இஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள், நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.
அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?
இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள் நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?

சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள் எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.
“முக்கிய வாசல் வழியாக தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப் பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.
அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில் இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.
பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.
மேலும் படிக்க
- Death of Saudi female student stirs uproar
- Saudi student dies after male medics not allowed to help due to gender segregation – family
- Amna Bawazeer Death: Female Saudi Student Dies When Staff Block Male Paramedics
- Saudi female student dies after male ambulance crew denied access
- Women’s rights in Saudi Arabia
- 2002 Mecca girls’ school fire
- Saudi woman loses life, was denied medical help under gender law