Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

-

அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும். ஊழலை சட்டமோ, சில மேதைகளின் நடவடிக்கைகளோ ஒழித்து விடாது. அதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து களத்தில் இறங்கி தண்டிக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுதல், நெல் மூட்டுகளை பாதுகாத்தல், அதிகாரிகள் சிறைபிடிப்பு, லாரிகள் சிறைவைப்பு என அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் அண்ணா ஹசாரே டைப் கனவான்கள் நினைத்தும் பாரக்க முடியாத போராட்டம். ஏனெனில் இது நக்சல்பாரிகளின் போராட்டம். அதே நேரம் இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!

-வினவு

______________________________________________________________

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

டந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செயலரை எழுப்பினார் ஒரு விவசாயி. “நமது ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1 மூட்டைக்கு 8 கிலோ அதிகமாக வைத்து நெல் கொள்முதல் செய்ததை விவசாயிகள் கண்டுபிடித்துவிட்டனர்.அங்கே வாருங்கள்” என அழைத்தார்.தோழர் உடனடியாக எழுந்து சென்றபோது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கே குவிந்திருந்தனர்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

விவிமு தோழர்கள் அவர்களை ஒருமுகப்படுத்தி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சு வார்த்தையின் முடிவில் 19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.

மாலைக்குள் வருவதாக சொன்ன அவன் மறுநாள் காலை வரை திரும்ப வரவே இல்லை.அங்கே வேலை செய்த சுமைதூக்கும் தொழிலாளிகளும் ஓடிவிட்டனர்.இப்போது அந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல்மூட்டைகள் இருந்தன.இந்த 4000 நெல்மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகளோடு,இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை,விவிமு விவசாயிகளின் ஒப்புதலோடு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.அலுவலகத்தை விவிமு பூட்டிவிட்டு சாவியை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

05.03.2011 அன்று நெல் கொள்முதல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அங்கே வந்தார்கள்,அலுவலகத்தை திறக்குமாறு கேட்டார்கள் இதை விவசாயிகளும்,விவிமுவும் ஏற்க மறுத்துவிட்டனர்.திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம். இதை அதிகாரிகள் மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறிதப்பிக்க முயன்றனர்.உடனே விவிமு வழிகாட்டியதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள்,நாளை மேலும் சில உயர் அதிகாரிகளை அழைத்துவந்து விவசாயிகளிடம் பேசுவதாக கூறினர்.இதை எழுத்துபூர்வமாக எழுதித்தாருங்கள் என்று விவிமு கோரியபடி எழுதிதந்தனர்.இதனால் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கூறியபடி மறுநாள் கடலூர் மாவட்ட TNCSC –துணைமேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 06.03.2011 அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரியதை நாங்கள் நிராகரித்தோம். பிரச்சினை தீரும் வரை அலுவலகம் எமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது ”தவறு நடந்தது உண்மை தான் ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு எங்களால் பணம் தர இயலாது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கத்தான் முடியும்”என சட்டவாதம் பேசினர். ஆனால் நாங்களோ கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு உடனடியாகவே பணம் தரவேண்டும், என்ற கோரிக்கையில் உறுதியாகவே இருந்தோம்.”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” என பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தோம்.

எமது இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்தோம். எங்களது பிரச்சனையை தீர்க்காமல் நீங்கள் இங்கிருந்து வெளியேற முடியாது என, நூற்றுக்கணக்கான விவசாயிகளுடைய ஒருமித்த ஆதரவோடு அறிவித்தோம்.பின்னர் எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டது.இதில் ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோ வரை கூடுதாலாக காட்டியது நிருபிக்கப்பட்டது.இதனால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தாலும்,தங்களால் பணம் தரமுடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.இதனால் மாலை வரை முற்றுகை நீடித்தது.வெளியே இருந்த இரண்டு எடை இயந்திரங்களும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்டது.

மாலை 6.30 மணியளவில்  போலிசு வந்தது. அதிகாரிகளை விடுவிக்காவிட்டால்,வழக்குப் போடுவோம் என மிரட்டியது. இதனால் விவிமு தனது உத்தியை மாற்றியது. உடனடியாகவே புதிய பட்டியல் எழுத்தரை நியமித்து விவசாயிகளின் எஞ்சிய நெல்லையும் கொள்முதல் செய்யவேண்டும், என்ற விவிமுவின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் முற்றுகையை விலக்கிக் கொண்டு அதிகாரிகளை விடுவித்தோம்.அதே நேரத்தில் “நாளைக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லுக்கு பணம் தராவிட்டால்,தற்போது நிலையத்தில் உள்ள 4000 நெல்மூட்டைகளையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தருவோம்,”என விவசாயிகளின் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தோம்.இது சட்டவிரோத செயல் என போலிசு கூறிய போது,நான்கு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லை திருப்பி எடுத்துக்கொள்ளப் போகிறோம்.இந்நடவடிக்கை சட்டவிரோதம் என்று சொன்னால் அதை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். போலிசால் முடிந்தால் எங்கள் அத்துனை பேர் மீதும் வழக்கு போடட்டும்.நாளை 07.03.2011 அன்று  திருடியதை திருப்பி எடுப்போம், என்ற போராட்டத்தை விவிமு அறிவித்தது.

இதனால் ஏழாம் தேதி காலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக போலிசு எங்களுக்கு தகவல் தந்தது.நாங்கள் பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.”நான் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை நீங்கள் வட்டாட்சியரை பாருங்கள்” என்றார் கோட்டாட்சியர்.நாங்கள் வட்டாட்சியரை சந்தித்த போது ”போலிசு ஆய்வாளரிடம் பேசுங்கள்”என்றார்.பேச்சுவார்த்தை போலிசு நிலையத்தில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு கூடுதலாக உள்ள நெல்லிற்கு பணம் தந்துவிடுவதாக TNCSC அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.”ஏற்கனவே சேமிப்பு கிடங்கிற்கு சென்றுவிட்ட நெல்லிற்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது”, என்று கூறினர்.இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் விவிமுவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.மறுநாள் வருவதாக சொன்னவர்கள் TNCSC-யில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக TNCSC உயரதிகாரிகள் அனுப்பிவைத்தனர். இவர்கள் ”02.03.2011 , 03.03.2011 ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது,இவ்விரு நாட்களில் எடைபோடப்பட்ட மூட்டைகளுக்கு மட்டும் தான் பணம் தரமுடியும்.எஞ்சிய நாட்களில் எடைபோட்ட மூட்டைகளில் தவறு நடக்கவில்லை” என வாதாடினர்.

4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கிவைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் 10 மூட்டையை எடைப் போட்டு ”நெல் குறைகிறதே தவிர கூடுதலாக இல்லை”, என விவசாயிகளுக்கு காட்டிவிட்டு லாரிகளில் மூட்டைகளை ஏற்ற ஆரம்பித்தனர்.சுமார் 50 மூட்டைகளை ஏற்றிய பின்பு அடியில் இருந்த மூட்டைகளை எடை போடுமாறு நாங்கள் கோரினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்தது.கடைசி இரு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் கூடுதலாக இருந்த நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றுவிடலாம், என்று திட்டமிட்டிருந்த இடைத்தரகர்கள் ஏமாந்து போனார்கள்.

“கடைசி இரு தினங்களுக்கு மூட்டைக்கு 8 கிலோவும் எஞ்சிய மூட்டைகளுக்கு சராசரியாக 2 கிலோவீதம் பணம் தரவேண்டும். அப்போது தான் நெல்மூட்டைகளை ஏற்றுவதற்கு அனுமதிப்போம்” என திட்டவட்டமாக அறிவித்தோம்.இதை உயரதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறிவிட்டு இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றாமல் வெளியேறக்கூடாது, என விவிமு 6 லாரிகளை சிறைபிடித்தது.

உடனடியாக இத்தகவலை உயரதிகாரிகளுக்கும்,பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் தெரிவித்தது.மறு நாள் காலை 10 மணியளவில் லாரிகள் சிறைப்பிடித்திருப்பதை செய்தியாக்கிக்கொண்டு செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர்.இப்படி புகைப்படம் எடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் இல்லாத கட்சியின் (புரட்சிகர சோசலிச கட்சியின்) கடலூர்மாவட்ட செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் போலிசு புரோக்கரான செந்தில் என்பவர் தடுக்க முயன்றார். இப்படி லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எங்கள் ஊர்களின் பெயர் கெட்டுப்போகும் என்று விவிமு செயலரிடம் வாதாடினார்.இதை மறுத்த விவிமு செயலரும்,அந்த நேரத்தில் அங்கே இருந்த விவசாயிகளும் TNCSC திருடர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை அம்பலப்படுத்தி அவரை எச்சரித்தனர்.இச்செய்தி இரண்டாவது முறையாக பத்திரிக்கை மற்றும் தொலைக்கட்சிகளில் வெளிவந்தது.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து போராட்டம் நட்த்தினால் TNCSC-யை மூடிவிடுவார்கள் என்று வதந்தியை பரப்பி நெல் விற்ற விவசாயிகள்,விற்காத விவசாயிகள் ஆகிய இருவருக்கிடையில் மோதலை உண்டாக்க முற்பட்டனர்.இவர்களின் இந்த சதியை விவசாயிகளை கூட்டிப் பேசி அவர்களுக்கு புரிய வைத்து விவிமு முறியடித்தது.இப்படி TNCSC-க்கு ஆதரவாக வதந்தி பரப்பி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் எட்டப்பர்களை விவிமு செயலர் மிக கடுமையாக எச்சரித்தார்.விவசாயிகளும் எட்டப்பர்களின் சதியை புரிந்துகொண்டு தங்களது வாத்தைகளில் திட்டித் தீர்த்தனர்.விவிமு செயலரை திட்டிய ஒருவரிடம் பல விவசாயிகள் சண்டையிட்டனர்,அடிக்கவும் சென்றனர்.இச்சண்டையை விலக்கிவிட்ட விவிமு தோழர்கள் இப்போதைக்கு எட்டப்பர்களோடு சண்டை வேண்டாம் என்றும், இப்படி செய்தால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு நாம் பலியாகிவிடுவோம் என புரியவைத்தனர்.

மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இச்செய்தி வெளிவந்ததால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதல் நாள் ஓடிப்போன இடைத்தரகர்கள் மீண்டும் வந்தனர். விவிமு கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை TNCSC-கொள்முதல் அதிகாரி முன்னிலையில் இடைத்தரகர்கள் விவிமுவிடம் தந்தனர்.இதன் மூலம் விவசாயிகளிடம் திருடியதில் ஒரு பகுதியை விவிமு திரும்பப் பெற்றது.இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.03.2011 அன்று விவிமு பிரித்து தந்தது.

TNCSC-வரலாற்றிலேயே அவர்கள் திருடியதை திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இது தான்.இப்போராட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் ஒளிந்திருக்கும் போர்குணத்தை விவிமு மிகச்சரியாக பயன்படுத்தியது.மேலும் எட்டப்பர்களை முறியடிப்பதையும்,சட்டபூர்வ,சட்டபூர்வமற்ற போரட்டமுறைகளை இணைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை வெறுமனே பேச்சின் மூலமாக மட்டும் அல்ல,தனது செயலின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விவிமு உணரவைத்தது.இப்போரட்டத்தின் மூலம் விவாசாயிகள் மத்தியில் போராட்டக் குணத்தை மட்டுமல்ல,விவிமு போன்ற நக்சல்பாரி அமைப்புகள் மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றேடுக்க விடாப்பிடியாக நின்று போராடுவதுடன்,இப்போராட்டத்தில் தமது உயிரையும் தரத் தயங்காதவர்கள் என்பதையும் விவசாயிகளுக்கு உணர்த்தியது.

இப்போரட்டத்தை சாதி,ஊர் ஆகிய பிற்போக்குத் தனங்களை காட்டி, விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற அதிகாரிகள் மற்றும் எட்டப்பர்களின் சதிச்செயல்களை விவிமு தனது தன்னலமற்ற,உறுதியான நிலைப்பாடுகளாலும்,போராட்டத்தாலும் உடைத்தெரிந்தது.இப்படிப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தையும் பயன்படுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலமே விவசாயிகளின் வாழ்நிலையால் அவர்களிடம் உள்ள பிற்போக்கு தனங்களை உடைத்தெரிந்து,அவர்களிடம் இயல்பிலேயே உள்ள போராட்டக்குணத்தை வெளிக்கொணர்ந்து,விவசாயிகளிடையே ஒற்றுமையையும்,கூட்டுத்துவ சிந்தனையையும் ஜன்நாயக உணர்வையும் உருவாக்க முடியும்.விவசாயிகளை திருத்தமுடியாது,அவர்களை அணிதிரட்ட முடியாது,என்று மார்க்சிய இயங்கியலுக்கு புறம்பாக உளறித்திரியும் மரமண்டைகளுக்கு இது ஒருபோதும் புரியாது!

_____________________________________________________________

– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம் வட்டம்.
_____________________________________________________________