Thursday, April 17, 2025
முகப்புபார்வைகேள்வி-பதில்தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

-

கேள்வி :
ஒரு இந்தியன் அவனது வாழ்நாளில் இரண்டு முறைதான் தேர்தலில் போட்டியிட முடியும்” என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் எல்லா ஊழல்களும் உடனடியாக நிறுத்தப்படும். சமூகவிரோதிகளும் அரசியலுக்கு வரமாட்டார்கள். காரியவாதிகளும் அரசியலை தொழில் போல நினைத்து வர இயலாது.

என்னுடைய கேள்வி, இத்தகைய சட்டம் இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புண்டா?

– ஜெகன்

அன்புள்ள ஜெகன்,

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த நாராயண மூர்த்தி பதவி விலகிக் கொண்டு வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதுபோல பல முதலாளித்துவ நிறுவனங்களில் முக்கியமாக மேற்கத்திய நிறுவனங்களில் நடக்கின்றன. நிறுவனத்தை நடத்துவது வேறு ஆளாக இருந்தாலும் நிறுவனத்தின் பங்குகள் என்னமோ முதலாளிகளின் கையில்தான் குவிந்து கிடக்கின்றன. அந்த வகையில் அந்தந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது எல்லாம் இவர்கள்தான்.

அதே போல இந்தியாவில் தேர்தல்களில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை விட அவர்கள் எந்தெந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக, பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் இங்குள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சிகள் அனைத்தும் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், நிலவுடைமை வர்க்கங்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. காங்கிரசும், பா.ஜ.கவும், தி.மு.க – அ.தி.மு.கவும் முதலாளிகளது நலனுக்காகத்தான் கட்சிகளை நடத்துகின்றன.

அடுத்து நமது ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை விட நிரந்தரமாக இருக்கும் அரசின் உறுப்புகளுக்குத்தான் ( அதிகார வர்க்கம், நீதிமன்றம், போலீசு – இராணுவம்) அதிக அதிகாரம் இருக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றத்தான் முடியும். அதை அமல்படுத்துவது அரசு எனப்படும் மையமான உறுப்பைச் சேர்ந்த அதிகார வர்க்கம்தான்.

கருணாநிதி அரசு செய்தவற்றில் மக்கள் நலனுக்கானவற்றைத்தான் இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா ரத்து செய்ய முடியுமே அன்றி முதலாளிகளுக்கு பாதகமாக எதையும் செய்ய முடியாது. சான்றாக தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து என்பது பள்ளி முதலாளிகளின் நலனில் குடிகொண்டிருக்கிறது என்பதால் சாத்தியம். ஆனால் தி.மு.க ஆட்சியில் அனுமதி பெற்று இங்கு வந்து தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுனவங்களை ஜெயலலிதா விரும்பினாலும் ரத்து செய்ய முடியாது.

அதேபோல பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் கனிம வளங்களையும் தனியாருக்கு விற்பது மட்டும்தான் மன்மோகன் அரசு செய்ய முடியுமே அன்றி உல்டாவாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க முடியாது. அமெரிக்கா திணித்திருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத்தான் காங்கிரசு அரசு செய்யுமே அன்றி அதை எதிர்த்து கருத்துக்கூட தெரிவிப்பதற்கு வழியில்லை.

ஆக அரசாங்கங்களின் இலட்சணம் இதுதான் என்றால் பின் ஏன் தேர்தல் போட்டிகள் இத்தனை பிரயத்தனத்துடன் நடக்கின்றன? தெரிவு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் அளவில்லாமல் சம்பாதிப்பதற்கு இந்த அமைப்பு வாய்ப்புகளை நல்கிறது. இதில் எதிர்க்கட்சி என்றால் கமிஷன் கம்மியாகவும், ஆளும் கட்சி என்றால் அதிகமாகவும் இருக்கும். இதை எதிர்பார்த்தே தேர்தல்களில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆளும் கட்சி என்றால் முதலாளிகளிடமிருந்து கணிசமாக கிடைக்கும் என்பது ஒரு யதார்த்தம். இதைத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்க்கிறோம்.

அதே நேரம் அரசியல்வாதிகள் அடிக்கும் ஊழல், கொள்ளைகளை விட அதிகாரிகளும், முதலாளிகளும்தான் கணக்கில்லாமல் அடிக்கிறார்கள். இப்போது கோதாவரி எரிவாயு பேசினில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் தொகையை அரசுக்கு கொடுக்காமல் கைப்பற்றியிருக்கும் ஊழல் வெளிவந்திருக்கிறது. இப்படித்தான் அனைத்து ஊழல்களிலும் முதலாளிகளே முதன்மையாக இருக்கிறார்கள். ஆனால் இந்த முதலாளிகளே ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதால் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களிடம் வில்லன்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இதுதான் நிலைமை என்றால் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள் எதுவும் பலனளிக்க போவதில்லை. ஒருவர் முழுமையான நல்லவராக இருந்தாலும் இந்த அமைப்பு முறையின் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இது போக இப்போதே தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போட்டியிடுவதற்கு தனித்தொகுதிகளை ஒதுக்குகிறார்கள். இதனாலெல்லாம் பெண்களும், தலித்துகளும் பலனடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.

புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் இப்போது  காங்கிரசு என்று சுற்றி வரும் செல்வப்பெருந்தகை ஒரு கட்டைப்பஞ்சாய்த்து ரவுடி. அதன் மூலமே கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தவர். தலித்துகளுக்கான தொகுதியில் இவர் தலித் என்பதால் போட்டியிட்டு வெல்வதால் என்ன பலன்? அது போல இன்று பல பஞ்சாயத்து இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களும் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் அவர்களது கணவன்மாரே தலைவர்கள் என்று அறியப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள். எனவே இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் சொல்வது போல ஒருவர் இரண்டுமுறை மட்டும்தான் போட்டியிட முடியும் என்று ஆக்கினாலும் அது ஊழல்பெருச்சாளிகளின் வாரிசுகளும், குடும்பத்தினரும் போட்டியிடுவார்கள் என்று மாறிவிடும். சான்றாக தங்கபாலு இரு முறை போட்டியிட்டு மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்றால் தனது மனைவியை களமிறக்குவார். மனைவிக்கு இரு முறை முடிந்தால் அப்புறம் வாரிசுகள், பினாமிகள் என்று இந்த ஆதிக்கம் சட்டத்திற்கேற்ப தொடரவே செய்யும்.

இப்போதே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசகளும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். சோனியா, பைலட், முலாயம், லல்லு, சரத்பாவார், கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம், என்று டெல்லி முதல் சேலம் வரை குடும்பங்களே ஆதிக்கம் செய்கின்றன. இதற்கு மேல் நீங்கள் கோருவது போன்ற சீர்திருத்தத்தை இப்போதைக்கு கொண்டு வருவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பும் சாத்தியமில்லை. ஒரு வேளை மக்களுக்கு ஏதாவது ஒரு பொய்மான் மாற்றத்தை காண்பிப்பதற்க்காக கொண்டு வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

தேர்தல் கமிஷன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்தல் அரசியலில் இருந்து மக்களின் பங்கேற்பை ரத்து செய்து கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனது. இது குறித்து தேர்தல் நேரத்தில் வெளியிட்ட கட்டுரைகளை பார்க்கவும். பலரும் இந்த தேர்தல் சீர்திருத்தங்களை மாபெரும் வெற்றி என்று பிழையாக பார்க்கிறார்கள்.

இறுதியாக நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: