Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! 'கல்வி வள்ளலின்' ரவுடித்தனம் !

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

-

jepeyar

எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு. அதிலொன்று புனித ஜோசப் பொறியியல் கல்லூரி.

இக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் விவேக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். விடுதியில் தங்கிப் படிக்கும் விவேக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுக்கான கணினி செய்முறைத் தேர்வின் போது நண்பனது பாஸ்வோர்டை பயன்படுத்தி லாஃக் இன் செய்தாரென குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரை செமஸ்டர் தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்த நிர்வாகம் இது தொடர்பாக கல்லூரி இயக்குநரை சந்திக்குமாறு உத்திரவிட்டது. அதன்படி இயக்குநர் வாசலில் மூன்று முழுநாட்கள் நின்றபடியே காத்துக் கிடந்தார் விவேக். ஆயினும் இயக்குநர் இவரை வேண்டுமென்றே சந்திக்கவில்லை.

இதனால் இரண்டு செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாமல் போயிற்று. அடுத்து வரும் செமஸ்டர் தேர்வும் எழுத முடியாவிட்டால் என்ன செய்வது என அதிர்ச்சியில் உறைந்து போன விவேக் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் படிக்கும் மற்ற மாணவர்களெல்லாம் தேர்வு எழுதிவிட்டு வருவதைப் பார்த்து தனது எதிர்காலத்தை எண்ணி மனமுடைந்து போன விவேக் இளவயதில் இந்த அவலமான முடிவை மேற்கொண்டுவிட்டார்.

கல்லூரி நிர்வாகத்தின் அப்பட்டமான மிரட்டலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கொதித்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் பத்தாம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவித்துவிட்டு விடுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது.

தனது சாவுக்கு முந்தைய கடிதத்தில் விவேக் தனக்காக தனது பெற்றோர் அளித்துள்ள நன்கொடை பணத்தை கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கவேண்டுமெனவும், அந்தப் பணத்தை வைத்து தனது தம்பியின் காது அறுவை சிகிச்சை நடக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மொத்த விசயங்களை ஜேப்பியாருக்கு ஆதரவாக செயல்படும் போலீசு இதுவரை வெளியிடவில்லை.

முதலில் விவேக் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு ஆதாரமில்லை. மேலும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் செய்முறைத் தேர்வு என்பது கடனுக்காக நடத்தப்படும் சடங்குதான். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது வல்லமையைக் காட்டுவதற்கு இந்த தேர்வை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஒருவேளை விவேக் தவறு செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக அவரை பருவத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து நீக்கியது நிச்சயமாக மிகக் கடினமான தண்டனைதான். அதற்காக இயக்குநரை சந்தித்து விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவரை சில நாட்கள் சிலை போல நிற்க வைத்து ரசித்தது நிர்வாகத்தின் அடக்குமுறைத் திமிரைக் காட்டுவதாகவே உள்ளது.

இத்தகைய தண்டனைகள் பள்ளிப்பருவத்தில் நடப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா சுயநிதிக்கல்லூரிகளிலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னோடி, இக்கல்லூரிகளது கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜேப்பியார்தான். சாராய ரவுடியாக கொடிகட்டிப் பறந்த இந்த மாவீரர் தனது கல்லூரிகளின் தர்பாரை இப்படித்தான் ரவுடித்தனமாக ஆட்சி நடத்துகிறார். இங்கே மாணவர்கள் தவறு செய்தால் முக்கியமாக நிர்வாகத்திற்கு எதிராக முனகினால் கூட கடுமையான தண்டனை தரப்படும். ஜேப்பியார் குழும கல்லூரிகளை அவரது குடும்பத்தினர்தான் ஆண்டு வருகிறார்கள். எல்லோரும் ஜேப்பியாரின் அவதாரங்கள்தான்.

மேலும் தண்டனை என்ற பெயரில் விடுதியிலிருக்கும் மாணவர்களுக்கு எல்லாப் பராமரிப்பு வேலைகளும் – கழிப்பறையை சுத்தம் செய்வது உட்பட – தரப்படும். நிர்வாகத்தோடு முரண்படும் மாணவர்கள் அலுவலக வாயிலேயே தவம் கிடக்க வேண்டும். இப்படி பல இலட்சம் ரூபாயை நன்கொடையாக அழுதுவிட்டு அல்லல்படும் மாணவர்களது அடிமைகளைப் போன்ற உளவியல் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

ஜேப்பியார் குழும கல்லூரிகளிலேயே அதிக நன்கொடை பெறப்படும் கல்லூரி புனித ஜோசப் கல்லூரிதான். அதிலும் பிரிவுக்கேற்றபடி நன்கொடை மாறுபடும். இங்கு ஒரு மாணவனிடம் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொள்ளையடிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் சித்தப்பா இக்கல்லூரியில் Placement Officer ஆக பணிபுரிகிறார் என்பதால் விவேக் பத்து இலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கக்கூடும்.

ஏற்கனவே ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு மாணவர், அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என முக்கியமாக கோர்ஸ் மறுக்கப்பட்டு அதற்காக அவர் தனது நன்கொடையை திருப்பிக் கேட்டு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது வயிற்று வலிக்காக நடந்த தற்கொலை என நிர்வாகம் கதையளந்தது. இதுதான் ஜேப்பியாரின் தர்பார்.

(மாணவர் விவேக்கின் தற்கொலைக்கு காரணமான ஜேப்பியாரை கைது செய்ய வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல்வேறு கல்லூரிகளில் பிரச்சாரம் செய்து மாணவர்களை அணிதிரட்டி வருகிறது. மேற்க்கண்ட தகவல்கள் இவ்வமைப்பின் தோழர்கள் எம்மிடம் தெரிவித்தவை )

______________________

மாணவர்களை விட அதிகமாகவும், இழிவாகவும் நடத்தப்பட்ட இக்கல்லூரிகளின் ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சேர்ந்து தமது சுயமரியாதையையும், உரிமைகளையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் ஜேப்பியாரின் திமிரை பெருமளவுக்கு அடக்கியது. மாணவர்கள் அந்த போராட்ட வரலாற்றை தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இது தொடர்பாக புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்