Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்புத்தகக் கண்காட்சியில் " துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்" நூல் அறிமுகம்

புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம்

-

நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்”

புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00

நூலிலிருந்து:

vote-012“மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை – பகையுணர்வு, மவுனம்.

புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்   வேலை என்பது அவர்களுடைய அபிப்ராயம். பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய அபிப்ராயம் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி –  என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில்தான் துரோகிகள் பெருகுகிறார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும் முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.

இவையெல்லாம் நன்னெறி போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் – நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்து கொள்ளமுடியாத குழப்பங்கள்.. இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரெனத் தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்