இந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுதில்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரசின் பிரமுகருமான மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“காமன்வெல் போட்டிகளுக்கு மழை இடையூறு வளைவித்து வருவது குறிதது மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். தீய சக்திகள்தான் இந்தப் போட்டிகளை நடத்தும். இப்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என வரிசையாக நடத்தத் துடிப்பார்கள். இந்தியா போன்றதொரு நாடு, விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது வீண்” என்கிறார் மணிசங்கர் அய்யர்.
இதை ஏனைய காங்கிரசு பிரமுகர்களும், பாரதிய ஜனதாவும், ஊடகங்களும் கண்டித்திருக்கின்றன. அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி கண்டித்துள்ளார்.

மணிசங்கர் அய்யர் யார், அவரது பின்னணி என்ன, இதைச் சொல்ல அவருக்கு தகுதியிருக்கிறதா என்பதெல்லாம் இருக்கட்டும். ராஜீவ் காலத்து காங்கிரசு பெருச்சாளிதான் என்பதும் உண்மைதான். ஏதோ கோஷ்டி மோதலுக்காகவோ இல்லை உண்மையாகவோ அவர் இதை சொல்லியிருக்கட்டும். ஆனால் அவர் சொன்னதில் என்ன தவறிருக்கிறது?
பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் நாட்டில் 35,000 கோடி ரூபாய் செலவழித்து ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்துவது வக்கிரம் இல்லையா? இந்த போட்டியை நடத்துவதில் இந்தியாவுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? இங்கிலாந்தின் காலனியாக இருந்த நாடுகள் இருக்கும் அமைப்புதான் காமன்வெல்த். இதன் தலைவரால இங்கிலாந்து இராணி இருக்கிறார். இத்தகைய பச்சையான காலனிய அடிமைத்தனத்தின் எச்ச சொச்சம்தான் காமன்வெல்த். இதில் இருப்பதே இழிவு எனும் போது இந்த எழவுக்காக நடக்கும் போட்டி இன்னும் அடிமைத்தனமில்லையா?
ஏழு — எட்டு ஆண்டுகளில் இந்தப் போட்டிக்காக தில்லியை அழகு படுத்துகிறேன் என்று என்ன அழிவையெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆரம்பத்தில் 1899 கோடி ரூபாய் என்று பட்ஜெட் போட்டு பிறகு பத்தாது என்று கூட்டி கூட்டி தற்போது 35,000 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. இது எவன் அப்பன் வீட்டு காசு? யாரைக் கேட்டு இந்த மக்கள் வரிப்பணத்தை இப்படி அழிக்கிறார்கள்? கரும்பலகை கூட இல்லாத கிராமத்துப் பள்ளிகள் இருக்கும் நாட்டில் இந்த போட்டிக்காக கட்டப்படும் அழகான கட்டிடங்கள் ஆபாசமில்லையா?
போட்டிக்காக சில வெள்ளையர்கள் தில்லிக்கு வருகின்றனர். அவர்களின் பார்வையில் நகரம் அழகாக ஜொலிக்க வேண்டுமென்று 50,000 குடும்பங்கள் கொண்ட சேரிப்பகுதிகள் இரக்கமின்றி தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. பல புகழ்பெற்ற மக்கள் சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன. யமுனை நதிக்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. வீரர்கள் தங்குவதற்காக புது கட்டிடங்கள் கொண்ட நகரமே எழுப்பப்பட்டு வருகிறது.
புதுதில்லியின் புறநகர்களில் வாழும் ஏழைகளுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி முதலானவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய பணம் வழுக்கிச் செல்லும் சாலைகளுக்கும், அலங்காரமான பாலங்களுக்கும் வகை தொகையின்றி பயன்படுகிறது. முதியோர் ஓய்வுத் திட்டம், தலித் மக்களின் சமூக மேம்பாட்டுத் திட்டம் முதனாவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளைக்கூட காமன்வெல்த் போட்டிக்காக சுட்டிருக்கின்றனர்.
இந்தப் போட்டிகளால் விளையாட்டு உட்பட எந்த மயிருக்கும் எள்ளளவு கூட பயனில்லை. இந்தியா முழுவதும் நகரங்களில் உள்ள சிறுவர்கள், தெருவோரங்களில்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மாணவர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் கூட இல்லாத நாட்டில் அல்ட்ரா மாடர்ன் தில்லி நகர விளையாட்டு மைதானம் அசிங்கமாக இல்லையா?
இதைச் சொன்னால் தேசவிரோதமா? மேட்டுக்குடி இந்தியர்களின் வல்லரசு வீம்புக் கனவிற்காக நடத்தப்படும் போட்டிக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் என்ன தொடர்பு? உண்மையால் இந்தப் போட்டியை நடத்துவதுதான் தேசவிரோதம். ஏழ்மையை மறைத்து இந்த ஷோவை நடத்திவிட்டால் இந்தியா வல்லரசாகி விடுமா? இன்று காமன்வெல்த் நடத்தியவர்கள் நாளை ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்று அது முடிவானால் எத்தனை இலட்சம் கோடிகளை செலவிட வேண்டும்? அப்படி செய்துதான் கிரீஸ் நாடு இன்று திவாலாகியிருக்கிறது.
அணுகுண்டு வெடிப்பு, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை போன்ற நாசகார ஆயுதங்களை வைத்து இந்தியப் பெருமையை பேசும் எருமைமாடுகள்தான் இந்த காமன்வெல்த் போட்டியை ஆதரிக்க முடியும். இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்று வெட்டிக்கனவை பேசுபவர்கள் எல்லாம் இத்தகைய மக்கள் விரோத திட்டங்களின் மூலமே அந்த கனவு நனவேற முடியும் என்பதை கவுரவம் பார்க்காமல் புரிந்து கொள்ள வேண்டும்.
மணிசங்கர் அய்யர் பேசியதை காங்கிரசு, பா.ஜ.க இரண்டும் ஒற்றுமையாக எதிர்க்கின்றன. ஊடகங்கள் தேசபக்தி பஜனை பாடுகின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடு கூட மறைந்து போகிறது என்பதைப் பார்க்கலாம்.
காமன்வெல்த் போட்டி என்பது இந்திய மக்களுககு எதிரானது. அதை ஆதரிப்பது அசிங்கமானது. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான வருமானத்தைக் கூட பெற முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தாமல் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கும் இந்த நவீன அரசர்களை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி. மேட்டுக்குடி தேசபக்தியை பெரும்பான்மை மக்களின் போராட்டம் பொசுக்கினால்தான் இந்தியா உலகமயச்சுரண்டலிலிருந்து விடுதலை பெற முடியும். இந்த போராட்டத்திற்கு அணிதிரளுபவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். மற்றவர்கள் பதர்கள் மட்டுமே!
தொடர்புடைய பாடல்
_______________________________________________