Thursday, April 17, 2025
முகப்புசெய்திநீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு! ஜெயாவிடம் கருணாநிதி சரண்!!

நீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு! ஜெயாவிடம் கருணாநிதி சரண்!!

-

ம்மினிய தமிழ் மக்களே! தாங்கள் தினமும் என்ன பணியிலிருப்பினும், நேர நெருக்கடியிலிருப்பினும் தவறாது அம்மையார் புரட்சித் தலைவியார் எழுப்பும் கேள்விகளுக்கு, தானைத் தலைவர் கலைஞர் எழுதும் வினா விடை தத்துவத்தை தவறாமல் படித்துப் பலன் பெறவும். கருணாநிதிச் செம்மலின் காவியச் சாதனைகளது வண்டவாளத்தை அவரது வார்த்தைகளிலேயே படித்தறியும் பாக்கியத்தை நாம் இழக்கக்கூடாது அல்லவா?

நாகப்பட்டினம் மீனவர் செல்லப்பன் இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது சமீபத்தில் நடந்தது. உடனே கருணாநிதி மூன்று இலட்சம் கொடுத்துவிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தி.மு.கவின் மீனவர் அணி சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைக் கண்டித்து ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுகிறார். அதில் இதுமாதிரி எத்தனை கண்டனக் கடிதங்கள் எழுதியும் ஒரு பலனில்லையே என்று கூறிவிட்டு, ரோசமிருந்தால் தி.மு.கவின் மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கூறுகிறார். கூடவே அம்மா ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவது நிறுத்தப்படும் என்று வாக்குறுதி வேறு.

இது கண்ட தானைத்தலைவர் அம்மா ஆட்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது புரட்சித் தலைவி என்ன கிழித்தார், அவரும் கடிதம்தானே எழுதினார் என்று லாவணி பாடுகிறார். “தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் வீராதி வீரர்கள் எவரும் இலங்கை மேல் படையெடுத்து தமிழ் மானம் காக்க ஏன் முன்வரவில்லை, அதையெல்லாம் தி.மு.க அரசா தடுத்தது” என்று சீறுகிறார்.

ஆக அம்மாவும் கடிதம்தான் எழுதினார், அய்யாவும் கடிதம்தான் எழுதுகிறார், இரண்டுபேரும் ஒரு முடியும் பிடுங்கவில்லை என்பது யாதார்த்தமாக இருக்கும் போது இந்த நாடகத்தில் ஜெயலலிதா மட்டும் வீரம் காண்பிப்பது அழகா என்பதுதான் கருணாநிதியின் கவலை.

கொல்லப்படும் தமிழக மீனவரின் அவலத்தைப் பார்த்து கோபம் வரவில்லை. அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய சிங்களக் கடற்படையினர் மீது ஆவேசம் வரவில்லை. ஆனால் காலணாவுக்கு பிரயோசனமில்லாத கடிதம் எழுதியதை குத்திக் காட்டினால் மட்டும் அய்யாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இன்ன அமைச்சுத் துறைகள்தான் வேண்டுமென்று கேட்டு வாங்குவதற்கு டெல்லி சென்று மிரட்டல் விடுப்பதற்கெல்லாம் முடிகிறது, தமிழக மீனவரைக் காப்பதற்கு மட்டும் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை என்றால் என்ன காரணம்?

இவ்வளவிற்கும் மிகப்பெரிய கடலோரக் காவற்படை, கடற்படை, என்று எல்லா படைகளையும் வைத்து சீன் போடும் மத்திய அரசு தமிழக மீனவரை மட்டும் ஏன் காப்பாற்ற மறுக்கிறது? பாக் எல்லையில் அடிக்கு ஒரு இராணுவத்தை போட்டு காஷ்மார் மக்களை பந்தாடுவதோடு, பாக்கிஸ்தானையும் கவனமாக கையாள்கிறோம் என்று பெருமைப்படுபவர்கள் வங்கக் கடலில் மட்டும் ஏன் பாராமுகமாக இருக்கிறார்கள்?

தமிழக மீனவர்களின் உயிர் ஒன்றும் இந்திய அரசின் கண்ணாட்டத்தில் அத்தனை மதிப்பில்லை என்பதால்தானே இந்த நிலைமை? இந்தக் கொடுமைக்கு மத்திய அரசுடன் கூட்டணி அச்சாரம் போடும் கருணாநிதி “கூசாமல் கடிதம் எழுதினேன், ப.சிதம்பரம் பதில் எழுதினார்” என்று பல்லிளிக்கிறார். இதனால் அம்மா ஏதோ கிழித்துவிட்டார் என்பதல்ல. அவர் ஆட்சியிலிருந்தாலும் இதுதான் வெட்கமின்றி நடக்கப் போகிறது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை விட இலங்கையில் இந்திய முதலாளிகள் நடத்தும் தொழில் பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் இந்தப் பாராமுகம். அந்த இந்திய முதலாளிகளை குறைந்த பட்சம் தமிழகத்தில் மக்கள் கொஞ்சம் கவனித்தால்தான் இந்த மாபாதகம் நிறுத்தப்படும். மாறாக இரண்டு கழகங்களும் அவர்களது எடுபிடி கூட்டணிகளும் தமிழக மீனவர்களை பலி கொடுத்துவிட்டு போனால் போகிறதென கடிதம் மட்டுமே எழுதப் பயன்படுவார்கள்.