Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி !

இனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி !

-

‘கட்டாய ஹெல்மெட்’ புகழ் சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 25.07.2017 அன்று, மற்றுமொரு ‘வரலாற்றுச் சிறப்பு’ மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் வாரம் ஒரு முறையாவதும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு முறையாவதும், “வந்தே மாதரம்” பாடலைப் பாடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி முரளிதரன், பொதுநலன் கருதி ஒவ்வொரு குடிமகனும் இப்பாடலை கண்டிப்பாகப் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ‘ஜனநாயக’ நாட்டின் நீதிபதி அல்லவா, ஆகையால் நமக்குச் சில சலுகைகளும் வழங்குகிறார். இப்பாடலில் பெங்காலியிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள வார்த்தைகள் படிக்கக் கடினமாக இருந்தால் இப்பாடலை ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்து பாடிக் கொள்ளும் ஜனநாயக உரிமையையும் நமக்கு வழங்கியுள்ளார்.

மேலும் “இப்பாடல் இன்றைய இளைய சமுதாயத்தின் மத்தியில் தேசபக்தியை வளர்க்கும், என்றும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் இது போன்ற பாடல்கள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக நமது மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன” என்றும் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இத்தீர்ப்பையும் கூட, வந்தே மாதரம் பாடலாமா கூடாதா என்ற அக்கப்போருக்குத் தீர்ப்பாக வழங்கவில்லை. ஆசிரியர் பயிற்சித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ குறித்த கேள்வி ஒன்றிற்குத் தாம் அளித்த சரியான பதிலுக்கு மதிப்பெண் தராமல் விட்டதை எதிர்த்து ஒருவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்க்கும் போது கொசுறுக்காக இந்தக் கருவேப்பிலை-கொத்தமல்லி உத்தரவையும் வழங்கியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் ஒருபுறத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கித் தள்ளிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் மக்கள் விரோதத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறது.வங்கத்தைச் சேர்ந்த பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் என்னும் நாவலில்தான் வந்தே மாதரம் பாடல் வருகிறது. இந்நாவலில் முசுலீம் மன்னர்களுக்கு எதிரான ‘இந்து’ மக்களின் போராட்டம் நடக்கிறது. அதில் வரும் வந்தே மாதரம் உண்மையில் வங்க மாதாவை நினைத்து எழுதப்பட்டது. அதில் இந்து தெய்வங்களின் உருவம் மற்றும் பெயரில் நாடு போற்றப்படுகிறது. இதை காங்கிரசில் தேசபக்தி பாடலாக சேர்த்தார்கள். அப்போது விடுதலைப் போராட்டத்தில் இப்படி பார்ப்பனிய விழுமியங்களை கொண்டு வந்தது காங்கிரசுக் கட்சி.

எனவே இந்த உருவ வழிபாட்டுப் பாடலை அப்போதிருந்தே முஸ்லீம்கள் எதிர்த்து வருகிறார்கள். அதற்காகத்தான் இப்பாடலை தேசியகீதமாக அங்கீகரிக்க வேண்டும் என இந்துத்துவக் கும்பல் கூறிவருகிறது.  அதன் பொருட்டே  அனைவரும் ஏற்கும் வண்ணம் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மண’ பாடல் தேசிய கீதமாக நடைமுறையில் பாடப்படுகிறது.

இந்தப் பின்னணி தெரியாமலா நீதிபதி முரளிதரன் தீர்ப்பு வழங்கியிருப்பார் ? எனினும் நீதிபதி கிருபாகரனுக்கு அருகிலேயே சீட்டைப் போட்டு பேப்பர்களில் பெயர் வருவதற்காக இதைச் செய்தாரா ? அல்லது ஆர்.எஸ்.எஸ்., மோடிஜியின் கடைக்கண் பார்வைக்காக இதைச் செய்தாரா? என்பது நமக்குத் தெரியாது. இனி இதை வைத்து ஒரு மாதம் ஊடகங்களில் ஓட்டுவார்கள். வந்தே மாதரம் பாடாதவர்கள் தேச விரோதிகள், பாக்கிற்கு செல்லுங்கள் என்று பாஜக பாசிஸ்டுகள் ஊளையிடுவார்கள்.

சமூகப் பிரச்சினைகளில் பிடுங்க வேண்டிய ஆணிகள் எக்கச்சக்கமாக தேங்கியிருக்க, மக்களுக்குத் தேவையில்லாத ஆணிகளை மட்டும் தேடித் தேடிப் பிடுங்கும் வேலையை மட்டுமே எப்படி இந்த நீதிபதிகள் செய்கின்றனர்?

_____________

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?

இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக குரல் கொடுக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி