Thursday, April 17, 2025
முகப்புசெய்திமக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை

மக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை

-

குடி கெடுக்கும் அரசுக்கு குடியரசு ஒரு கேடா? – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் – இந்த வார்த்தையை பிழையாக எழுதினால் கூட ஜெயலலிதா அரசினால் பொறுத்துக்கொள்ள முடியாது போல. 25-01-2016 அன்று காலை 11 மணிக்கு வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள கடை எண் 173 டாஸ்மாக் கடையை முற்றுகையிடப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்ததிலிருந்து தன் கடமையை செய்யத் துவங்கிவிட்டது போலிசு. கடையின் வாசலை சுற்றி தடுப்புகளை பலமாக அமைத்து கடைக்கு முன்பாக சுமார் 200 போலிசாரை குவித்து வைத்தது. அதுவும் போதாதென வண்டி வண்டியாக போலீசார் வந்து குவிந்த வண்ணமிருந்தனர். இது சாலை வழியாக போகும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஏன் கடைக்கு வரும் குடிமகன்களுக்கே பீதியை உருவாக்கியிருந்தது. இருப்பினும் குடிமகன்களுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அல்லாமல் ஊறுகாய் வாங்கும் பொட்டிக்கடைக்கும் பாதுகாப்பை பலப்படுத்தி கடமை தவறாமல் பணிபுரிந்தது போலிசு.

shutdown-tasmac-waltax-road-1அறிவித்தபடி சரியாக 11 மணி அளவில் தோழர் விசாலாட்சி தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் டாஸ்மாக் எதிர்ப்பு முழக்கங்கள், தட்டிகளுடன் வந்து சேர்ந்தனர். ஒரு தோழருக்கு பத்து போலிசு வீதமிருந்த போலிசார் தோழர்களை கடைக்கருகில் நெருங்கவிடாமல் சுற்றி வளைத்தனர். பின்னர் தோழர்களை துருவி ஆராயத்துவங்கிய போலீசாரின் மோப்பசக்திக்கு பலன் கிடைத்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடை மீது வீசுவதற்காக தோழர்கள் கொண்டு வந்திருந்த மாட்டுச் சாணியை கண்டறிந்த போலீசார் அந்த பயங்கரமான ஆயுதத்தை கடும் போராட்டத்திற்கிடையில் கைப்பற்றினர். அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே நிம்மதி பெருமுச்சு விட்டனர்.

shutdown-tasmac-waltax-road-4“போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட திரண்டு வாரீர்” என்ற தலைப்பில் மக்களை டாஸ்மாக்கிற்கெதிரான போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். “குடிகெடுக்கும் அரசுக்கு குடியரசு ஒரு கேடா?” என்று தோழர்கள் எழுப்பிய முழக்கம் மக்களை வெகுவாய் கவர்ந்தது. சரியான நேரத்திற்கான முழக்கமாகவும் அமைந்திருந்தது.

shutdown-tasmac-waltax-road-3பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தோழர் விசாலட்சி, “நாள்தோறும் டாஸ்மாக்கினால் தமிழக மக்கள் கடும் அல்லல்பட்டு வருகின்றனர். பெரும்பான்மை மக்களுக்கெதிரான இந்த அராஜகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அரசுக்கட்டமைப்பை நம்பி தீர்வில்லாமல் போய்விட்டது” என்றார். மேலும், சட்டசபையில் சாராயத்துறை அமைச்சர் நத்தம் விசுவாதன் டாஸ்மாக்கை மூட முடியாது என சொன்னதை சுட்டிக்காட்டி மக்கள் நாமே கடையை இழுத்துமூடவேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

பின்னர் தோழர்கள் முழக்கமிட்டவாறே தள்ளுமுள்ளுக்கிடையில் கைதாகினர். அனைத்து தோழர்களையும் கைது செய்த பின்னரும் மாலை வரையில் கடையை விட்டு நகரமாட்டேன் என அங்கேயே கடைவிரித்துக் காவல் காத்துக்கொண்டுள்ளது போலீசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வினவு செய்தியாளர்கள், சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க