Saturday, April 19, 2025
முகப்புஉலகம்ஈழம்கிரிக்கெட் பயங்கரவாதம் !

கிரிக்கெட் பயங்கரவாதம் !

-

கொலை செய்வது அலுத்துப் போகும்போது
கொஞ்சம் விளையாட்டு தேவைப்படுகிறது அவர்களுக்கு…

உள்நாட்டு குளிர்பான சந்தையை
கொலை செய்த கோக்,பெப்சி…

வாகனங்களை இறக்கி விட்டு
வயல்வெளியை படுகொலை செய்யும் டாடா…

சிறுவணிகத்தின் விழிகளைத் தோண்டி
தன் முகம் ஜொலிக்கும் ரிலையன்ஸ்…

இவர்களின் இழவெடுத்த மினுமினுப்பில்
உலகக் கோப்பையில் உனது இரத்தம்…

இனக்கொலைக் கழுகுகள்
பிணச்சுவை திகட்டி
மூக்கைத் தேய்த்து இளைப்பாற
மும்பை வான்கடே வருகின்றன.

கொலை செய்தே ரன் குவிப்பதில்
இந்தியாவில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி!
படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில்
இலங்கையில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே!
கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க
கொலைகார ஆட்டம் தயார்…

தண்ணீர் பாட்டிலிலும் இரசாயன குண்டு பீதி
இரசாயன குண்டு வீசியவனுக்கு பாதுகாப்பு, வெகுமதி
எது நடந்தாலென்ன ஆட்டத்தை நோட்டம் பார்த்து
அடுத்த நாள் அலுவலகத்தில் பேசிக் கொள்வதே
இரசிகனுக்கு நிம்மதி..

இதோ இந்த நேரத்தில்….
சுற்றி வளைக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள்
ஈழத்தமிழரின் உணர்வுகள் மிதித்து
அடித்து விளையாடும் சிங்கள இனவெறி…

இதோ இந்த நேரத்தில்…
சொந்த நிலத்தை தாங்கிப் பிடிக்க எத்தனிக்கும்
ஒரிசா-சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்
உயிரை குறிவைத்து வீசப்படும் இந்தியக் குண்டுகள்…

இதோ இந்த நேரத்தில்…
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டிற்குள்
பந்தாடப்படும் ஒரு காசுமீர் பெண்ணின் பிணம்…

விளையாட்டிற்கு இடையூறாக
குறுக்கே விழும் பிணங்களைத் தாண்டி
ரசிக்கக் கிளம்பி விட்ட நண்பனே,
மைதானத்திற்கு வெளியே எது நடந்தாலும்
தானுண்டு, வேலையுண்டு
மைதானத்திற்குள் நடப்பதைப் பார்ப்பதற்கு மட்டும்
எனக்கு ஒருநாள் விடுப்பு உண்டு என்பவனே,

இது கொலை வெறியன்றி வேறென்ன?

கட்டாயம் உன் கிரிக்கெட் வெறி
மன்மோகன்சிங்குக்குத் தேவை…
டெண்டுல்கர் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டு
அமெரிக்கா பக்கம் இந்திய வளங்களை  வீசியெறியும் அவர் திறமை
ஹர்பஜன் சிங்குக்கே கைவராதது…

“ஹௌ ஈஸ் தட்” என்று அலறும்
விளையாட்டு வீரனின் குதிப்பில்
“ஜெய் ஸ்ரீராம்” என்ற வெறியைப் பார்த்து
அத்வானியும் கிரிக்கெட்டை ரசிக்கலாம்,
விளாசப்படும் ஒவ்வொரு பந்திலும்
குஜராத்தில் வெட்டியெறியப்பட்ட
இசுலாமியர்களின் தலைகளாய்
அத்வானியின் கண்களுக்கு களிப்பு தரலாம்.

ராசபக்சே ரசிப்பதற்கும் நியாயமுண்டு…
இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு
எந்த இடம் பார்த்து குண்டு வீச வேண்டுமென்று களம் அமைத்து
இந்தியா வழிநடத்திய ஆட்ட நுணுக்கங்கள்
இறுதிப் போட்டியின் ஆடுகளமாய்
ராசபக்சே கொலைகாரனுக்கு ரசிப்பு தரலாம்..

சொந்த நாட்டின் பாடுகளம் அனைத்தும்
அந்நியன் கைக்கு பறிபோவதைப் பற்றி  அக்கறையில்லை.
கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் மட்டும்
இந்தியா ஜெயிக்கிறதா என்பதுதான் உன் கவலை.

இந்த ரசனையை விட பயங்கரமானது வேறு உண்டா?

_____________________________________________________

– துரை.சண்முகம்.
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: