Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்இது காதலா, கள்ளக்காதலா?

இது காதலா, கள்ளக்காதலா?

-

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.

அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை உறவு எந்த அளவுக்கு கசக்கிறதோ அந்த அளவுக்கு கள்ள உறவு வாசகருக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. கூடவே ஒரு ஆணின் தடையற்ற பாலுறவுப் பசி அல்லது வெறி இந்தச் செய்தியினூடாக வெளிப்படுகிறது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கள்ளகாதல் என்பது கணநேர மகிழ்ச்சி. இறுதியில் கொலையில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

இதுவும் செப்டம்பர் 24 இல் நக்கீரனில் வெளிவந்த ஒரு செய்திதான். சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது கணவன் ஆறுமுகத்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகிறாள்.

இதைப்பற்றி ஊர் என்ன சொல்கிறது? ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம்? புருஷன் மகா குடிகாரன். அதுவே ஆறுமுகத்தோட உயிரை எடுத்துடுச்சி. இப்ப இவளையும் போலீசு பிடிச்சுட்டு போயிடுச்சி”.

38 வயதில் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் பொன்னம்மாள் மினுக்கியவாறு இருந்ததை ஊர் வெளிப்படையாக ரசிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பெண் அழகிப்போட்டிக்கு தேவையான ஒப்பனை எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவளது சாதாரண அலங்காரமும் அழகும் ஊரின் கண்களை சுண்டி இழுக்கிறது. ஒரு பெண் நடத்தை சரியில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு ஊர் பயன்படுத்தும் முதல் வாதம் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள் என்பதுதான். மேலும் அந்த அழகை ‘ஊர்’ உள்ளுக்குள் இரசிப்பதும், வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும், முடியாத போது புரணி பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.

பொன்னம்மாளைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் உத்ரபதியின் வாக்குமூலம் இது: “என் புருஷன் குடிச்சுட்டு வந்து தானே கழுத்தைத் துண்டால் இறுக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாருனு சொல்லி அழுதாள். எங்களுக்கு இது சந்தேகம் தர விசாரிச்சப்போதான் நாராயணனோட இருந்த கள்ளக் காதல் உறவு தெரிய வந்தது. இவளுக்கு மகன் ஒண்ணு, மகள் ஒண்ணு இருந்து இருவருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சப்புறமும் இவள் கள்ளக்காதலை விடலை. இதை அவள் புருஷன் தட்டிக்கேட்கவும் கொன்னுருக்காள்”.

போலீசுக்கு வழக்கு முடிந்த நிம்மதி. குற்றவாளியைக் கண்டுபிடித்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்களின் பணிப் பதிவேட்டில் மதிப்புப்புள்ளிகள் ஏறும். பதவி உயர்வுக்குப் பயன்படும். மற்றபடி ஒரு பெண்ணின் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அடக்குமுறை எந்திரங்களின் ஈரமற்ற இதயங்களில் உயிருள்ள வாழ்க்கையின் வலியும், அது தோற்றுவிக்கும் அவலமும் கடுகளவு கூட இறங்குவதில்லை.

நெடுங்காலம் தன்னை சித்திரவதை செய்த பிரச்சனையிலிருந்து விடுதலையையும் ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதறியாத இறுக்கமும் கலந்த வெளிறிப் போன முகத்துடனும் காவல் நிலையத்தில் இருக்கும் பொன்னம்மாள் தனது கருத்தை நிருபரிடம் கூறுகிறாள்.

அவளது முதல் கேள்வியே ” ஊரே கள்ளக்காதல்னு சொல்லி திட்டுறாங்க. காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? ”
பதினைந்து வயதில் ஆறுமுகத்தை திருமணம் செய்த பொன்னம்மாவுக்கு இன்று ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. முப்பத்தி எட்டு வயதில் பாட்டி ஸ்தானத்தை அடைந்து வட்ட பொன்னம்மா இத்தனையாண்டுகளாக தனது குடிகார கணவனால் தினமும் கொடுமைகளேயே சந்தித்திருக்கிறாள். மரம் ஏறி பிழைக்கும் ஆறுமுகம் 50 ரூபாய் கிடைத்தாலும், 500 ரூபாய் கிடைத்தாலும் குடித்தே அழித்து விடுவான். குடித்து விட்டு வீட்டுக்குவரும் அவன் பொன்னம்மாளை நிர்வாணமாக்கி கண்ட இடங்களில் அடிப்பதும், மிருகம் போல வல்லுறவு வைத்துக்கொள்வதும் தினசரி வாடிக்கை. பேரன், பேத்தி எடுத்த பிறகும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்த விஷச்சூழலில் மாட்டிக்கொண்ட பொன்னம்மா அன்புக்கும், பாசமான தாம்பத்திய உறவுக்கும் ஏங்கினாள். வயது குறைந்தவளென்றாலும், மற்ற ஆண்கள் பார்வையை வசீகரிக்கும் அழகுள்ளவள் என்றாலும் நெடுங்காலம் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வந்தாள்.

ஆறுமுகத்தின் தொடர் சித்திரவதை இந்த ஒழுக்கவேலியை தாண்டுமாறு தூண்டியது. தற்செயலாக நாராயணன் என்பவனது நட்பு கிடைத்தது. அவனுக்கும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லை என்பதால் இந்த நட்பு பரஸ்பரம் தங்களது துன்பத்தை பரிமாறிக் கொண்டு தேவையான இன்பத்தையும் பகிர்ந்து கொண்டது. இளம்வயதில் தாயாகி, பாட்டியாகி, கணவனின் வெறிக்கும், அடிக்கும் வாக்கப்பட்ட பொன்னம்மாள் இந்தக் ‘கள்ள’ உறவில்தான் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறாள். நீண்ட காலம் புரையோடிப் போயிருந்த புண்ணுக்கு அது மருந்து. திருட்டுத்தனமான மருந்தென்றாலும் ஆறுதலைத் தரும் மருந்து.

ஒரு நேரம் நாராயணனுடன் ஓடிப்போகலாம் என்று திட்டமிட்டு இருபது நாட்கள் அசலூரில் வாழ்ந்தாள். இருப்பினும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மனதில் கொண்டு இனி ஒழுக்கமாக வாழ்வோமென ஊருக்குத் திரும்பினாள். எல்லா சுகமும் இருபது நாட்களோடு போகட்டுமென முடிவெடுத்து வாழத் துவங்கினாள். ஆனால் ஆறுமுகம் திருந்துவதாயில்லை. பிள்ளைகள், மருகப்பிள்ளைகள் முன்பே அவளை அடிப்பதும், உறவுக்கு அழைப்பதும் என வாடிக்கையை தொடர்ந்தான். பொன்னம்மாளின் கள்ள உறவைப் பற்றி ஊர் பேசத்துவங்கியதும் ஆறுமுகத்தின் கொடுமைகள் அதிகரித்தன. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியெல்லாம் ஆறுமுகத்திடம் ஏற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அடிப்பதற்கு ஒரு முகாந்திரம் கூடுதலாகக் கிடைத்தது அவ்வளவுதான். பொன்னம்மாளும் தனது கணவனுக்கு தெரிந்து விட்டது குறித்து கவலை கொள்ளவில்லை. அன்புக்குப் பதில் வன்மத்தையும், வெறுப்பையும் கொட்டி வந்த அவனை அவள் எப்போதோ தன் மனதிலிருந்து அகற்றிவிட்டாள்.

“போன செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியிருக்கும். குடிச்சிபுட்டு வாயை பொளந்து தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கும் தூக்கம் வராம அவனையே வெறிச்சி பார்த்தேன். ஏதோ வெறி வந்துடுச்சு. மெல்ல கட்டிலருகே போயி அவன் கழுத்துல இருக்கிற துண்டை இறுக்கினேன். துடியா துடிச்சான். அவன் என்னை படுத்துன கொடுமைக்கு முன்னாடி அவன் துடிப்பு பெரிசா தெரியலை. ரெண்டு கையாலேயே இறுக்கி கொன்னேன். என் இத்தனை வருஷ தாகம் நாராயணனோட சேர்ந்தப்ப தீர்ந்தது. இத்தனை வருட வெறி ஆறுமுகத்தோட கழுத்தை இறுக்கி கொன்னப்போ தீர்ந்தது. 23 வருஷ சிறையில இருந்து மீண்டுட்டேன். இனி தனியா படுத்தாலும் நிம்மதியா படுப்பேன்” நிம்மதிப் பெருமூச்சோடு நிருபரிடம் பகிர்ந்து கொண்ட பொன்னம்மா சிறைச்சாலை நோக்கி பயணமாவதற்குக் காத்திருக்கிறாள்.

நடந்த கொலையை அவளே ஒத்துக்கொண்டிருப்பதால் வழக்கு விசாரணை வேகமாக நடந்து அவளுக்கு அநேகமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். அப்படி விதிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து வருடம் சிறையில் இருக்கவேண்டும். 53 வயதில் விடுதலையடைவாள்.

ஆறுமுகத்தை பொன்னம்மாள் கொலை செய்தாளா, அல்லது தண்டனை கொடுத்தாளா? பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா? இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா? இறுதியாக…. இது காதலா, கள்ளக்காதலா?