Saturday, April 19, 2025
முகப்புசெய்திஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

-

மீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று இந்திய தேசபக்தி பீரிட்டு வழிந்தது. இந்த முனையத்தில் வந்திறங்கிய விமானங்களை தூறல் பொழிந்து வரவேற்றார்கள்.

ஆனால் இதே தில்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏற முயன்ற நெரிசலில் சிலர் மிதிபட்டு இறந்தனர். ஏழைமக்கள் பயன்படுத்தும் ரயிலில் இடமில்லை. பிசினஸ் கிளாசில் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் கனவான்களுக்கு 13,000 கோடி செலவு.

புது தில்லியில் விரைவில் ஆரம்பிக்கப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப்பணிகள் மும்மூரமாக நடந்த வண்ணம் உள்ளன. உலக அளவில் மதிப்பே இல்லாத இந்த போட்டிக்காக பல ஆயிரம் மக்களது சேரிப்பகுதிகள் இரக்கமின்றி துடைத்தெறியப்பட்டு நகரத்திற்கு வெளியேதூக்கி எறியப்பட்டுள்ளன. தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கூட ஏமாற்றி இந்த விளையாட்டுப் போட்டிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவமாடுகிறது என்றால் செல்பேசி, வாகனங்கள், டி.வி என்று திசைதிருப்பும் அறிவாளிகளுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஏழைகள் தற்போது அதிகம் பெருகியிருக்கிறார்கள்.

ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த “ வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி” என்ற அமைப்பு, “பன்முக வறுமைக் குறியீடு ” என்ற அறிக்கையின் மூலம் ஒரு உண்மையைக் கூறியிருக்கிறது.

அதன்படி இந்தியாவில் உள்ள பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சேர்த்து 42 கோடியே  பத்து இலட்சம் மக்கள் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் வாழும் 41 கோடி ஏழைகளைக் காட்டிலும் அதிகம் என்று சொல்கிறது அந்த அறிக்கை.

ஆகவே இனி ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஆப்ரிக்காவை சொல்லாமல் இந்தியாவைச் சொல்வதே பொருத்தமானது. வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?

தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று கொடுமைகளின் சாதனைதான் இந்த 42 கோடி ஏழைகள். இனியும் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்பேசி வைத்திருக்கிறார்கள் என்பதால் ஏழைகளே இல்லை என்று கூசாமல் பொய் சொல்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு கட்டுரை விரைவில் வினவில் வரும்.

இந்தியாவின் ஏழ்மை விகிதம் விரைந்து வளர்வதைப் போலவே பில்லியனர்களின் வருமானமும் அதிகரித்தே வருகிறது. ஒன்றின் இழப்பில் மற்றது பெருக்கிறது. பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் ஏழ்மையில் உழலும்போதுதான் சிறுபான்மை முதலாளிகள் கொழுக்க முடியும். இந்த விதியை என்று அடித்து நொறுக்குகிறோமோ அதுவரை ஏழைகளுக்கு விடிவு இல்லை.

இதுபற்றி ஹிந்து பேப்பரில் வந்துள்ள நேர்காணல்: Media hype and the reality of “new” India

தொடர்புடைய பாடல்

Adimai_Sasanam_03_Naadu

_______________________________________________