Tuesday, April 15, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

-

அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!

நவம்பர் புரட்சி தினத்தை ஏழாம் தேதி கொண்டாடிய கையோடு எட்டாம் தேதி போராட்டத்திற்கு தயாரானார்கள் தோழர்கள்.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் முடக்க  முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு பச்சையான ஏமாற்று.

சமச்சீர் பொதுப்பாடத்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாகவே தரமான நூலகத்தை முடக்குகிறார்.  அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பனகல் மாளிகை அருகே 8.11.2011 அன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதற்கு பு.மா.இ.முவின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். இங்கே அதன் புகைப்படங்களையும், வீடியோவையும் இணைத்திருக்கிறோம்.

 

___________________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

____________________________________________________________________