Wednesday, April 16, 2025
முகப்புசெய்திதிருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!

திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!

-

மகளிர் தினத்தில் பெரும்பாலான அமைப்புக்கள் இனிப்பு கொடுத்தும், பரிசு கொடுத்தும் சடங்காக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தையே பெண்களின் போராட்ட நாளாக கொண்டாடும் மரபே நமக்குத் தேவைப்படுகிறது.

மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத் தலைவர் தோழர்.நிர்மலா (தலைவர், பெ.வி.மு) பேசும்போது “மகளிர் தினம் 1857ல் பெண் தொழிலாளர்களின் போரட்டத்தால் உருவாகி, 1911ல் சோசலிச போராளி கிளாரா ஜெட்கினால் உலக அளவில் கடைபிடிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டது, இன்று மகளிர் அமைப்புகள் பெண் சுதந்திரம் எனும் பேரில் அரங்குகளில் கூத்தடிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது, ஆக இது ஒரு போரட்ட தினமே என்று பெ.வி.மு    அனுசரிப்பதை”விளக்கினார்.

மைய கலைக்குழு தோழர் அஜிதா பேசும் போது பெண்கள் இன்று போக பொருளாகவும், வியாபாரத்திற்க்கு விளம்பரமாகவும், கணவனின் தேவையை நிறைவேற்றும் எந்திரமாகவும் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டியும், பெண்கள் தமது மன கஷ்டங்களை தீர்க்க வாய்ப்பாக சாமியார்களிடம் சரணடைவது,  தம்மை இழப்பது என இருக்கும் நிலையை கடுமையாகச் சாடினார்.

சிறுமி சுபா, கல்வியில் தனியார்மயம் நுழைந்து ஏழைகளுக்கு கல்வியை மறுத்துள்ளது என குரல் கொடுத்தார்.ம.க.இ.க தோழர் ராஜா பேசும் போது, விலைவாசி உயர்வின் தாக்கம் பெண்களை அதிகளவில் தாக்குவதும், அதற்கெதிரான போராட்டம் கட்டியமைக்க வேண்டியுள்ளதையும்,
இன்று காவல்துறையின் பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படுவதற்க்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை என்பதையும், இன்று அம்பலமாகி சந்தி சிரிக்கும் சாமியார்களின் அயோக்கியத்தனத்தையும் சாடினார்.

மேலும் இன்று மறுகாலனிய தாக்குதலால் விலைவாசி,வேலையிழப்பு, விவசாயம் நசிவு போன்ற கொடுந்தாக்கத்தை மக்கள் சந்திக்கும் வேளையில், பழங்குடி மக்களின் போராட்டம் மண்னைக்காக்க போர்க் குணத்துடன் நடப்பதை படிப்பினையாக எடுத்து நாமும் போராட வேண்டும், பெண்களின் உரிமைக்கான போராட்ட தினமே இது என்றார்.

பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது பங்கேற்றனர். மையக்கலைக்குழு தோழர்களின் துயரம் பருப்பு நாடகம்,பாடல்கள் கூடிநின்ற மக்களுக்கு உணர்வூட்டியது.

_______________________________

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி
_______________________________