Tuesday, April 22, 2025
முகப்புசெய்தி//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

-

பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

இலங்கையில் உள்ள சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடு கோழிகளை பலி கொடுத்து வழிபாடு நடத்துவது பக்தர்களின் நம்பிக்கை. மூட நம்பிக்கையானாலும் மத நம்பிக்கை. ஆனால் “சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் உயிர்ப்பலிக் கொடுப்பதை அனுமதிக்க மாட்டோம் இனி இந்த நாட்டில் ஒரு மிருகத்தைக் கூட பலி கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று விலங்குகள் மீது பற்றும் பாசமும் கொண்ட பிக்குகள் கும்பலாகக் கிளம்பிவிட்டார்கள்.

கோவில் விழா நடக்குமா நடக்காதா? அப்படியே நடந்தாலும் பலி வழிபாடு உண்டா? கோவிலுக்கு ஆட்டை எடுத்துச் செல்லலாமா? என்றெல்லாம் பக்தர்கள் பயந்து போய் கிடக்கும் நிலையில், இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ண அடுத்த குண்டை தமிழ் மக்கள் மீது வீசுகிறார் “2600வது சம்புத்த ஜெயந்தி தொடர்பான சமய நிகழ்வுகள் பிரதேச செயலர் மட்டத்தில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு விகாரையை அமைப்பது தான் எமது இலக்கு. தற்போது நாடு முழுவதும் 10,400 பௌத்த விகாரைகள் உள்ளது. ”

ஆக ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது கொண்டாடிய பௌத்தத் துறவிகள் விலங்கள் பற்றி கவலைப்படுகிறார்கள். பெரும்பான்மை வாத நெருப்பின் போதையில் சிக்கியிருக்கும் சிங்கள இனவெறி பௌத்த பிக்குகள்தான் தமிழ் மக்களின் பலி வழிப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்த மிருக பலி வாழிபாட்டுக்கு இன்னொரு கும்பலும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அது வேறு யாருமல்ல யாழ்பாணத்தில் வெள்ளாளர்களாகப் பிறந்த பச்சைத் தமிழர்கள்தான்.

ஆமாம் பௌத்த புக்குகளுக்கு முன்னரே அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் என்கிற வெள்ளாள சாதி வெறியர் தான் முதன் முதலாக இந்த பலி வாழிபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர். அதன் பின்னர்தான் பௌத்த பிக்குகள் அதைப் பிடித்து கொண்டவர். மிருகங்களை பலியிட்டு வழிபாடு நடத்த நினைத்த பக்தர்களோ கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இல்லாத தடை இப்போது வந்தது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள். நானும் தமிழன் நீயும் தமிழன் நீயும் இந்து நானும் இந்து அப்புறம் ஏண்டா எங்க வழிப்பாட்டை தப்புங்கறே என்று கேட்கிற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலைய பக்தர்களுக்கு வெவ்வே காட்டி சிங்கள பிக்குகளோடு கைகோர்த்து நிற்கிறான் யாழ்பாணத்து வெள்ளாளர்கள்.

இந்தியாவில் மிருக பலி வழிபாட்டால் இந்துக்கள் மனது புண்படுகிறது என்கிற பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளுக்கும், உயிர்பலியால் பௌத்தம் களங்கப்படுகிறது என்று கதறுகிற இலங்கை பௌத்த பிக்குகளும், சிலாபக் கோவில் பலி வழிபாடு இந்து தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை ஒடுக்கப்பட்ட மக்களிடம் தமது ஆதிக்க பண்பாட்டை மதத்தின் பெயரால் திணிப்பதுதான்.

இந்தியாவில் சிறுபான்மை இசுலாமிய மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றுவரும் இந்துமதவெறி பாசிஸ்டுகளும், இலங்கையில் தமிழ் மக்களை கொன்று வரும் பௌத்த பேரினவாதவெறியர்களும் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்க்கிறார்கள். கொலைகாரர்களின் கருணை இப்படித்தான் வெளிப்படும் போலும்!
_____________________________________________________________

அணுவிபத்து இழப்பீடு மசோதா: பா.ஜ.க, காங்கிரசு கூட்டு!!

நேற்று பாராளுமன்றத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 1500 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்படமாட்டது என்ற செய்தி முக்கியமானது. ஆரம்பத்தில் இது 500 கோடி என்று இருந்தது பின்னர் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. எனினும் இந்த வரம்பு என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் பாதுகாப்பு வழங்கும் ஒன்றாகும். அணுவுலை விபத்தின் பரிமாணத்தை ஒப்பிட்டால் அதன் அழிவு மிகவும் விரிந்த ஒன்றாகும். அதனால் இதன் நிவாரணம் என்பது மதிப்பிற்கு அப்பாற்பட்டது. இனி விபத்து நடந்தால் அதன் விளைவை புறக்கணித்துவிட்டு ஆஃப்டரால் 1500 கோடி என்று அமெரிக்க நிறுவனங்கள் கையை விரித்துக் கொள்ளும்.

ஆரம்பத்தில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு என்பதாக சீன் போட்ட பாரதிய ஜனதா தற்போது ‘நாட்டில் நலனைக்’ கருத்தில் கொண்டு ஆதரித்திருக்கிறது. ஆக அமெரிக்க பஜனையில் காங்கிரசுக்கும், பா.ஜ.கவுக்கும் வேறுபாடு இல்லை என்பது நிரூபணமாயிருக்கிறது.
___________________________________________________________________________

ஏன் கொன்றாய்? ‘நடத்தை சரியில்லை’!!

மதுரையைச் சேர்ந்த 48 வயது ரங்கசாமி என்பவர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மகள் மாரிச்செல்வியை கொன்றிருக்கிறார். அந்த 17வயது பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பின்னர் விசம் கொடுத்து கொன்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவளது உயிர் பிரிந்தது.

மாரிச்செல்வி அவளது தாய்மாமன் மோகனுக்கு திருமணம் செய்யப்பட்டிருந்தாள். கணவர் வெளிநாடு வேலைக்கு சென்ற பிறகு பெற்றோர் வீட்டில்  இருந்த மாரிச்செல்வியை தனது தங்கை மகனுக்கு கட்டிக் கொடுப்பது நடக்காததால் அவள் மீது ரங்கசாமி வெறுப்பு கொண்டிருந்தார்.

இந்தக் கொலை எதனால் நடந்திருக்கிறது? தினசரிகள் மற்றும் ரங்கசாமியின் கூற்றுப்படி மாரிச்செல்வி நடத்தை கெட்டவள், பகுதியில் பல இளைஞரோடு தொடர்பு உடையவள். இதற்கு ஆதாரம்? எதுவும் கிடையாது. அவள் யதார்த்தமாக தெரு இளைஞர்களோடு பேசியதே ரங்கசாமிக்கு பொறுக்கவில்லை. முக்கியமாக அவளது தாய் இந்தக் குற்றச்சாட்டை கூறவில்லை. பெற்றோர் வீட்டிலிருந்தபடியே ஒரு பெண் மற்றவர்களோடு உறவு வைத்துக் கொள்வது சாத்தியமே இல்லை. அப்படி இருந்திருந்தால் உரிய ஆதாரங்களோடு அவளை வீட்டிலிருந்து வெளியேற்றிருக்கலாமே? இப்படி கொலை செய்ய வேண்டிய வெறி எதற்கு?

ஒரு பெண்ணைத் தண்டிப்பதற்கு சமூகமும், முக்கியமாக ஆண்களும் கையிலெடுக்கும் ஒரே விசயம் அவள் நடத்தை கெட்டவள் என்பதுதான். இது மாரிச்செல்விக்கு மட்டுமல்ல நியாயமான காரணங்களோடு தனது கணவனை விவாகரத்து செய்யும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கும் அவப்பெயர்தான். ஆயினும் இந்த நடத்தை விவகாரத்தில் பெண்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களோடு தொடர்புடைய ஆண்களை யாரும் தண்டிக்கப்படுவதில்லை. ஏனெனில் நடத்தையும், கௌரவமும் பெண்களுக்குரியதாக மட்டுமே இந்த ஆணாதிக்க சமூகத்தால் கருதப்படுகிறது.
__________________________________________________________________________

முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல…….

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தனது ஆதரவாளர்கள் 20,000 பேருடன் தி.மு.கவில் இணைந்தாதக தினசரிகள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திருப்பூரை ஒட்டிய பல ஊர் நிர்வாகிகள் இந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.நாகராஜ், சி.ஐ.டி.யு. மோட்டார் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மணி, டைஃபியின் மாநிலக்குழு உறுப்பினர் சேலூக்கண்ணா, மாநகர குழு உறுப்பினர் ஏ.பக்ரூதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.வேலூச்சாமி, ஆண்டிப்பாளயம் ஊராட்சி தலைவர் எஸ். மூர்த்தி, தொரவலூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் எம். சுப்புலட்சுமி, திருப்பூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.விஸ்வநாதன், பாரதி நகர் கிளைச் செயலாளர் கே.கண்ணன், புஷ்பா நகர் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கரோனா வெங்கடாசலம், கரோனா சாமிநாதன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கை மார்க்சிஸ்ட் அணி கட்சி மாறியிருக்கிறது.

கோவிந்தசாமி முதலாளிகளுக்காக தொழிலாளிகளின் நேரத்தை பத்து மணிநேரமாக்க முயன்றபோது பெட்டி வாங்கினார் என்று இப்போது கூறும் சி.பி.எம் கட்சி அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினார் என்பதற்காக கட்சிநீக்கம் செய்திருக்கிறது. கோவிந்தசாமியும் மாளிகை, முதலாளிகள் நட்பு என்று செட்டிலாகிவிட்டவர். அவர் தி.மு.கவில் இணைந்தது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் இத்தனை நிர்வாகிகள் இணைந்தது ஏன்?

இவர்கள் அனைவருக்கும் கட்சி கற்பித்த கொள்கை, வரலாறு, கடமை என்று எதுவுமே தெரியாதா? இல்லை அந்தக்கட்சியில் அப்படி ஒரு நடைமுறையே கிடையாதா? கம்யூனிசக் கொள்கையில் பயிலும் ஒருவன் இத்தனை இழிவாக நடப்பானா என்ன? ஆனால் சி.பி.எம்மில் நடக்கிறது. பாத்து தோழர்களே இப்ப போயஸ் தோட்டத்தோடு கூட்டணி வச்சிருக்கீங்க, சந்தடி சாக்கில் தோழர்கள் எல்லோரும் அம்மா கட்சியில் சங்கமம் ஆயிடப்போராங்க!
______________________________________________________________

அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍

தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அமெரிக்கா செல்வதற்காக விசா பெற சென்னை துணை தூதரகத்திற்கு வருகின்றனர். பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் வெளியில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நிழற்கூரைகள் அமைப்பது குறித்து அமெரிக்கக் துணைத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது.

இதன்படி, நிழற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை குறித்து அப்போது அமெரிக்க  அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக மேயர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார் ‍‍: தினமணி செய்தி

அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்காக அகற்றப்பட்ட  குடிசைவாழ் மக்கள் நடத்திய போராட்டமும் நேற்றுதான் நடந்தேறி இருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் மேயர் வழியாக துணை முதல்வருக்கு கொண்டு செல்லப்படாது. தூதரகத்தின் முன் வரிசையில் இருக்கும் நடுத்தர, மேல்தட்டு நடுத்தர மக்களின் ஓரிரு மணிநேரத் துன்பங்களை பொறுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கும் அரசு குடிசை வாழ் மக்களது வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் அப்புறப்படுத்துவதை அலட்சியமாக செய்துவருகிறது.

அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூடை. அய்யோ பாவங்களுக்கு புல்டோசர்!

_______________________________________________

செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________