Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!

சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!

-

சின்னக்குத்தூசி: தி.மு.விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
சின்ன குத்தூசி 1934-2011

சின்னக்குத்தூசி எனும் புனைபெயரில் தமிழக அரசியல் – பத்திரிகை உலகில் பிரபலமாக அறியப்பட்ட இரா.தியாகராஜன் 22.05.2011 அன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

1934ஆம் ஆண்டு திருவாரில் பிறந்த சின்னக்குத்தூசி மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சில் கவரப்படுகிறார். பின்னர் பள்ளி ஆசிரியராகவும், அதன் பின்னர் பல பத்திரிகைகளிலும் பணியாற்றிருக்கிறார். பல ஆண்டுகள் முரசொலியிலும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் தொடர்களை எழுதியிருக்கிறார். கடந்த ஓராண்டாக பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த காலங்களிலும் எழுத்துப் பணியையோ நண்பர்களோடு உரையாடுவதையோ அவர் நிறுத்தவில்லை.

2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் அவர் தங்கியிருந்த போது அடிக்கடி அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது பல அரசியல் கட்சியைச் சேர்ந்தோர், முன்னாள் இந்நாள் பத்திரிகையாளர்கள், அனவரும் நாள், கிழமை, நேரம் முறை வைத்து அவரை சந்திக்க வருவார்கள்.

பகல், மாலை, இரவு என எந்நேரமும் பலரோடு அவர் விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்ட நான் அவர் எப்போது படிக்கிறார், எழுதுகிறார் என்பதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுபவர் ஒன்பது மணிக்குள் படிப்பு, எழுத்து வேலைகளை முடித்து விடுவார். அவர் அறை முழுவதும் பத்திரிகைகளும், நூல்களும், கோப்புகளும் நிறைந்து இருக்கும். தினசரியில் வரும் செய்திகளை தலைப்புக்கேற்றவாறு கிழித்து அந்தந்த உறையில் போட்டு விடுவார். அதில் சர்வதேச அரசியல் முதல் மணிப்பூர், அசாம் என வடகிழக்கு மாநில அரசியல் வரை அனைத்தும் இருக்கும்.

இதுபோக அவர் நினைவாற்றலே ஒரு பெரும் நூலகம்தான். தமிழகத்தின் அறுபது ஆண்டுகால அரசியல் விவரங்களை எப்போது கேட்டாலும் சரளமாகச் சொல்வார். தனது செய்திக் கோப்புகளையும், மிகுந்த விட்ட நூல்களையும் பரமாரிப்பதற்கு அவர் என்றுமே அலுத்துக் கொண்டதில்லை. எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த அவரது இறுதிக் காலத்தை நக்கீரன் கோபால் சிறப்பாகவே பார்த்துக் கொண்டார். இப்போது இறந்த பிறகும் கூட அவருக்கென்று உறவினர்கள் யாருமில்லை. அவரது உடல் கூட நக்கீரன் அலுவலகத்தில்தான் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு சென்றது.

நான் அவரைப் பார்த்த காலத்தில் தி.மு.கதான் ஆளும் கட்சி. முற்பகலில் முரசொலி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு பிற்பகலில்தான் அறைக்குத் திரும்புவார். கருணாநிதியை அடிக்கடி சந்திக்க கூடியவர். எனினும் அந்த செல்வாக்கை தனது சொந்த நலனுக்கென்று பயன்படுத்திக் கொள்ளாதவர்.

90களின் துவக்கத்தில் ம.க.இ.க நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் குறித்து தொடர்ச்சியான அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். அப்போது தமிழகத்தில் ஜெயா ஆட்சி. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பார்ப்பன இந்து மதவெறி தலைவிரித்தாடிய காலம். அரங்கநாதன் கருவறைக்குள் பெரியார், அம்பேத்கரின் படங்களுடன் தோழர்கள் நிற்கும் புகைப்படத்தை சுவரொட்டியாக அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் அஞ்சினர். இதைச் சொன்னவுடன், தானாக முன்வந்து உதவினார். அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக, கருவறை நுழைவுப் போராட்டம் பற்றி  முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள், தலையங்கங்கள் வந்தன. ஓராண்டுக்குப் பின் அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்து முரசொலியில் எழுதினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து கருவறை நுழைவுப் போராட்ட வழக்கில் தீர்ப்பு வந்தபோது அதையும் முரசொலியில் பதிவு செய்தார். அதே போல ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழாவை ஒட்டி, தமிழிசை மரபு பற்றியும் நக்கீரனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இவை எதுவும் “எழுதுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்டவை அல்ல, அவர் தானாகவே சொந்த ஈடுபாட்டின் பேரில் எழுதியவை. பார்ப்பனிய எதிர்ப்பை தி.மு.கவே கைவிட்ட நிலையில், ஒரு நக்சல் இயக்கம் அதனை மக்கள் திரள் இயக்கமாக கொண்டு செல்வது குறித்து அவருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களையும் தொகுப்பாக்கி வைத்திருந்தார். ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழைகளை பலமுறை அவருக்கு அளித்திருக்கிறேன். அதை வாங்கி பலருக்கும் உற்சாகத்துடன் அறிமுகம் செய்தார். ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தை வேண்டாமென்றாலும் “இலவசமாவா கட்சி நடத்துரீங்க” என்று வற்புறுத்தி அளிப்பார். பத்திரிகைகளையும் சில பிரதிகள் வாங்கிக் கொண்டு மறவாமல் காசு கொடுப்பார்.

அவரைப் பார்க்க பிரபலங்கள் வரும் போது,  நான் சற்றுத் தயக்கத்துடன் விடைபெறுவதாக சொன்னாலும், “பரவாயில்லை இருங்கள்” என்று அமர்த்துவார், அறிமுகப் படுத்துவார். ம.க.இ.க என்று சொன்னவுடன், கொஞ்சம் கோபமாகவும், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் அவர்கள் ஏதாவது பேசினால், உடனே முன்னெச்செரிக்கையாக தலையிட்டு நிறுத்துவார். பொதுவுடமை கொள்கையில் தீவிரம் கொண்ட அதே நேரம் துடுக்காகப் பேசுகின்ற அவசரக்கார இளைஞனாகவே என்னை அவர் கருதியிருந்தார்.

சிலநேரம் அவர் பேசும் விசயங்கள் மூலம் நான் வாழ்ந்திராத திராவிட இயக்கத்தின் நாட்களை அனுபவித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் குறிப்புகளாகக் கூட எழுதி வைக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். அந்தக்கால பாய்ஸ் கம்பெனி நாடகங்களின் திரைச்சீலைக்காக இந்து மத தெய்வங்கள் உருவங்களாக வரையப்பட்டு பின்னர் அவை சிவகாசி காலெண்டராக மாறி, பின்னர் நாம் காணும் இந்து மத தெய்வங்களாக கண்ணாடி பிரேமுக்குள் நுழைந்த கதையை அவர் விவரித்தது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தால் அப்படியே நாம் அவரது நினைவுகளைப் பின்தொடர்ந்து திராவிட இயக்கத்தின் வரலாற்றுக் காலத்துக்குள் சென்று விடுவோம்.

பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது கூட பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதன் சுவடு கூட தெரியாமல் உண்மையாக வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளி அவர். அவரது எழுத்துக்களை நக்கீரன் பதிப்பகம் பல நூல்களாக வெளியிட்டிருக்கிறது. அவரது தொடர் நக்கீரனில் வாரம் இருமுறை வருவது நின்று போய் ஒரு முறை என்று ஆனது. ஏனென்று கேட்ட போது படிப்பவர்களின் வரவேற்பு இன்மை என்று அவர் மிகவும் எதார்த்தமாக குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

சின்னக்குத்தூசியை பார்க்க வருபவர்கள் அனைவரும் “முன்னொரு காலத்தில் நல்ல அரசியல் இருந்தது” என்பன போன்ற மலரும் நினைவுகளையே பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நான் அவருடன் தீவிரமாக விவாதம் செய்திருக்கிறேன். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது வரையிலான பல விசயங்களில் தி.மு.க சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கட்சியாக சீரழிந்ததை அவருடன் பேசியிருக்கிறேன். பேசி பலனில்லை என்றபோது நிறுத்தியிருக்கிறேன்.

அந்த விவாதங்களில் சின்னக்குத்தூசி தெரிவித்த இறுதிக் கருத்து என்னவென்றால், ” தி.மு.க போன்ற கட்சிகள் மக்கள் திரள் அரசியலில்(தேர்தல்) இருப்பதால் எந்த விசயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரம் கருதியோ, தூய கொள்கை காரணமாகவோ பேசிவிட முடியாது. மக்களுக்கு பொறுப்பான கட்சி என்பதால் சில விசயங்களில் நீக்கு போக்காகத்தான் இருக்க முடியும். அதே நேரம் ம.க.இ.க போன்ற இயக்கங்கள் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்று கவலைப்படுவதில்லை (தேர்தல் புறக்கணிப்பு). எனவே சமரசமில்லாமல் தங்களது கொள்கைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் பொலிட்டிக்ஸ் என்று போனால் தி.மு.க  மாதிரி  தான் இயங்க முடியும்.” இதுதான் அவர் கருத்து.

இந்தக் கருத்து சின்னக்குத்தூசியின் கருத்து மட்டுமல்ல, போலிக் கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கத் தலைவர்கள் பலரும் தெரிவிக்கும் ஒன்றுதான். முக்கியமாக சந்தர்ப்பவாத அரசியல் அனைத்தும் இத்தகைய ‘கொள்கை’ விளக்கத்தில் முடிவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

சின்னக்குத்தூசியிடம் இந்த கருத்தை குறிப்பாகவே விவாதித்திருக்கிறேன். “இந்துமதவெறி என்ற பதத்தைக்கூட தி.மு.க பயன்படுத்தாதற்கு காரணம் தேர்தலில் ‘இந்துக்கள்’ ஓட்டு போய்விடும் என்பது மட்டுமல்ல, இந்து வெறி தேவர் வெறி என்று மதம் சாதியின் பெயர் குறிப்பிட்டு பேசினால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்சினை ஏற்படும். மக்கள் மத்தியில் பிரச்சினையாகும் என்பது அடுத்த விசயம்தான். இந்துமதவெறி பாசிசம் குறித்த ம.க.இ.க வின் பிரச்சாரம் ‘இந்துக்களிடம்’ தான் செய்யப்படுகிறது. அதற்கு ‘இந்துக்கள்’ தான் ஆதரவும் நிதியும் அளிக்கின்றனர். மாஸ் பாலிடிக்ஸ் என்ற பெயரில் தமது சொந்த சந்தர்ப்பவாதத்துக்கு மக்களைப் பொறுப்பாக்க கூடாது” என்று விவாதித்திருக்கிறேன்.

சின்னக்குத்தூசி இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவரல்ல. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ள விடாமல் திமுக பாசத்தையும் விஞ்சிய ஒரு கலைஞர் பாசம் அவர் கண்ணை மறைத்தது. தி.மு.கவின் சந்தர்ப்பவாதங்களுக்கெல்லாம் தான் சப்பைக்கட்டுவது, நடுநிலையாளர்களிடம் கூட வெறுப்புணர்வை தோற்றுவிக்கிறது என்று தெரிந்த போதிலும், அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

திராவிட இயக்கத்திலும் சரி கம்யூனிஸ்டு  இயக்கத்திலும் சரி, இலட்சியத்தின் பால் மதிப்பு கொண்ட முதியவர்கள் சிலர் இருக்கின்றார்கள். தம்மளவில் நேர்மையாக வாழக்கூடிய அவர்கள்,  “கல்லானாலும் புல்லானாலும் இந்தக் கட்சிதான்” என்று ஒரு வகை கற்பு நிலையைப் பேணுகிறார்கள். தமது இலட்சியத்தில் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்த மனநிறைவு மட்டுமே இவர்களது வாழ்க்கைக்கு ஒரு வகையில் அர்த்தம் தருகிறது. தனது கட்சியும் அதன் தலைவரும் கண் முன்னே சீரழியும் காட்சி அந்த அர்த்தத்தை அரித்துத் தின்கிறது.

திமுக வின் சமீபத்திய தேர்தல் தோல்வி கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, சின்னக்குத்தூசிக்கும் அது ஒரு தனிப்பட்ட துயரமாகவே இருந்திருக்கும். கருணாநிதி குடும்பத்தினரின் துயரத்திற்கு  “பொருளாயத” அடிப்படை உண்டு. சின்னக்குத்தூசியின் துயரத்துக்கு கருத்தியலைத் தவிர வேறு எந்த அடிப்படையும் கிடையாது.

சின்னக்குத்தூசியின் மறைவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரமும் அத்தகையதுதான். பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: