Thursday, April 17, 2025
முகப்புசெய்திமனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

-

28 ஆண்டுகள் போராடி எஸ்பி.பிரேம்குமாரை வீழ்த்திய மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு!

nallakaman-passed-away-419-1-2016 அன்று அதிகாலை 5 மணியளவில் அய்யா நல்லகாமன் அவர்கள் மதுரை மாவட்டம், வாடிபட்டியில் உள்ள அவர் இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. அவர் மனைவி சீனியம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். அவருக்கு நான்கு மகன்கள்.

அய்யா நல்லகாமன் மக்கள் உரிமை பாது காப்பு மையம் மதுரை மாவட்ட கிளையின் தலைவராக இருந்து வந்தார். எமது அனைத்துப் போராட்டங்களுக்கும், மாநாடு, அரங்குக் கூட்டம் என அனைத்திற்கும் நேரம் தவறாமல் வருவார். வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக எளிதாகப் பழகி ஈர்க்கக் கூடியவர். சாதி,மத வேறுபாடுகளை புறந்தள்ளி முற்போக்கு சிந்தனையில் இணைத்துக் கொண்டவர். தனது குடும்பத்தில் சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தவர். மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை கிளை, பிறகு உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களில் அய்யா நல்லகாமனோடு பழகிய எங்களுக்கு அவரது நினைவுகள் மறக்க முடியாதவை. அவரது வழக்கின் சம்பவங்களை பல நூறு முறை படித்ததால் நாங்களே சொந்த முறையில் சித்ரவதைக்கு உள்ளானது போல் உணர்ந்துள்ளோம். அது என்ன வழக்கு?

nallakamanகடந்த 1982 –ம் ஆண்டு வீடு காலி செய்வது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நல்லகாமன், அவர் மனைவி, மகன் அனைவரையும் தாக்கிய பிரேம்குமார் எனும் காவல் துறை துணை ஆய்வாளர் பின்பு அடித்து,சங்கிலியால் கட்டி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக இழுத்துச் சென்று பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தார். இதற்கு எதிராக உள்ளுர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை 2010-ல் இறுதித் தீர்ப்பு வரும் வரை போராடியிருக்கிறார் அய்யா நல்லகாமன். 2001 முதல் ம.உபா.மையம் நல்லகாமனோடு இணைந்து வழக்கை எதிர் கொண்டது. அதன்பின் தமிழகத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் நல்லகாமன் வழக்கு தவிர்க்க முடியாத வழக்காக மாறியது. 2007-ல் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பால் எஸ்பி. பிரேம் குமார் மற்றும் நான்கு போலீசார் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 28 ஆண்டு காலம் அவர் போராடியதை சுருக்கமாக இவ்வாறு கூறலாம்.

அநீதிக்குத் தலை வணங்காத அதிகாரத் திமிருக்கு அடிபணியாத நெஞ்சுரம் கொண்ட மனிதர் அவர். பிரேம் குமார் காவல் துணை ஆய்வாளராக இருந்தது முதல் எஸ்.பி. யாக சங்கராச்சாரியை கைது செய்து ஜெயா ஆட்சியில் உச்சத்தில் இருந்தது வரையிலும்; என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என பத்திரிகைகள் பிரேம் குமாரைப் பற்றி பாராட்டி எழுதிய போதும் சற்றும் கலங்காதவர் அய்யா நல்லகாமன்.

அப்பாவி மக்கள் போலீசால் தாக்கப்படுவதொன்றும் அதிசயமில்லை. ஆனால் அவ்வாறு தாக்கப்பட்டவர்கள் போலீசுக்கு எதிராகப் போராடுவது அதிசயம்-அதிலும் மனித உரிமை அமைப்புகள், கட்சிகள் போன்ற யாருடைய ஆதரவுமின்றி தன்னந்தனியாக ஒரு மனிதன் போலீசை எதிர்த்து நின்று இவ்வளவு ஆண்டுகளாகப் போராடுவது பேரதிசயம்.

nallakaman-passed-away-1பல லட்சம் ரூபாய் செலவு, ஓயாத அலைச்சல் என இழுத்தடிக்கப்படுவதால் தோன்றும் மன உளைச்சல், சலிப்பு, குடும்பப் பிரச்சனைகள், மனைவியின் மரணம், வேண்டாம்ப்பா விட்டு விடு என்று நண்பர்கள் கூறும் அறிவுரை, வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதற்கு தரகர்கள் நடத்திய பேரம், ஆசை வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் ஆகிய அனைத்தையும் மீறி அய்யா நல்லகாமன் நடத்திய போராட்டம் அரிதினும் அரிதான ஒன்று.

2004 –ல் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியைக் கைது செய்தார் பிரேம் குமார். பி.ஜே.பி, இந்து முன்னணி, போன்ற மதவாத அமைப்புகள் நல்ல காமன் வழக்கை உதாரணமாகக் காட்டி மனித உரிமை மீறல் குற்றம் புரிந்தவர் அவர் விசாரணை அதிகாரியாக இருக்க கூடாது மாற்ற வேண்டும் எனக் கூச்சலிட்டனர். அய்யா நல்லகாமன் ம.க.இ.க, ம.உ.பா.மையத்தோடு இணைந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், “என்னுடைய போராட்டத்தின் பலனை மதவாத அமைப்புகள் பயன்படுத்தக் கூடாது. காவல் நிலைய சித்ரவதைகள், என்கவுண்டர் கொலைகளை ஆதரிப்பதோடு அனைவரும் சமமல்ல என்ற கொள்கை உடைய காவி அமைப்புகள் நீண்ட காலமாக நான் நடத்தி வந்த போராட்டத்தைப் பயன்படுத்தத் தகுதியற்றவை” என அறிவித்தார். வழக்கை நாங்கள் நடத்தித் தருகிறோம் என அணுகிய மதவாத அமைப்பின் பிரதிநிதிகளை புறக்கணித்தார். எடுத்து கொண்ட லட்சியத்திற்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் இறுதி வரை வாழ்ந்து மறைந்தார்.

nallakaman-passed-away-3நல்லகாமன் மகனிடம் அவரது இறப்பு பற்றி விசாரித்த போது “பிரேம் குமார் உயிரோடு இருந்திருந்தால், வழக்கு இன்னும் முடியாமல் நடந்து கொண்டிருந்தால், இன்னும் பல ஆண்டுகள் அதே துடிப்போடு இருந்திருப்பார். அவரது லட்சியம் முடிந்ததால் வாழ்வை முடித்துக் கொண்டார்” என்றார்.

எத்தகைய அநீதிகள், படுகொலைகள் நடந்தாலும் சீக்கிரம் மறந்து, உணர்வுகள் மரத்து, நாயினும் கீழாகச் சகித்துக் கொண்டு போகும் இந்த நூற்றாண்டில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம் ஆகும்.

அய்யா நல்லகாமன் மறைவையொட்டி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் 19-01-2016-ல் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ம.உ.பா.மைய மதுரை மாவட்டச் செயலர் தலைமை உரை நிகழ்த்தினார். ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், ஆசிரியர் பாலு, வி.வி.மு தோழர் வீரணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் உரை நிகழ்த்தினர். மக இக, வி.வி.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள் கலந்து கொண்டனர். 20-01-2016 அன்று அய்யா நல்லகாமன் உடல் அடக்கம் நடந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம்.9443471003