான். இது போக ஆன்டிலியாவின் அன்றாடத் தேவைக்காக எவ்வளவு நிலத்தடி நீர் பயன்படுகிறது என்பதை யாரும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கூட அறியமுடியாது. அதெல்லாம் காந்தி கணக்குதான்.

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

நண்பர்களே, மும்பையின் நெரிசலையும், தாரவி முதலான குடிசைப் பகுதிகளின் நரக வாழ்வையும் நாம் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்போம். பத்துக்கு பத்து தீப்பெட்டி போன்ற இடத்தில் எல்லா பொருட்களோடும், எல்லா குடும்ப உறுப்பினர்களும் தீக்குச்சிகளைப் போல அடைபட்டு வாழ்கிறார்கள். பல குடிசைகளுக்கு ஒரு கழிப்பறை, குளியலறை என்பதுதான் அவர்களது சதவீதக் கணக்கு. காலை கடனுக்காக அதிகாலையில் கழிப்பறை முன்பு எப்போதும் நிற்கும் வரிசை. ஏக், தோ, தீன்….தஸ் என்று எண்ணிவிட்டு கக்கூஸ் கதவு தட்டப்படும். அந்த பத்து கண நேரத்தில்தான் முந்தைய நாளின் சாணியை அதிவேகமாக காலி செய்ய வேண்டும். தாமதித்தால் கதவு உடைக்கப்படும்.

ஒரு நாளைக்கு 850 குடங்கள் என்பது கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் பயன்படுத்தும் நீர். மும்பையில் இருக்கும் ஏழைகளும், கீழ்தட்டு நடுத்தர வர்க்கமும் தமது முழு தேவைக்கு மாநகராட்சி நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு எல்லா நாளும் போதுமான நீர் கிடைப்பதில்லை. இது மும்பைக்கு மட்டுமல்ல எல்லா மாநகரங்களுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில் வைத்துப் பார்த்தால் அந்த 850 குடங்களின் ஆபாசம் நமது கண்ணை உறுத்தும்.

அம்பானி ‘உழைத்து’ முன்னேறிய கதையை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வாசிக்கும் அதன் வாசகர்கள் தினசரி பூஜையே செய்கிறார்களாம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றிக்காக ஆர்ப்பரித்த அம்பானி தம்பதியினரின் தேசபக்தியைக் கண்டு கிரிக்கெட் இரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.

அம்பானிக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை விட இந்த தேசம்தான் அம்பானி மேல் பக்தி கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால்தான் அம்பானியும் சளைக்காமல் தனது பக்த கோடி அடிமைகளுக்கு அன்றாடம் பங்கு சந்தை மூலம் திவ்ய தரிசனம் தருகிறார். பக்தர்களின் காணிக்கை மூலம் ரிலையன்சு கோவில் தினசரி குடமுழுக்கை நடத்துகிறது. அம்பானி நமஹா என்ற மந்திரம் இந்தியாவின் தேசிய மந்திரமாகிவிட்டது. அதன்படி பார்த்தால் 850 குடம், திருப்பள்ளி எழுச்சி கொள்ளும் பகவான் ஆய் போய்விட்டு கழுவுவதற்கு பயன்படுகிறது என்றால் நாம் செய்த புண்ணியம்தான் என்ன?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: