மே 22, இரவு. நள்ளிரவு நிசப்தத்தில் மூழ்கியிருந்த சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை கோரமான சாலை விபத்தொன்று எழுப்பிய மரண ஓலத்தால் அதிர்ந்தது.

பேய் வேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், எழும்பூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில், போலீஸ் ரோந்து வாகனத்துடன் மோதி, பேருந்து நிலை மேடையின் மேலேறி, அங்கே உறங்கிக்கொண்டிருந்த நபர்களோடு சேர்த்து ஐவரை இடித்துத் தேய்த்து அருகில் நின்றிருந்த ஆட்டோவில் மோதி நின்றது.
60 வருடங்களாக மருத்துவமனை வாயிலில் இரவு உடை மற்றும் துண்டுகளை விற்றுவரும் சந்திரா என்பவரின் மூன்று பேரக் குழந்தைகளும் அன்று இரவு பேருந்து நிலைமேடையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்த கார் அவர்களை நசுக்கியது.
அதில் 13 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் அவதிப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்துவிட்டான். வாசு (8) இடுப்பு பகுதியில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சுபா (10)வின் மண்டை எலும்பு உடைந்து, அதை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் தைத்து இருக்கிறார்கள். மேலும் வலது கை நான்கு இடங்களில் முறிந்து, வலது முழங்கை நசுங்கி, இடது தோளில் உள்ள ஒரு எலும்பும் முறிந்த நிலையில், மிக ஆபத்தான நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.
பேருந்து நிலைமேடையில் விளம்பரப் பலகைகளை பொறுத்திக்கொண்டிருந்த முஹம்மத், மணி என்ற இருவரும் மோதி கீழே தள்ளப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
குடிபோதையில் காரை ஓட்டிய ஷாஜி புருஷோத்தமன் தான் இவ்விபத்திற்கு காரணம். ஹால்ஸ் ரோடில் இருக்கும் அடுக்கு மாடி வீட்டில், மூன்று நண்பர்களுடன் பார்ட்டியில் குடித்து, கூத்தடித்துக் கொண்டு இருந்த ஷாஜி, கடற்கரைக்கு சென்று மேலும் கேளிக்கையில் களிக்க, பாந்தியன் சாலை வழியாக காரில் நண்பர்களுடன் பயணித்தார்.

விபத்து நடப்பதற்கு முன்பே, ஹால்ஸ் ரோடில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர், குடிபோதையில் கார் ஓட்டிவந்த ஷாஜி மற்றும் காரில் இருந்த அன்வர், அணில் மற்றும் ‘குதிரை’ குமார் ஆகியோரை எச்சரித்ததோடு விட்டு விட்டார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு, அப்பாவி மனிதர்கள் மீது தன் காரை ஏற்றி முடமாக்கியும், கொன்றுமிருக்கிறார் ஷாஜி.
விபத்து நடந்ததை நேரடியாக பார்த்த ராஜேஷ் என்பவர் டி-6 அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், கார் ஓட்டுனர் ஆரஞ்சு நிறத்தில் டி.ஷர்ட்டும், காதணியும் அணிந்து இருந்ததார் என்றும். விபத்து நடந்தவுடன் காரிலிருந்த இரண்டு நபர்கள் தலை தெறிக்க ஒடி தப்பித்து விட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். கார் ஓட்டுனரையும் அதிலிருந்த மற்றொரு நபரையும் கையும் களவுமாக பிடித்து, தப்பவிடாமல், அடித்து போலீஸிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.
குற்றவாளியான ஷாஜியையும், உடனிருந்த குமாரையும் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்கள் மது குடித்திருந்தார்கள் என்பதையும் உறுதி செய்துள்ளனர். நேரடி சாட்சிகள் மற்றும் மருத்துவ சான்றுகள் கையிலிருந்தும், பணபலமும் அதிகார ஆளுமையும் கொண்ட ஷாஜியின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத போலீஸ், அங்கிருந்து அவரை அனுப்பிவைத்தனர். மேலும் ஷாஜிக்கு பதிலாக காரை ஓட்டிவந்தது குமார் என்று முதல் தகவலறிக்கையை (FIR) பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
போலீசு தலைமையில் காவல் நிலையத்திலேயே நட்ந்த இந்த ஆள் மாறாட்டம், ஊடகங்களினால் நாறடிக்கபட்டவுடன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தார். மேலும் முதல் தகவல் அறிக்கையில் முதன்மை குற்றவாளியாக பதிவாகியிருந்த ‘குதிரை’ குமாரை இரண்டாம் குற்றவாளியாக மாற்றி, ஷாஜியை முதன்மை குற்றவாளியாக மாற்றியுள்ளார்.
முனிராஜின் அகால மரணத்திற்கு பின் ஷாஜி மற்றும் அவரின் தந்தை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், முன்பிணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தான் கொலை வழக்கில் சிக்கியுள்ளதை உணர்ந்த ‘குதிரை’ குமார், அதிலிருந்து விடுபட தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றவியல் தொடர் விசாரணை மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கைதாகியிருக்கும் குமார் விபத்தன்று கார் ஒட்டவில்லை என்பது ஆதாரங்களுடன் வெளி வரத் துவங்கியுள்ளது. குமாரை புருஷோத்தமன் குடும்பத்தார், கார் ஓட்டுனராக வேலையில் அமர்த்தியதற்கான அதாரங்கள் எங்கும் இல்லை. நெல்லூர் நாய்டுபேட்டில் புருஷோத்தமன் குடும்பத்தினருக்கு சொந்தமான குதிரைகளை பராமரிக்கும் வேலையை தான் ‘குதிரை’ குமார் செய்து வந்துள்ளார். அவ்வப்போது பராமரிப்பு செலவுக்கான பணத்தை பெற அவர் சென்னைக்கு வருவதுண்டு. மேலும் குமார் போலீஸிடம், தான் 9/2, திருப்பூர் குமரன் வீதி, வியாசர்பாடி என்ற இடத்தில் வசித்து வந்ததாக கொடுத்திருந்த முகவரியில், அங்கு அப்படிப்பட்ட நபர் வசிக்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இறுதியாக, குமாரின் வாகன ஓட்டும் திறனைக் கணிக்க அரசு தரப்பு சோதனையாளர்கள் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் கார் பொறியாளர்கள் முன்னிலையில் விபத்துக்குள்ளான மெர்சிடஸ் பென்ஸ் கார் மாடலை ஓட்ட வைத்துள்ளனர். 10 நிமிடத்திற்கு மேல் ஓட்டுனர் சீட்டில் அமர்ந்திருந்தும் அவரால் வண்டியே ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாமல் இருந்துள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் கார் பொறியாளர்கள் ‘குதிரை’ குமார் காரை விபத்தன்று ஓட்டியிருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமான சான்றிதழை போலீஸிடம் வழங்கியுள்ளனர்.
ஷாஜியின் எழும்பூர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் நடந்த விசாரணையில், ஷாஜியை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மது அருந்தும் பழக்கம் உள்ள ஷாஜி, குடித்திருந்தாலும் தானேதான் வண்டி ஒட்டவேண்டும் என்று வலியுறுத்துவாராம். ஹாரிஸ் ரோட்டில் உள்ள அலுவலகத்திற்கு இரவு வேளையில் நண்பர்களுடன் வந்து குடித்துவிட்டு, மீண்டும் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் வழக்கமும் உண்டு என்றும் கூறியுள்ளனர்.
ஷாஜிதான் குற்றவாளி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும், அதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பினும், தலை மறைவாகியுள்ள ஷாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸார் கூறி வருகின்றனர். தனிப்படை அமைத்து கேரளா, மும்பாய், பெங்களூர், அஹமதாபாத் மற்றும் கோயம்புத்தூரில் தேடுதல் வேட்டையை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். மலேசியாவில் பதுங்கியிருக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் கூறியுள்ளனர்.
யார் இந்த ஷாஜி புருஷோத்தமன்?
சாராய முதலாளியும் EMPEE குழுமத்தின் தலைவருமான எம்.என்.புருஷோத்தமனின் மகன்தான் ஷாஜி. ஷாஜியின் சகோதரியை மணந்து கொண்டு அவருக்கு மச்சானாகியிருக்கிறார் இந்திய வெளிஉறவுத்துறை அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணன். குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான ஷாஜி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வளந்தவர். EMPEE டிஸ்ட்டலரிஸ் மற்றும் EMPEE குழுமத்தின் சில நிறுவனங்களில் இயக்குனராகவும் இருந்தவர்.

1970 களில் எம்.என்.புருஷோத்தமனால் உருவாக்கப்பட்ட EMPEE குழுமம் சென்னையில் நட்சத்திர விடுதிகள், மதுபானங்கள், சர்க்கரை, இரசாயன மருந்துகள், மின்சார உற்பத்தி மற்றும் சொத்து நிர்வாக துறைகளில் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
பணத்திலேயே புரண்டு வளர்ந்த ஷாஜி, தன் வர்க்கத்திற்கே உரிய திமிருடன், சட்டத்தை கால் தூசாக மதித்து, நள்ளிரவில் முழு போதையில் கார் ஓட்டுவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார். ஏதோ எதேச்சையாக இந்த சம்பவத்தின் மூலம் சிக்கியுள்ளார். பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு என்று எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும் பின்னனியை கொண்ட அவருக்கு இதிலிருந்து தப்பிப்பது என்பது மிகவும் சாதாரண விசயமாகும்.
ரோந்து பணியில் ஈடுப்படும் போக்குவரத்து போலீஸ் வாகனம் தவறான வழியில் வந்ததால் தான் விபத்து நடந்தது என்று ஷாஜி தன் தரப்பு நியாயத்தை முன் பிணை மனுவில் குறிப்பிட்டு இருப்பதாலும், ஊடகங்களினால் விபத்தின் உண்மையான தகவல்கள் வெளியே வர துவங்கியதாலும்தான், இவ்வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஷாஜியின் முன்பிணை மனு மறுக்கப்பட வேண்டும் என்று குறுக்கீட்டு மனுவை சமர்ப்பித்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (சென்னைக் கிளை) வழக்கின் விளைவாக ஷாஜியின் முன்பிணை மனு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஷாஜி, இதுவரை இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் விசாரணை நடத்திவந்த மூத்த போலீஸ் அதிகாரியின் பணியிடமாற்றம், கோடீஸ்வர ஷாஜியை காப்பாற்றும் பின்னணி வேலைகள் ஜரூராக நடந்துக்கொண்டு இருப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. போக்குவரத்து விசாரணைப் பிரிவின் போலீஸ் துணை கமிஷனர் சரவணன் விசாரித்து வந்த வழக்கு தற்போது போலீஸ் துணை கமிஷனர் செல்வமூர்த்தியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
போலீஸ் துணை கமிஷனர் சரவணன் சென்னையிலிருந்து நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறைக்கு, வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் போதே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கும் பொருட்டு அவர் விடுமுறை எடுத்துள்ளார் என்றும், அவர் வெகு நாட்களாக கேட்டு வந்த இடமாற்றம் இப்போது கிடைத்துள்ளது என்று சப்பைக்கட்டு கட்டுகின்றது போலீஸ். சற்று நியாயமாக, வளைந்துக்கொடுக்காமல் சரவணன் இருந்ததால் தான் அவருக்கு இந்நிலை என்கின்றன ஊடகங்கள். ஷாஜி போன்ற சீமான்களை உற்று நோக்கினால் காவல்துறைக்குக் கூட இதுதான் கதி.

செப்டம்பர் 28, 2002 அன்று இரவில் நடிகர் சல்மான் கான் போதையுடன் ஓட்டிவந்த டொயோட்டா கார் நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த 5 உழைக்கும் மக்களின் மீது ஏறி ஒருவரை சம்பவ இடத்திலேயே கொன்றது. 11 ஆண்டுகளாகியும் இன்று வரை அவர் தண்டிக்கப்படாமல் உலகம் முழுவதும் சுதந்திரமாக ‘கலைச்சேவை’ செய்து கொண்டுத்தான் இருக்கிறார்.
டிசம்பர் 2007 இல், அசல் கேம்கா என்ற பணக்கார வியாபாரியின் மகன் சென்னை, புது ஆவடி ரோடில் மெர்சிடஸ் பென்ஸ் காரை ஓட்டி சென்று, பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 11 மனிதர்கள் மீது ஏற்றி இருவரை கொன்றார். இளையோர் நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு வெறும் 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளி தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.
எழும்பூர் சம்பவம் நடந்த ஒரே வாரத்திற்குள், கடந்த ஜூன் 2 அன்று பெங்களூரை சேர்ந்த வியாபாரி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் லோகேஷ் ரெட்டியின் மகனான ராஜேஷ் ரெட்டி (21) புத்தம்புதிய ஆடி காரினை குடிபோதையில் ஓட்டிச் சென்று எம்.ஜி ரோடில் ஆட்டோ ஒன்றில் மீது மோதி ஒருவரை கொன்று, மேலும் இருவரை பலத்த காயங்களுக்கு ஆளாக்கியுள்ளார். கிறிஸ்ட் பல்கலைக்கழக பட்டதாரியான ராஜேஷ் பிரிட்டனிற்கு சென்று மேல் படிப்பு படிக்க திட்டமிட்டு இருந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன் வாங்கப்பட்ட காரை, ராஜேஷ் 150 கிமி வேகத்தில் ஓட்டிய போது இவ்விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு வேகமாக காரில் பறந்துள்ளார் மனிதாபிமானமற்ற அந்த மைனர். அங்கேயும் ஆள்மாறாட்ட வேலை நடந்தது, ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத ஒரு டிரைவரை சரணடையச் செய்ததால், அம்பலப்பட்டு வேறு வழியில்லாமல் ராஜேஷை கைது செய்து வைத்திருக்கிறது போலீசு.
உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 304 AA (அலட்சியத்தினால் ஏற்பட்ட மரணம்) பிரிவின்படி கொடுக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனை குடிகார ஓட்டுனருக்கு மிகவும் சலுகை காட்டும் தண்டனை என்றும், குடிபோதையில் வண்டி ஓட்டினால் விபத்துக்கள் நேரிடும் என்று தெரிந்தும் அவர்கள் நிகழ்த்தும் இவ்விபத்துகளுக்கு 304-IIII (மரணம் விளைவிக்கும் குற்றம்) சட்டப் பிரிவின்படி 10 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை வழங்கவேண்டும் என்று எடுத்துக் கூறியுள்ளது.
சட்ட வல்லுனர்கள் ஆய்வுப்படி, இத்தகைய பணக்கார குடிக்கார ஓட்டுனர்களினால் ஏற்படும் அபாயமான விபத்துகளுக்கு, தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு வெளியே (அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட்) பணத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.
சாதாரண மக்களிடம் குண்டாந்தடியைக் கொண்டு ‘சட்டம்- ஒழுங்கை’ நிலை நாட்டும் காவல்துறையும் நீதித்துறையும், இந்த மைனர் குஞ்சுகள் கொலையே செய்தாலும் அவர்கள் காலடியில் கேள்விக்குறியென வளைந்து நிற்பதைத்தவிர வேறெதுவும் செய்யாது, செய்யவும் முடியாது. இதுதான் இன்றைய இந்தியா!
– ஜென்னி
படங்கள் – நன்றி : தி ஹிந்து நாளிதழ்
மேலும் படிக்க
- Who are the Purushothamans
- Merc driver wore orange T-shirt, ear ring
- Both Shaji, driver claim they have been framed in accident case
- Mystery deepens over Egmore car accident case
- A day later – Boy hit by drunk car driver dies
- Speeding car hits 5 at bus shelter in Egmore
- Shaji Purushothaman was driving drunk, patrol vehicle wasn’t involved, cops say
- Shaji partied at an apartment before accident, say police
- Tamil Nadu business family scion who drove over kids on the run
- Audi crash – Businessman’s son arrested
- EMPEE group