Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பொதுத் தேர்தலை விஞ்சும் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்

பொதுத் தேர்தலை விஞ்சும் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்

-

4.3.2011ல் தமிழகம் முழுவதும் சுமார் 53 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் பார் கவுன்சில் தேர்தல் நடந்தது. 25 உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலையொட்டி நடந்த பிரச்சாரங்களில்,

‘அன்பார்ந்த வழக்கறிஞர்களே… உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்… முதல் ஓட்டை அளியுங்கள்…’ என்ற குரல், தமிழக நீதிமன்றங்களில் கடந்த ஒரு மாதமாகக் கேட்டது.

கூடவே இன்னொரு ரகசியக் குரலும் ஒலித்தது. ‘சார், தம்பி, மாப்பிள்ள… நைட் பார்ட்டி இருக்கு, பாரின் சரக்கு, பிரியாணி ரெடி. அவசியம் வந்திருங்க. கூடுதலாக கொடைக்கானல், ஊட்டி, கோவா, கொடநாடு டூரும் உண்டு….’ பார் கவுன்சில் தேர்தலை இப்படியாக திருமங்கலம் இடைத்தேர்தல் தரத்துக்கு மாற்றி தமிழக வழக்கறிஞர்களை, நீதித்துறையை கவுரவப்படுத்தி அழகிரியை மிஞ்சியிருக்கிறார்கள், தற்போதைய பார் கவுன்சில் வேட்பாளர்கள் பலரும் அவர்களின் கைத்தடிகளும். பத்தாண்டுகளுக்கு முன்புவரை சீந்தபடாமல் இருந்த பார் கவுன்சில் தேர்தல் இன்று சாதி, சாராயம், காசு, பார்ட்டிகள் எனத் தூள் பறக்கிறது.

நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கம் 16 லட்சத்திற்கு மூடி முத்திரையிட்ட டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டு வசூலில் டாஸ்மாக் பாரை மிஞ்சியிருக்கிறது. மேலும் சில மாவட்டங்களின் வழக்கறிஞர் சங்கங்கள் ஓசியில் ஏ/சியாக மாற்றப்பட்டுள்ளன. சிவகங்கையில் கோவா டூர் சென்று வந்துள்ளார்கள். ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடம் பல ஊர்களில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ‘IPL ஏலம்தான் சம்மதமா? ஏற்கனவே 4 பேர் கேட்டிருக்கிறார்கள்’ என வெளிப்படையாக ஒட்டு மொத்த வழக்கறிஞர்களின் வாக்குரிமைகளை விலை பேசியிருக்கிறார்கள். ஓட்டுக்காக வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக அணி திரட்டப்படுகிறார்கள். ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது. தேர்தலில் கள்ள ஓட்டு, பெட்டியை மாற்றுவது போன்ற அயோக்கியத்தனங்கள் எல்லாம் தனி! மொத்தத்தில் இடைத்தேர்தலில் ஓட்டுச் சீட்டு அரசியலில் கட்சிக்காரர்கள் பின்பற்றும் அத்தனை பிராடு, பித்தலாட்டங்களும் பார் கவுன்சில் தேர்தலில் பின்பற்றப்படுகிறது.

வேட்பாளர்கள் தகுதி

அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் தனபால்ராஜ் சட்டக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிச் செய்த ஊழல் சேவைக்காக இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டே களத்தில் நிற்கிறார்.

தமிழ்நாடு பார்கவுன்சில் சேர்மன் சந்திரமோகன் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்காக நீதிபதிகளிடம் கொடுக்கல் & வாங்கல் செய்ததற்காக உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அவரும் நிற்கிறார்.

தமிழ்நாடு – பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கக் கூட்டமைப்பின் சேர்மனாக வழக்கறிஞர் உரிமைகளை பாதுகாக்க முடியாத பரமசிவம், பார்கவுன்சில் பதவியை பிடித்து பாதுகாக்க இன்று களத்தில் பையும், கையுமாக, பார்ட்டி சகிதம் நிற்கிறார்.

நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லாபியிங் வேலை பார்ப்பதற்காகவே தனியாக சங்கம் தொடங்கிய வழக்கறிஞர் பிரபாகரன், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறார். ஊர், ஊருக்கு பார்ட்டி கொடுக்கிறார். இன்னும் சில அருமை பெருமைகள் கொண்ட வேட்பாளர்களும் நிற்கிறார்கள்.

ஓட்டுக்கு காசு கொடுப்பவன் வழக்கறிஞர் நலனுக்கு எதிரி

ஓட்டுக்கு காசு கொடுத்து, பல லட்சம் செலவு செய்து, உறுப்பினராக வருபவர்கள் எப்படியாவது போட்ட பணத்தை எடுக்கவே நிச்சயம் முயற்சிப்பார்கள். வழக்கறிஞர் நலனுக்குக் குழிபறிப்பார்கள். பார்கவுன்சில் சேர்மன் தேர்ந்தெடுப்பதில் ஊழலைத் தொடங்கும் இவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் வழக்கறிஞர்களைக் கூறுபோட்டு விற்க மாட்டார்களா? வெல்பேர் ஸ்டாம்பில் தொடங்கி, காசு வாங்கிக் கொண்டு ஆளும் கட்சி ஆதரவு கருங்காலி வக்கீல் சங்கங்களுக்கு அங்கீகாரம் தருவது வரை அனைத்தையும் செய்வார்கள். போலீசு அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தரகு வேலை பார்ப்பார்கள். ஏற்கனவே சீரழிந்த நீதித்துறையை இன்னும் ஊழல் படுத்துவார்கள். இத்தகைய ஊழல் பெருச்சாளிகளுக்கு ஓட்டுப் போடுவதென்பது திருடனுக்கு வழக்கறிஞர்களே வீட்டுச் சாவியைக் கொடுத்து திருட அனுமதி கொடுப்பதைப் போன்றது.

நீதித்துறை ஊழலைப் பேச மறுப்பவர்கள்

தற்போது தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பலர் முதல் போட்டு செய்யும் தொழிலைப் போல காசைத் தண்ணீராய் இறைக்கிறார்கள். போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அச்சுறுத்தும் நீதித்துறை ஊழல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்ட பிப்ரவரி – 19 சம்பவம், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவிற்கு வருவது உள்ளிட்ட வழக்கறிஞர் சமூகத்தின் அடிநாதப் பிரச்சனைகளை மறந்தும் பேச மறுக்கிறார்கள்.

இன்று மட்டுமல்ல இதற்கு முன்பாக தமிழக வழக்கறிஞர்கள் உயிரைக் கொடுத்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் இன்று ஓட்டுக்காக அலையும் பலரையும் நாம் பார்த்திருக்க முடியாது. போராட்டத்துக்கு வராதது மட்டுமல்ல. போராடும் இளம் வழக்கறிஞர்களையும் வேலை இல்லாதவர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏ.சி அறையில் அமர்ந்து பேசி போராட்டத்தை பின்னுக்கு இழுத்தவர்கள்தான் இன்றைய பல வேட்பாளர்கள்.

வழக்கறிஞர் சமூகத்தின் வீரம் செறிந்த போராட்டங்கள்

அரசு காக்கிச்சட்டை பயங்கரவாதம், நீதித்துறை ஊழல், சி.ஆர்.பி.சி & சி.பி.சி திருத்தச் சட்டங்கள், காவிரி, மீனவர் பிரச்சனைகள் என மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் வழக்கறிஞர்கள் தமிழகத்தில் முன்நின்றிருக்கிறார்கள்.

தலைமை நீதிபதி சுபாசன் ரெட்டியை ஊழலுக்காக தமிழகத்தை விட்டே விரட்டியடித்தது, ஈழத் தமிழ் மக்களுக்காக சமரசமின்றி போராடி ரத்தம் சிந்தியது எனத் தமிழக வழக்கறிஞர் சமூகம் சமூகநீதியில் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக வலம் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊழலை அவர்கள் முகத்திற்கு நேராக அம்பலப்படுத்தி சிறைக்கு அஞ்சாமல் போராடிவரும் சாந்திபூசன் பிரசாந்த்பூசன் ஆகியோர் வழக்கறிஞர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

பொதுநல வழக்குகள் மூலம் அரசின் அத்துமீறல்களை, நீதித்துறையின் மௌனத்தை அர்ப்பணிப்போடு எதிர்த்து போராடி மக்கள் உரிமைகளை ,நலன்களை பாதுகாக்கும் எண்ணற்ற வழக்கறிஞர்கள் சமூகத்தில் உள்ளார்கள்.

வாக்குரிமையை விற்க வழக்கறிஞர்களுக்கு உரிமை இல்லை

வழக்கறிஞர்களின் தீவிரமான போராட்டங்கள் சில தோற்றதற்கு முக்கியக் காரணம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதாகச் சொன்ன பிழைப்புவாத ஊழல் தலைமைதான். இன்றும் அதே கும்பல்தான் முன்னணியில் பார்கவுன்சிலைக் கைப்பற்ற வழக்கறிஞர்களை ஊழல்படுத்தி ஓட்டுக் கேட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் வாக்கை விற்கப் போகிறார்களா? அல்லது எதிர்த்துப் போராடி மோசமான வேட்பாளர்களை நீதித்துறையிலிருந்தே விரட்டியடிக்கப் போகிறார்களா? என்பதே கேள்வி!

மக்களுக்கான நீதியின் பங்களிப்பில் வழக்கறிஞர்கள் பாத்திரம் முக்கியமானது, தவிர்க்க முடியாதது. கல்வியறிவற்ற பாமர மக்களை விமர்சிக்கின்ற கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஓட்டுக்களை விலை பேச முடியுமா? அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?

அரசின் அடக்கு முறையிலிருந்து மக்களைக் காக்க வழக்கறிஞர்களின் தொழிலுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்படுவதைத் தடுக்க நீதித்துறையின் தராசு சாயாமல் இருக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் ஊழலுக்கு உடன்பட மறுப்பதோடு எதிர்த்தும் போராட வேண்டும்.

தவறான வழியில் தலைமைக்கு வருபவர்கள் வழக்கறிஞர் சமூகத்தை துரோகத்தின் எல்லைக்கே இட்டுச் செல்வார்கள். தற்போது கூட வழக்கறிஞர் சேம நலநிதி தொடர்பான அரசாணை வழக்கறிஞர்களுக்கே எதிராக இருக்கும் நிலையில் அதற்கு தேர்தல் ஆதாயம் கருதி பார்கவுன்சில் சேர்மனும், ஃபெடரேசன் சேர்மனும் ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, லஞ்சப் பணத்தை முன்னிறுத்தாத நேர்மையுள்ள சாதாரண வேட்பாளர்களை வழக்கறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து மக்களுக்காகப் போராட வேண்டும். அது வழக்கறிஞர்களின் கடமையும்கூட.

சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் – மதுரை உயர்நீதி மன்றம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்