ஆயத்த ஆடைகள் உருவாக்கத்தின் தொடக்கமென்பது நூல் உள்ளே வந்து இறங்குவதிலிருந்து தொடங்குகிறது. அதுவே பின்னலாடையாக மாற்றம் பெறுவதற்கு பின்னலகம் என்ற நிட்டிங் எந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. மார்பு அளவுகளைப் பொறுத்து தனித்தனியாக உள்ள எந்திரங்கள் மூலம் தேவைப்படும் அளவிற்கு துணியாக உருவாகின்றது. இப்போது அந்த துணி இரண்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். வெள்ளை என்றால் சலவை பட்டறை. பல நிற வண்ணமென்றால் சாயப்பட்டறைகள்.
வெள்ளையை மட்டும் உருவாக்கி கொடுப்பவர்களுக்கு எளிய மூதலீடுகள் போதுமானது.. வணணமாக்க ஐம்பது லட்சத்தில் தொடங்கி நூறு கோடி வரைக்கும் அவரவர் தகுதியைப் பொறுத்து உருவாக்கி வைத்துருப்பார்கள். 10 கிலோ துணி கொள்ளவு முதல் ஆயிரம் கிலோ வரைக்கும் எட்டு மணி நேரத்தில் விரும்பும் நிறமாக வெளியே தள்ளும் ராட்சச எந்திரங்கள் நவீன எந்திரங்கள் உண்டு. எந்திரங்களுக்கான முதலீடு தவிர தேவைப்படும் மற்ற வசதிகளுக்குத்தான் பணத்தை வாரி இறைக்க வேண்டும்.
கை படாத ரோஜாவாக பளபளவென்ற பட்டாடை போல அடித்து துவைத்து நிறமாக்கி உலர வைத்து வெளியே தள்ளும். வேண்டிய அளவுகளில் விதவிதமாய் ரகரகமாய் ஜொலிப்பாய் மடிப்பு கலையாத புத்தம் புது ரோஜா போல் வந்து சேரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நவீனம். ஆனால் அத்தனையும் வெளிநாட்டு மூளைகளின் நளினம். ஒரே கூரையின் கீழ் மொத்த வசதிகளையையும் வைத்திருப்பவர்கள் விடாத மழை என்றாலும் கவலைப்படாது கப்பலில் 365 நாளும் ஏற்றிக் கொண்டே இருக்க முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு என்றுமே சொங்கிப் போய்விடாது.
என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே. ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே? அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்.
நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பவரா? ஒரு பக்கவாட்டில் இந்த சாயப்பட்டறை குறித்து துணுக்கு செய்திகளாக படித்து இருக்க வாய்ப்புண்டு. திருப்பூரில் ஆயத்த ஏற்றுமதி தொழில் சூடு பிடிக்காமல் இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கலாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும். சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.
செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி. 70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச கொள்ளவு வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள். இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள். கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும்.
தண்ணீரில் நன்றாக மூழ்கி வந்து கொண்டிருக்கும் துணி தன்னுடன் வைத்திருக்கும் பஞ்சு போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை உதறித்தள்ளும். நனைந்த துணியில் பிற்பாடு ஊற்றப்படும் வெட்டிங் ஆயில் தான் சாயம் கலப்பதற்கு முன் செய்யப்படும் சடங்கு மந்திரம் போன்றது.
ஆனால் இந்த தொழிலுக்கு முக்கியத் தேவை தண்ணீர் வசதி. சிலருக்கு இயல்பாக நிறுவனங்களுக்குள் ஆழ் குழாய் வசதிகள் இருக்கும். வசதி இல்லாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நீருக்கு பக்கத்து ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்தது டேங்கர் லாரி கொண்டு வந்து சேர்க்கும். தொடக்கத்தில் வயல் விவசாயத்தை விட இந்த தண்ணீர் விற்று பணக்காரர் ஆனவர்கள் பலபேர்கள்.
ஆனால் இப்போது எல் அண்டு டி நிறுவனம் உள்ளே வந்து இதற்கென்று ஒப்பந்தம் எடுத்து மிகப் பெரிய தொழிலாக செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு லிட்டர் ரெண்டு பைசா என்று விற்றுக் கொண்டுருந்தவர்கள் இப்போது ஆறு பைசா வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது. பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.
சாய்பபட்டறைகளுக்குள் பெரிய மூதலீடுகளை போட்டு வராக்கடன்களை வசூலித்து தம் கட்ட வசதியிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும். இதுவே இந்த தொழில் தொடங்க போதுமானது. முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரைக்கும் தங்களுக்குள் இருக்கும் அனுபவம் மட்டுமே மிகப் பெரிய முதலீடு என்று நம்பி ஜெயித்தவர்கள். அதை வைத்துக் கொண்டு தான் சாதித்து மேலேறினார்கள்.
இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர்,திருவண்ணாமலை,இராமநாதபுரம், மதுரை, சிவகெங்கை, கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை உடைய இளைஞர்கள்..படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரைக்கும். மிகப் பெரிய ஆச்சரியம் கடைசி வரைக்கும் உடல் உழைப்பாளியாகவே இருந்து விடுவது தான். விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் சிலர் மேலேறி வருகிறார்கள். .
சாயமேற்ற வேண்டிய 20 கிலோ நனைந்த துணியை தூக்குவதற்கு சாதாரணமானவர்களுக்கு தனிப் பயிற்சி வேண்டும். ஆனால் நம் மக்கள் அட்டாகாசமாக தூக்கிக் கொண்டு விஜயகாந்த் கதையை பேசிக் கொண்டு நகர்ந்து கொண்டிருப்பார்கள். பார்க்கும் நமக்கு மூச்சுப் பிடிப்பு வந்து விடும்.
முதலாளிகளும் பெரிய படிப்பு படித்தவர்களோ, கெமிக்கல் இன்ஜினியரிங் அறிவு பெற்றவர்களோ அல்ல. ஒன்று ஏதோ ஒரு இடத்தில் பணிபுரிந்து இருப்பார்கள். அல்லது பார்த்துக் கொண்டு வந்து ஆசையில் தொடங்கியிருப்பார்கள். தொடக்கத்தில் உள்ளே வராத நவீனங்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அவரவருக்குண்டான அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது.
ஒவ்வொரு முதலாளிகளும் பெற்ற வெற்றிகள் அவர்களை பணக்காரர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. கல்லு பூமியெல்லாம் இவர்கள் கடைக்கண் பட்டு காசு கொழித்த பூமியாக மாறியது. ஆனால் விவசாய பூமிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த சமூகத்தின் முகவரியே இன்று மொத்தமாய் மாறி அலற வைத்து விட்டது.
ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோ என்பது மூன்று அல்லது நான்கு ஆடைகளை உருவாக்க உதவும். துணிகள் நிறமான பிறகு வெளியேற்றப்படும் அந்த நீர் என்பது மற்றொரு போபால் விஷ வாயுவுக்கு சமமானது. உப்பும், அமிலமும், காரத் தன்மையும் கலந்து சகிக்க முடியாத நாற்றத்துடன் பூமியில் கலக்க வைத்து விடுவார்கள்.
துணிகள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலவாணியைத் ஈட்டித் தந்தாலும் இதற்குப் பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு முதல் நரம்பு பிரச்சனைகள் வரைக்கும் உருவாக்கும். இன்று வந்துள்ள நவீனங்கள் முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை, சலவைப்பட்டறைக்கு தேவைப்படும் கொதிநீருக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காடுகளில் இருந்து விறகு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. டீஸல் போட்டு நீரை கொதிக்க வைக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் விறகு தான் வரப்பிரசாதம். சில நிறுவனங்கள் பயன்படுத்தும் இது போன்ற கொதிகலன்கள் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் உயர் அதிக அழுத்தம் உடையது. ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து வெடித்து சிதறினால் சுற்றிலும் உள்ள இடங்களை சர்வநாசமாக்கி விடும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வை பட்டபிறகு தான் இங்குள்ள சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஜுரம் வரத் தொடங்கியது. இது திருப்பூர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. கரூர், ஈரோடு வரைக்கும் பரந்து பட்டு இடையில் இருக்கும் அத்தனை விளைநிலங்களையும் பாழாக்கிய பெருமை இந்த சாயம் போன முதலாளிக்கேச் சேரும். தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டு ஓடி இன்று இங்குள்ள பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.
சாயப்பட்டறை முதலாளிகளின் கூட்டங்கள். ஏற்றுமதியாளர்களின் சங்கங்கள், எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்று மும்முனை போராட்டமாக முடிவே தெரியாமல் இன்று வரை போய்க் கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பபால் நீதிமன்றம் வரைக்கும் சென்று கடைசியில் டெல்லி உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்ற போதிலும் எந்த மாற்றமும் இல்லை. சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகளுக்கு அரசாங்க மானியம் வேண்டும். விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கணக்கு வேண்டும்.
திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
வைரமுத்து சொன்ன எட்டில் பிரித்த வாழ்க்கை போல் துணிகளை சாயமேற்ற எட்டு விதமாக அலசி துவைக்க இறுதியில் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.
துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு.
அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்பது ஒரு இயல்பான முறை. சற்று மேம்பட்ட நவீன வசதிகள் என்பது சாப்ட் புளோ, தொட்டிக்குள் திணிக்கப்பட்ட துணிகள் தண்ணீருடன் கலந்து உள்ளே வெளியே என்று குதியாட்டம் போடும். தற்போது வந்துள்ள நவீன உபகரணங்கள் என்பது கணினி வழியே கட்டுப்படுத்தி கனகச்சிதமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வண்ணத் துணியாக மாற்றிவிட முடியும்.
தொட்டியில் நீர் நிரப்பி துணியை நனைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்றி தண்ணீர் துணிகளில் நன்றாக ஊடுருவ வைக்கிறார்கள். பிறகு தான் வேதியல் சமாச்சரங்களை அளவோடு கலந்து விடுகிறார்கள். ஒவ்வொரு சாயமாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.
துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஒட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரி பார்த்துக் கொள்கிறார்கள். சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் ஈரத்தோடு சிரிக்கும்.
ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வெளியேற்றப்படுகின்றது. மீண்டும் புதிய தண்ணீர். ஒவ்வொரு முறை வெளியேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, குழாய் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. குழாய்கள் வழியே செல்லும் இந்த சாயத்தண்ணீர் அருகே உள்ள சாக்கடை வழியே சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலந்து கரூர் வரைக்கும் சென்றடைகின்றது. ஈரோடு என்றால் பவானி தாண்டி பயணிக்கும்..
பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்கமான பூமியில் மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இங்கு ஒவ்வொரு இடங்களிலும் அதிகம் உண்டு,
இந்த இடம் தான் இன்று வரையிலும் பல சாய நிறுவனங்களுக்கு பொக்கிஷம். கழிவு நீர் வெளியேற்ற எந்த வசதியும் செய்யாமல் இருக்கும் முதலாளிகள் நடு இரவில் டேங்கர் வண்டியில் சாயத் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி விட்டு காணாமல் போய் விடுவார்கள். அருகே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில் வாழ்ந்த உயிர்கள் செத்து மிதந்து கொண்டிருக்கும்.

அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், எதிர்ப்பு காட்டிய விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இன்று பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் என்று பல வசதிகள் வந்து உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் இந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். சுத்திகரித்த பிறகு உப்பில்லாத சாயமில்லாத தண்ணீராக பயன்படுத்த முடியும். ஆனால் செலவு பிடிக்கும் சமாச்சாரம். பின்பற்ற விரும்பாமல் கொள்ளை லாபம் வேண்டி இன்று வரைக்கும் பலரும் நடு இரவு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாதமானால் மாமூல். சென்னையில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவது மாதாந்திர அறிக்கை.
இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர். 1400 நிறுவனங்கள் சுறுசுறுப்பாக சாயமேற்றி சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். நல்ல அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ராக்கோழி போல திடீர் வருகை தந்து இன்று 700க்கும் குறைவான நிறுவனங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிலர் செலவு செய்ய முடியாமல் இழுத்து மூடி விட்டு சென்று விட்டனர். பலர் அதிகாரிகள் எப்போது எந்த பாதையில் வருவார்கள் என்று ஆட்கள் வைத்து தடம் கண்டு கொண்டு இருக்கின்றனர்.
கற்பனையில் கொண்டு வாருங்கள். உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ? இந்த சாய நீர் பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதையிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் கழிவுகள் அத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?
அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதுவே இன்று குறிப்பிட்ட சாயங்கள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற பன்னாட்டு சட்டதிட்டங்களால் ஸ்விஸ் முதல் ஜெர்மனி வரை அத்தனை நாடுகளிலும் இருந்து சாயங்கள் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது.
எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்சம் மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.
திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராதா என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் சாயமேற்றப்பட்ட ஆடைகளுக்கு வெயில் இருந்தால் தான் சிறப்பு. மழை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஈரமாக இருக்கும் ஆடைகளை உலர வைக்க காசு செலவழிக்க வேண்டும்.
மழை தொடர பல ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத்தொடங்கி பல சமயம் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும், மழை நிற்கும் போது திருப்பூரைச் சுற்றியுள்ள அத்தனை வயல்பிரதேச தண்ணீரும் ஒன்றாக ஓடி வந்து கால்வாயில் கலக்கும் போது நமக்கு அந்த கலங்கிய சாயத் தண்ணீர் பலவற்றையும் புரிய வைக்கும். சென்னையைப் போலவே திருப்பூரையும் மழை வந்து தான் ஒவ்வொரு முறையும் சுகாதாரப்படுத்தி விட்டுச் செல்கின்றது.
மொத்த நிறுவனங்களின் சாயக் கழிவுக்ளும் கடைசியில் சென்றடையும் இடம் ஓரத்துப் பாளையம் அணை தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக குளித்தலை வரைக்கும் சென்று விடும் போலிருக்கிறது.பல நாட்கள் காத்து இருந்து மழை பெய்ய, வந்து சேரும் நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட அத்தனையும் பாழாகிப் போய்விடுகின்றது..

ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு,சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதியில்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதைய நிலையை விரைவில் நாம் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது.
காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது..
பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமே முதல் குறி. உள்ளுரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும்படி தனியாகவே குட்டி உற்பத்திக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் விரும்பும் உற்பத்தியையும் தரத்தையும் கொடுக்கின்றார்கள்
ஆனால் உள்ளுரில் இருக்கும் எந்த பெரிய நிறுவனங்களும் இந்த சாயக்கழிவால் அடுத்து வருகின்ற தலைமுறையே அழியப் போகும் அவலத்தை செய்து கொண்டுருக்கின்றோம் என்பதை உணர்வதே இல்லை. டாலர் சிட்டியின் இலாபம் நீரின் சுத்தத்தை அழிக்கும் வில்லனாக உள்ளது. இங்கே ஒற்றுமையும் இல்லை. உரக்கச் சொல்ல தைரியமும் எவரிடமும் இல்லை,
___________________________________________________________
– ஜோதிஜி
___________________________________________________________