
தமிழ்நாடு,கடலூர்மாவட்டம்,பெண்ணாடம் பள்ளி மாணவர் பாரத்தை படுகொலை செய்தவர்களை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 20 அன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதன் பிறகும் பெண்ணாடம் போலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்தது.இதற்காக பெண்ணாடத்தில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு செப்- 09,10,11 ஆகிய மூன்று தினங்கள் நடைபயணம் செல்வதாக அறிவித்தது.இச்செய்தியை மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.இந்த நடைபயணத்திற்கு கடலூர் மாவட்ட போலிஸ் தடைவிதித்துவிட்டு, மீறி வந்தால் கைது செய்வோம் என மிரட்டியது.இதற்காக ஏராளமான போலிசையும் பெண்ணாடத்தில் குவித்தது.
பாரத்தின் பெற்றோரையும்,விவசாயிகள் விடுதலை முன்னணியையும் நடைபயணம் செல்ல அனுமதித்தால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே சட்டத்திற்கு புறம்பாக,ஜனநாயகத்திற்கு விரோதமாக தடைவிதித்தது.பிரச்சாரத்தை முடக்கும் போலீசின் அடாவடித்தனத்தை புரிந்துகொண்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை 11.10.2010 அன்று பெண்ணாடத்தில் நடத்த முடிவு செய்து, தனது பயணத்திட்டத்தை கிராம மக்களை நோக்கி திருப்பி, போலிசின் அடாவடித்தனத்துக்கு பதிலடி கொடுத்தது. அக்டோபர் 07,08,09,10 ஆகிய நான்கு நாட்களில் 15 கிராமங்களில் மக்கள் கலை இலக்கிய கழக மையக்கலை குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பிரச்சாரம் செய்தது.கொலைகாரர்களுக்கு அரசு,போலீசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் ஆதரவாக செயல்படுவதையும் கூலிஏழை விவசாயியான மாணவர் பாரத்திற்கு துரோகம் இழைப்பதையும் அம்பலப்படுத்தினர்.
மக்களிடமே நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். உழைக்கும் மக்களுக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற நக்சல்பரி புரட்சிகர அமைப்புகளே உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் உணர்ச்சிபூர்வமாகவும்,எழுச்சியுடனும் நடந்தது.
இப்பிரச்சாரத்தை கேட்டவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர். இப்படிகதறியவர்களின் கண்ணீரில் சொந்தம்,சாதி என்ற எந்த அடையாளமும் இல்லை. உழைப்பாளி என்ற அடையாளம் மட்டுமே பெருக்கெடுத்தது. “இவ்வழக்கில் போலீஸ் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றுகிறது. இதை முறியடிக்க நாம் வீதியில் இறங்கி போராடுவதோடு மட்டுமல்லாமல், நாமும் சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாம் உயர்நீதி மன்றமும் செல்ல வேண்டும். இப்படி செல்வதற்கு பாரத்தின் பெற்றோருக்கு வசதியில்லை.ஆண்டாண்டுகாலம் அழுதுபுரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர்கள் தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.இந்த வழக்கு நமக்கான வழக்கு,கொலையாளியிடம் பணம் உள்ளது.நம்மிடம் சனம் உள்ளது.வீட்டிற்கு ஒரு ரூபாய் தருவோம்” என்று தோழர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினர்.
இதைக்கேட்டதும் மக்கள் தாராளமாக நிதி அளித்தனர்.கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படும், காப்பாற்ற முனையும் போலீஸ்,அரசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மீது தமது வெஞ்சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர்.கொலையாளிகளுக்கு போலீஸ் தண்டனை வாங்கித்தராது,நாமே அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும்.அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கோபம் கொண்டனர்.
11.10.2010 அன்று காலையிலிருந்து மாலை வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆகியோர் உரையாற்றினர்.இவர்களின் பேச்சு அரசு,போலீசு,ஓட்டுக்கட்சிகளின் மீதான மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அதிலும் விடுதலை சிறுத்தைகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. ம.க.இ.க மையக்கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் அதை பற்ற வைத்தது.
“மக்கள் சமூக அக்கறையற்றவர்கள் சாதி,மதம்,சுயநலம் ஆகியவற்றில் மூழ்கி கிடப்பவர்கள், எப்போதுமே அநீதிக்கு வால் பிடிப்பவர்கள் இவர்களை திருத்தவே முடியாது”,என்றுக் கூறித்திரியும் மண்டை வீங்கிகளின் உளறல்களுக்கு ஆப்பறையும் வகையில் மக்கள் இப்போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
மக்கள் எப்போதுமே அநீதிக்கு எதிரானவர்கள் தான். மக்களை வழிநடத்துபவர்கள்தான் அவர்களை எப்போதுமே ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளனர். நக்சல்பரி புரட்சியாளர்கள் மக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள கட்டுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து,அவர்களை சமுக மாற்றத்திற்கு அணிதிரட்டுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.
“கொலைகாரர்களும்,கொலை செய்யப்பட்ட மாணவனும் ஒரே சாதியாயினும் மாணவன் பாரத் ஏழை சாதி. இதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ளது. நக்சல்பரி போராளிகளோ எல்லாசாதிகளிலும் உள்ள ஏழைகளின் பிரதிநிதி. அதனால் தான் மாணவன் பாரத்தின் கொலைக்கு நீதி கேட்டு போராடுகிறது”, என்று மகஇக மையகலைக்குழு தோழர்கள் கூறியதும், அதுவரை எதிரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பலர் பந்தலுக்குள்ளே வந்து அமர்ந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் மிக உயரிய நிகழ்வாகும்.
பெண்ணாடம் நக்சல்பரி புரட்சியாளர்களின் கோட்டை என்பது பழைய செய்தி மட்டுமல்ல,மீண்டும் இப்பூமி சிவக்கப் போவதை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இந்த தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடந்தது.
_______________________________________________________
– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்