Monday, April 21, 2025
முகப்புசெய்திதண்ணி வந்தது தஞ்சாவூரூ - பாடல்!

தண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்!

-

வினவில் இன்று முதல் மக்கள் இசை!

மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன.

நடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அறிந்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக குறைந்தபட்சம் வாரம் ஒரு பாடலை இன்று முதல் வெளியிடுகிறோம். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளோம்.

இங்கு வெளியிடப்படும் பாடல் நான்காவது பாடல் தொகுப்பான “அடிமைச் சாசனம்” தொகுப்பில் இடம் பெற்றுள்ள முதல் பாடலாகும். காட் ஒப்பந்தமும், டங்கல் திட்டமும் ஆதிக்கத்தை துவங்கியிருந்த 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த இசை அன்னியர்களின் சுரண்டலை இயல்பாய் எதிர்க்கும் விவசாயிகளின் நினைவை மீட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள். பாடல் வரிகளும் உங்கள் வசதிக்காக கீழே இடம்பெற்றுள்ளது.

அடிமைச்சாசனம் பாடல் தொகுப்பிற்கான முன்னுரையுடன் முதல் பாடலை நீங்கள் கேட்கலாம்.

00.00 – 04.25 – அறிமுகம் , 04-26 – 08.04 – பாடல்

தண்ணி வந்தது தஞ்சாவூரூ

ஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..

ஏ….ஓடையில தண்ணி வந்தா…
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….
வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
பாலுக் கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டுறங்கும்…
(ஏ தண்ணி..)

ஏ…பொன்னுமணி நெல் வெளையும்…
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் நூறு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….
கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…
(ஏ தண்ணி..)

பொன்மலையா போர் உசரும்…
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…
மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…
(ஏ தண்ணி..)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்