Tuesday, April 15, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி

ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி

-

பேருந்து சிறுசேரி சிப்காட்டினுள் நுழைந்து, டி.சி.எஸ் முதல் கேட்டை தாண்டி விட்டிருந்தது. வழக்கம் போல, அரைத் தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு, காதிலிருந்து இயர் போனை கழற்றிவிட்டு, பையில் இருக்கும் அடையாள அட்டையை துளாவிக் கொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்தவர்கள் கலவரமாக சத்தமிட்டார்கள், சிலர் உச் கொட்டினார்கள். எதிர் திசையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் மோதி விழுந்திருக்கிறார். டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு சற்று தூரத்தில் தான் இந்த விபத்து நடந்தது.  பேருந்து மெதுவாக ஊர்ந்து அவரை நெருங்குவதற்குள், தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தேன். டி.சி.எஸ் வாயிலில் சிகிரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் என அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டதை பார்க்க முடிந்தது. சுற்றி நின்றவர்களின் கால்களுக்கு ஊடே ஒருவர் விழுந்து கிடப்பதும் அவரை சுற்றி இரத்தம் வழிந்தோடுவதும் தெரிந்தது.

பேருந்தும் நகர்ந்து விடவே விபத்து நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றினாலும், அலுவலகத்துக்கு ஏற்கனவே தாமதமாக செல்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கியதாலும் செய்ய வேண்டிய அமெரிக்க வாடிக்கையாளரின் பணிகள் மனதை நிறைக்க ஆரம்பித்ததாலும் பேருந்தில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடக்க ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும், ஒருவர் விழுந்து அடிபட்டு கிடக்கிறார், போய் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று மனசாட்சி கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பவே முடிவை மாற்றிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து கிடந்த நபரின் அருகில் சென்று பார்த்தேன்.

ஒரு இளைஞர் விழுந்து கிடந்தார், அவரைச் சுற்றிலும் இரத்தம். கோயில் கொடையில் கெடா வெட்டும் போது தான் இவ்வளவு இரத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அளவு இரத்தம் ஒரு மனிதனது மண்டையில் இருந்து கொட்டுகிறது. காது வழியே இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரின் கால்கள் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் சிந்தனையே மறந்து போனது. நாம் எவ்வளவு வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறோம் என்பதை பின்னால் யோசிக்கும் போது தான் தெரிகிறது.

நான் உட்பட சுற்றி இருந்தவர்களில் பலர் அருகில் செல்லவே பயந்தோம். சிலருக்கு உதவி செய்யப் போய் போலீஸ், கேஸ் என்று அலைய வேண்டும் என்ற பயமிருந்திருக்கலாம், என்னைப் பொறுத்த வரை தலையில் கைவைத்து அவரை தூக்கினால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். என் எண்ணத்தை பிரதிபலிப்பது போல ஒருவர் “நாம கைய வெக்க போயி மண்டை மேலும் பிளந்து இரத்தம் அதிகமாக வெளியேறினால என்ன செய்வது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மவுசில் தொழில் நுட்ப வித்தைகளை சுழற்றும் மூளைக்கு குறைந்தபட்ச முதலுதவி கூட செய்யத்தெரியாது என்ற உண்மையும் அச்சுறுத்தியது.

அருகில் இருப்பவர்கள் 108 அவசர ஊர்திக்கும், குளோபல் மருத்துவமனை அவசர ஊர்திக்கும் ஏற்கனவே தகவல் சொல்லி விட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வரை இவர் தாக்கு பிடிப்பது சிரமம் என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. வெளியேறும் இரத்தமும், உடல்துடிப்பதும், கால்கள் வெட்டுவதுமாக உயிரைப் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர முடிந்தது.

டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியில் மேலும் பல்வேறு தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு  அலுவலகத்திலும் கண்டிப்பாக அவசர ஊர்தி (ambulance) வைத்திருப்பார்கள். மேலும் நூற்றுக்கணக்கான கார்களும், பேருந்துகளும் வளாகங்களுக்குள் நின்று கொண்டிருக்கும்.

அவர் யார் என்பது அங்கு இருக்கும் எவருக்கும் அதுவரை தெரியாது. அவரின் சட்டைப் பையில்  “NPT கேப் சர்வீஸ்” என்று அடையாள அட்டை இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு பணிபுரியும் ஊழியர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் கேப் ஓட்டுநராக இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டோம்.

மருத்துவ ரீதியாக முதல் உதவிக்கான உபகரணங்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும். அதைக் கொண்டு ஏதேனும் உதவ முடியுமா என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். டி.சி.எஸ் அலுவலகத்தில் செட்டிநாடு மருத்துவமனையின் அவசர ஊர்தி எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று சொல்லியபடியே டி.சி.எஸ் அடையாள அட்டை அணிந்திருந்த நபர் அதன் வாயிலை நோக்கி ஓடினார். அருகில் இருந்த ஒருவர், தான் முன்பு சி.டி.எஸ் அலுவலகத்தில் வேலை செய்ததாகவும் அதன் அவசர தொடர்பு எண்ணுக்கு (Emergency) அழைத்து ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று பார்ப்பதாகவும் சொல்லி தொலைபேசிக் கொண்டிருந்தார்.

அவரவரவர்களுக்கு சாத்தியமான வழிகளில் ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நானும் சிலரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஐ.டி நிறுவனங்களுக்கு காரில் வேலைக்கு வரும் எவரும் காரை நிறுத்தி உதவி செய்யத் தயாரில்லை. வளர்ச்சியின் சின்னமான கார்களுக்கு ஒரு மனிதனை காப்பாற்றுவது முக்கியம் என்று தெரிந்திருக்கவில்லை. அடிபட்டவரோ இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறார்.

சி.டி.எஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டவரிடம், அந்த நிறுவனத்தினர், அடிபட்ட நபர்  தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவரா என்று கேட்டிருக்கிறார்கள். சி.டி.எஸ் ஊழியர் இல்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி எதிர் முனையில் போனை வைத்து விட்டார்கள் அந்த மனிதாபிமானிகள். தங்கள் நிறுவனத்திற்காக கேப் ஓட்டுபவராகக் கூட இருக்கலாம் என்று தெரிந்தே அவர்கள் கைவிரித்தார்கள்.

டி.சி.எஸ் நோக்கி ஓடியவர் கையுடன் ஒரு செக்யூரிட்டியை அழைத்துக் கொண்டு வந்தார். செக்யூரிட்டி என்றால் சாதாரணமானவர் அல்ல, அதன் அதிகாரியாக இருக்கக் கூடும். ஒரு போலீசுக்கே உரிய தோரணையுடன் கையில் வாக்கிடாக்கி சகிதமாக வந்தார். இந்தியில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து வாக்கிடாக்கியில் தகவல் கொடுத்துவிட்டு டி.சி.எஸ் ஊழியர் இல்லை என்றதும் கிளம்பி விட்டார். இத்தகைய பாதுகாப்பு சூரப்புலிகளின் காவலில்தான் உமா மகேஸ்வரியும் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அடிப்படை மனிதாபிமானம் கூட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருப்பதில்லை என்பது பளார் என்று முகத்தில் அறைந்தது போல புரிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கும் மனிதநேயத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை அந்த கணத்தில் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அடிபட்டவர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமில்லாமல், அவர் சாதாரண ஒரு கேப் டிரைவர் தானே என்று அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.

“கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பானிசிபிலிட்”டி என்று பெயரில் அலுவலகத்தில் நடந்த எண்ணற்ற விளக்கக் கூட்டங்களை நினைத்துப் பார்த்தேன். நிறுவன ஊழியர்களை  கொண்டு கடற்கரைகளில் பிளஸ்டிக் பொறுக்குவது, கேன்சருக்கு எதிராக மாரத்தான் ஓடுவது போன்று மொன்னையாக எதையாவது செய்துவிட்டு அதையே பெரிய சாதனையாக சித்தரிக்கும் இவர்களின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அன்று தான் பார்க்க முடிந்தது. வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்காகவும் சமூகத்தில் தங்கள் பிம்பத்தை உயர்த்துவதற்காகவும் மட்டுமே திட்டமிட்ட முறையில் ஊடக வெளிச்சத்தில் ‘சமூக அக்கறை’யை வெளிப்படுத்தும் இவர்களின் மூஞ்சியில் காறித் துப்பலாம் போல இருந்தது. இவர்களுக்காகவா பெருமையுடன் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. ஒன்றுக்கொன்று எதிரான கார்ப்பரேட் இலாப வெறியும், மனிதநேயமும் என்றைக்குமே சேர்ந்து இயங்க முடியாது என்பதை கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

நேரம் ஆக ஆக என்ன செயவது என்று செய்வது என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் நெருங்கும் சத்தம் எதுவும் அருகில் கேட்கவுமில்லை. நம்பிக்கையற்று இருந்த வேளையில் அந்த வழியாக வந்த ஒரு வாடகை வண்டி ஓட்டுநர் தன் வண்டியில் அடிபட்டவரை கொண்டு செல்ல அனுமதித்தார். ஏதோ வினவில் சொல்கிறார்கள் என்று இல்லை உண்மையில் உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம் தான். சக மனிதனின் வலி, வேதனைகளை இரத்தமும் சதையுமாக உணர்ந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். பல்லாயிரம் கோடிகளோடு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம் இல்லாத மனிதாபிமானம் சில ஆயிரங்களை மட்டும் ஊதியமாக பெறும் அந்த கார் ஓட்டும் தொழிலாளியிடம் இருந்தது.

அவரை வண்டியில் ஏற்றி சிப்காட் வாயிலை நெருங்கும் போது எதிரில் நல்ல வேளையாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அருகில் இருப்பது கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைதான் என்று முடிவு செய்து அங்கு போகச் சொன்னோம். முதலுதவி அளித்தபடியே வண்டி அங்கு போய்ச் சேர்ந்து அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அடிபட்டவரை மனிதர்களின் உயிரை காப்பாற்ற சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களின் உலகமான ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டோம், அதுவும் நவீன வசதிகளையும் திறமை வாய்ந்த மருத்துவர்களையும் கொண்ட இடம். அவரை மருத்துவ சிகிச்சைகள் சூழ்ந்து கொண்டு அவரை காப்பாற்றும் முயற்சி ஆரம்பித்து விடும் என்று பரபரப்பாக எதிர்பார்த்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.

“அவருக்கு நீங்கள் யார்?”

“யாருனு தெரியல மேடம். வழியில அடிபட்டு கிடந்தார், கூட்டிட்டு வந்தோம்”

“அப்படியா. நாங்க ஃபர்ஸ்ட் எய்ட் டிரீட்மென்ட் பண்றோம். நீங்க அவங்க ஃபேமிலிக்கு தகவல் சொல்லிருங்க. அவஙக வந்திரட்டும்”. அப்புறம்தான் சிகிச்சை ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்தது.

“காசு பிரச்சனையில்ல மேடம். நாங்க கட்டுறோம். நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டுமில்ல டிரீட்மென்டை கூட ஆரம்பிசிருங்க”

“அப்படியா. அப்படினா இந்தாங்க, இத ரிசெப்சென்ல கொடுத்து அட்மிட் போட்டுட்டுவாங்க, அன்கான்சியசா தான் இருக்காரு. ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கும்”. ஒரு பட்டியலை கையில் திணித்தார்.

“ம்ம்”

உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவரால் பணம் கட்ட இயலுமா என்பதை சோதனை செய்து விட்டுதான் ஆரம்பிக்கிறார்கள். காசில்லாதவனுக்கு என்ன மயித்துக்கு உயிர் வேண்டியிருக்கு என்பது தான் இவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது.

பணத்தைக் கட்டுவதற்கு போன இடத்திலும், மருத்துவமனை ஊழியர் கூடவே வந்து பணத்தை கட்டி விட்டீர்களா, ரசீது எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார். பணம் கட்டத்தான் வந்து விட்டேன், போய் சிகிச்சையை ஆரம்பியுங்கள் என்று கண்ணீரும் கோபமுமாக அவரை போய் சிகிச்சை ஆரம்பிக்க சொன்னேன்.  ஆனால், அவரது விதிமுறைகள் தெளிவானவை. காசு இல்லை என்றால் சிகிச்சை இல்லை காசு கட்டி ரசீது வந்தால்தான் எதுவும் ஆரம்பிக்கும் என்று தெளிவானது.

பணத்தைக் கட்டி விட்டு வந்து அடிபட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லலாம் என்று அவரின் பர்சை எடுத்து பார்த்தோம் அதில் சிறிது பணமும், நகை அடகு வைத்த இரசீதுகள் நாலைந்தும் இருந்தன. அவரது அலுவலக எண் கிடைத்தது. அதற்கு அழைத்து தகவல் கூறினோம். சற்று நேரத்தில் அவரின் அலுவலக நண்பர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்.

அடிபட்டவர் வாடகை வண்டி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்யும் மருதமுத்து . சிப்காட்டில் இயங்கும் ஐ-கேட் மற்றும் ஆஸ்பைர் நிறுவனங்களுக்கு வாடகை வண்டி சேவை செய்கிறது அந்நிறுவனம். இவரின் வயது 30-க்கு குறைவாக தான் இருக்கும், ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.

காலை 9-10 மணி வாக்கில் அலுவலகத்துக்கு போவதற்கு முன்பு, அலுவலக சம்பளம் போதாமல் கூடுதல் வருமானத்துக்காக அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவாராம். அதை முடித்து விட்டு, பல நாட்கள் காலை உணவு கூட சாப்பிடாமல் வேலைக்கு போய் விடுவாராம். இரவில் தாமதமாகப் போய் சில மணி நேரம் தூங்கி விட்டு அல்லது தூங்காமலே கூட அடுத்த நாள் அதிகாலையில் உழைப்பை ஆரம்பித்து விடுவார் என்று அவரது நண்பர்கள் கூறினார்கள். அரைப்பட்டினி, அதீத உழைப்பு என்று அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மேலும் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் அன்றுதான் வேலைக்கு சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவர் பசியிலும், வெயிலிலும், சோர்வடைந்து மயக்கமடைந்து விட வண்டி கட்டுப்பாடில்லாமல் நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதியிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

உறவினர்கள் வந்தபடியால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் கிளம்பி விட்டோம். அவ்வப்போது தொலைபேசி, எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தான் தகவல் கிடைத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். “ஏற்கனவே தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறீர்கள். இனி இன்னும் அதிகமாகும். உங்களால் முடியுமென்றால் இங்கே சிகிச்சை செய்கிறோம். இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுங்கள்” என்று செட்டிநாடு மருத்துவமனையில் கூறியிருக்கிறார்கள். செட்டிநாடு மருத்துவமனையை இயக்கும் பண ஓட்டம் வறண்டு போய் விடவே அடிபட்டவருக்கான சிகிச்சை நடைமுறையும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை ஆம்புலனசில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் போய்விட்டதை கூறியிருக்கின்றனர்.

அவரது விபத்தை அரையும் குறையுமாக பார்த்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல முதலில் முடிவெடுத்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. நிறுவனங்கள், மருத்துவமனைகளை விடுங்கள், ஒரு குடிமகனாக நானும் கூட முதலில் அலட்சியமாகத்தானே இருந்தேன்? இந்த அலட்சியம் என்னுள்ளே இயல்பாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கையை நிபந்தனையாகவும், பண்பாகவும் கொண்டிருக்கும் அனேக தமிழ் நாட்டுக் கிராமங்களில் எனது கிராமும் அடக்கம். ஊரிலே இருந்திருந்தால் உதவி செய்வதற்கு இத்தகைய இழுபறி போராட்டங்கள் இருந்திருக்காது. சென்னையில்?

இப்படியே அடுத்த சில நாட்களில் அவதிப்பட்டேன்.  ஊரிலிருந்து அம்மாவும், நண்பர்களும் அழைத்த போது கூட பேசத் தோணவில்லை. உலகமே என்னை புறக்கணித்துவிட்டது போல ஒரு தனிமை உணர்வு. முக்கியமாக அந்த விபத்தில் நானிருந்தால் எனக்கும் இதுதானே நிலைமை? இருப்பினும் இதை வெளியே கொண்டு வரவேண்டும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் உங்களது குற்ற உணர்வை கோபமாக மாற்றுங்கள் என்றார்கள். கோபமா? உதவி செய்ய தயங்கியவன் யார் மீது கோபம் கொள்ள முடியும்?

“நீங்கள் தயங்கினாலும் அன்று முழுவதும் மருத்துவமனைக்கு சென்று இறுதி வரை உடன் இருந்தீர்கள். ஆனால் ஓரிரு ஊழியர்களை அனுப்பி இந்த விபத்தில் உதவி செய்வதால், ஐ.டி நிறுவனங்களோ இல்லை மருத்துவமனைகளோ எதையும் இழக்கப் போவதில்லை. என்றாலும் பணம் மட்டுமே அவர்களது உலகம் என்பதால் ஒரு மனித உயிரை அலட்சியத்துடன் கொன்றிருக்கிறார்கள். அந்த தொழிலாளிக்கு உரிய வருமானம் இல்லாமல் சிரமப்பட வைத்து கொல்வதற்கு ஏற்ற உடல்நலக் கேட்டை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்தது என்று நீண்டது அந்த விவாதம். விபத்தின் இரத்தத்தின் பின்னே உள்ள மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தன.

என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை? இந்த உலகை இயங்க வைத்து பாதுகாக்கும் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு ஏழை என்பதாலேயே அவர் இறந்து போயிருக்கிறார். இல்லை கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்போது இந்தக் கொலைக்கு வருந்தி அழும் நிலையை கடந்து விட்டேன். வந்திருப்பதோ கோபம். இத்தனை வசதிகள் இருக்கும் சென்னை மாநகரில் ஒரு மனித உயிரைக் கொன்ற கொலைகாரர்கள் மீதான கோபம். அந்த கோபத்தீ என்னைத் தின்று செரிக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் நான் பழிவாங்க முடியும்.

இப்போது என்னிடம் குற்ற உணர்வு இல்லை.

( ஐ.டி துறை நண்பர் ஒருவரின் உண்மை அனுபவம்)

– வினவு செய்தியாளர்.