Monday, April 21, 2025
முகப்புசெய்திபின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

-

சாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும்பம் சவுதியில் உள்ள பணக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதை அறிந்திருப்பீர்கள். 29 வயதான ஓமர் சமீபத்தில்தான் தன்னைவிட 25 வயது அதிகமுள்ள ஆங்கிலேய பெண்ணான சாய்னாவை விவாகரத்து செய்தார்.

தற்போது ஹாலிவுட்டன் பிரபல நடிகையான 35 வயதுள்ள டிரி பாரிமோரோடு டேட்டிங் செல்வது தனது கனவு என்று ஓமர் அறிவித்துள்ளார். இந்த நடிகைதான் ஹாலிவுட்டில் மிகவும் அழகானவர் என்றும் வழிந்துள்ளார்.
அமெரிக்க பண்பாட்டின் மீது தனக்குள்ள காதலை விவரித்துள்ள ஜூனியர் பின்லேடனுக்கு, ஜிம்  கேரியின் படங்கள், அமெரிக்கன் கால்பந்து, ராக் இசை, மடோனா என்றால் மிகவும் விருப்பமாம். தோஹாவில் தங்கியிருக்கும் ஓமருக்கு தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும், ஆனால் எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்றும் கூறுகிறார்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. ஓமரின் அமெரிக்க மோகம் என்பது சமீபத்தில் வந்ததாக இருக்காது. அதற்காகன வரலாற்றுக் காரணமும் அதை மறுக்கிறது.

இசுலாமிய சர்வதேசியம் பேசும் பின்லேடன் முழுக்க முழுக்க அமெரிக்கா தயாரிப்பாகும். ஆப்கானை ஆக்கிரமித்த ரசியாவை விரட்டுவதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ திட்டமிட்டு தயாரித்த பொருள்தான் பின்லேடன். 80, 90 களில் தீவிர அமெரிக்க ஆதரவாளராக பின்லேடன் இருந்த போது அவரது குடும்பத்தினர் இயல்பாகவே அமெரிக்க கலாச்சாரத்தின் இரசிகர்களாகத்தானே இருக்க முடியும்?

அரபு நாடுகளின் எண்ணெய் தொழிலை அமெரிக்கா கட்டுபடுத்துவதற்கேற்ப, ஷேக்குகளின் பணம் அமெரிக்காவில்தான் முதலீடாக இருக்கிறது. மேட்டுக்குடி ஷேக்ககுகள் ஏழை இசுலாமியர்களை இசுலாத்தின் படி வாழவேண்டும் என்று பிரச்சாரம் செய்து நிதி உதவி வழங்கிவிட்டு தங்கள் வாழ்க்கையில் தீவிர அமெரிக்க நுகர்வு வெறியர்களாகத்தான் உள்ளனர். அதில் எல்லா பொறுக்கித்தனங்களும் உண்டு.

பின்லேடன்  வகையறாக்கள் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது தற்செயலானதுதான். அடிப்படையில் ஜிகாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் நண்பர்கள்தான். தற்போதைய முரண்பாடு என்பது நீடித்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளையே இவர்கள் சேரமாட்டார்கள் என்று யாரும் உத்திரவாதமளிக்க முடியாது.
பின்லேடன் குடும்பத்தில் அவர் மட்டும் போராளியாக வாழ்க்கையைக் கழித்த போதும், குடும்பத்தினர் வாழ்வை ஜாலியாகத்தான் கழிக்கின்றனர். எனவே தந்தை மதவாதியாகவும், மகன் அமெரிக்க அடிமையாகவும் இருப்பதில் முரண்பாடு இல்லை. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமம் இசுலாமிய மதவாதிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் பகைவர்கள் இல்லை என்பதே. கூடவே ஏழை நாடுகளின் ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது.

பாக்கிஸ்தான் தீவிர இசுலாமியக் குடியரசாக இசுலாமியர்கள் மத்தியில் அறியப்படுகிறது. ஆனால் உலக அளவில் செக்ஸ், போர்னா விவகாங்களை இணையத்தில் அதிகம் தேடும் நாடு அதுதான் என்று ஒரு ஆய்வு கூகுளின் தேடுதல் விசயங்களை வைத்து கூறுகிறது. இசுலாமிய உட்பிரிவுகளுக்குள்ளேயே குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் நாட்டில், பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர். ஆக தீவிரமதவாதம், ஒழுக்கம் என்பது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதவாதக்கூட்டத்தின் பிடியிலிருந்து ஏழை இசுலாமியர்கள் வெளியேற வேண்டும். அப்போதுதான் வர்க்கமென்ற முறையில் தம்மை ஒடுக்கும் மேட்டுக்குடி பணக்கார ஷேக்குகளையும், அவர்களுக்கு காவல் அரணாக இருக்கும் அமெரிக்காவையும் எதிர்த்து விடுதலை பெற முடியும்.

ஆக ஓமர் பின்லேடன் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மைனர் பிள்ளைதான்!  தப்பிப் பிறந்த பிள்ளை அல்ல !!