Thursday, April 17, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

-

rsyf

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

1937-ம் ஆண்டிலேயே, அன்று சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை கொல்லைப்புற வழியாக கைப்பற்றிய பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, 1937 ஏப்ரல் முதல் இந்தியை கட்டாய பாடமாக்கினார். இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கும் நோக்கத்துடன் தான் இந்தியை கட்டாய பாடமாக்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தார்.

பார்ப்பனராஜாஜிக்குபாடம் புகட்டிய முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தளமுத்து;

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்கொதித்தெழுந்த தமிழக மக்கள் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து வீறுகொண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சிறை சென்ற நடராசனும் (1939 சனவரி 15- ம் தேதி ), தாளமுத்துவும் (1939 மார்ச்-12 ம் தேதி) தியாகி ஆனார்கள். தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்த போராட்டத் தீயின் வலிமையால் ராஜகோபாலாச்சாரி பணிந்து இந்தித் திணிப்பு உத்தரவை திரும்பப் பெற்றார்.

இந்தியை கட்டாயமாக்குவதில் இருந்து அன்றைய காங்கிரசு அரசு தற்காலிகமாக பின்வாங்கியதேயொழிய, திட்டத்தைக் கைவிடவில்லை. 1965 சனவரி – 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவுசெய்தது.

1965 சனவரி-25; அரசைநிலைகுலையச்செய்த வீரம் செறிந்த மாணவர் போராட்டம்!

சென்னையில் கூடிய அனைத்துக் கல்லூரி மாணவர் போரட்டக் குழு அன்றைய நாளை துக்க நாளாக அறிவித்தது. இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து சனவரி 25-ம் தேதி மதுரையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டத் தீ சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டெறிந்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 55 நாட்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, ஆனால், போரட்டம் ஓயவில்லை. திமிறி எழுந்த மாணவர்களை ஒடுக்க இந்திய ராணுவம் வந்து கொலை வெறியாட்டம் போட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவமே இறங்கியது இதுவே முதல் தடவையாகும். திருச்சி மாவட்டம் கீழப்பழவூர் சின்னசாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் என வீரமிக்க மாணவர்கள், இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55 நாட்கள் நீடித்த மாணவர் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

இது வெறும் இந்தித் திணிப்பு அல்ல -நாட்டை வருண, சாதி – பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் சதி!

அவ்வப்போது பின்வாங்கிய ஆரிய – பார்ப்பன கூட்டம் என்றைக்குமே இந்தியை மட்டும் தனியாக திணிக்க முயன்றதில்லை. நாட்டை ஆரிய பார்ப்பன – சமஸ்கிருதமயமாக்குவதற்கான ஒரு முகாந்திரமாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. 1937-ல் ராஜாஜி தொடங்கி, பக்தவச்சலம், இன்று மோடி என அனைவரின் நோக்கமும் இதுதான்.

இந்துமதவெறி பாசிஸ்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு சமூக வலைதளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து இந்துத்துவா வருணாசிரம – சாதி – தீண்மையைக் கொள்கைகளை புகுத்த முயன்றது. இவை வெறும் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்ல. பல் தேசிய இனம், மொழி, பண்பாடு கொண்ட நாட்டில் இவற்றையெல்லாம் அழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் ஆரிய – பார்ப்பன கும்பலின் நீண்டநாள் கனவான அகண்ட பாரதத்தை உருவாக்குவது, சமஸ்கிருதமயமாக்குவது, பார்ப்பனியமயக்குவது என்ற திட்டத்தின் பகுதிகள் தாம் இவை.

இன்று நேற்றல்ல, ஆரிய – பார்ப்பன கூட்டம் கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மீது ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத ஆதிக்க பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தியது, இன்று மீண்டும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் இரண்டாவது முறையாக படையெடுத்து வருகிறது.

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்பதைவிட பார்ப்பன (இந்து) மதத்தின் கொலைக்கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அது எப்பொழுதுமே ஆளும் வர்க்கங்களான டாடா, அம்பானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் ஆதிக்க கருவியாகத்தான் இருந்து வருகிறது. பிற்போக்குத்தனத்தை – மூடத்தனத்தை, வேத, வைதீக, புராண கட்டுக் கதைகளை போதிக்கும், சனாதன வருணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தும், தீண்டாமையை அரங்கேற்றும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்யத் தூண்டும், நியாயப்படுத்தும் பகவத் கீதையையும், மனுதர்மத்தையும் வேதநூல்களாக கொண்டதுதான் சமஸ்கிருத மொழியின் பண்பாடு.

வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத -இந்தி எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

ஆனால், அன்றும், இன்றும் ஆரிய – பார்ப்பன கூட்டத்திற்கு சவாலாக இருப்பது தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்பு பாரம்பரியம்தான். ஆரியத்தை எதிர்த்துப் போராடி இன்றளவும் அழியாமல் புகழோடு நிற்பது நமது தமிழ் மொழியும், பண்பாடும்தான்.

சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைக் உயர்த்திப் பிடித்த, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது தமிழ் பண்பாடு.

இத்தகைய தமிழ் மொழியை, பண்பாட்டை போர்வாளாக ஏந்தித்தான் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை வெட்டி வீழ்த்த முடியும். இதை சாதிக்க மாணவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். 1937 லும், 1965 களிலும் தமிழ்மொழி, இனம் காக்க போராட்டக் களம் கண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்! வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத – இந்தி, வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

2015 சனவரி-25

தமிழ்நாட்டு மாணவர்களின்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!

சென்னை நிகழ்ச்சி நிரல்:

சனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவுநாள்
அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து – நினைவேந்தல் கூட்டம்:
இடம்; மூலக்கொத்தரம், தியாகி நடராசன் நினைவிடம்.
சனவரி – 15, மாலை 5.00 மணி.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம்
சனவரி – 25, மாலை- 6 மணி
இடம்: கோடம்பாக்கம்,சென்னை.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்