Wednesday, April 16, 2025
முகப்புசெய்திசாராயம் - கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்!

சாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்!

-

நாங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கல்வி உரிமை பறிபோவதற்கு எதிராகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருவது தாங்கள் அறிந்ததே. முத்துக்குமார் சாவின் பொழுது சென்னையில் தலைமை தாங்கி பல்வேறு போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக கடந்த  ஒரு மாதமாக சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமுல்படுத்தக் கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டும் வருகிறோம். அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகி உள்ளன.

அது போலவே சென்னை, எழும்பூர், தாசப்பிரகாஷ் அருகே உள்ள சந்தோஷ் நகரில் உள்ள எங்களது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை தேவைகளான குடி நீர்,கழிப்பிடவசதி ஆகியவற்றினை பெற்றுக் கொடுத்துள்ளோம். மேலும் இப்பகுதியில் மக்களை சீரழிக்கும் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனைக்கு தடை விதித்து பொது ஒழுக்கத்தினை பாதுகாத்தும், மேம்படுத்தவும் போராடி வருகின்றோம்.

இப்பகுதியில் உள்ள கஞ்சா,  கள்ளச்சாராய வியாபாரி செல்லப்பா என்பவன் ஒரு சமூக விரோதி. இவன் ஏற்கனவே பலமுறை கிரிமினல் குற்றங்களில்  ஈடுபட்டு பல்வேறு வழக்குகளுக்காக சிறை சென்றவன். மேலும் குண்டர் சட்டத்தில் கைதாகியும் சிறைக்கு சென்றவன். செல்லப்பாவும் அவனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கஞ்சா , கள்ளச்சாராய வியாபாரத்தினை செய்து வந்தனர். அதற்கு எதிராக எமது அமைப்பின் சார்பில் பல போராட்டங்களை நடத்தி  அவனின் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்தோம். இதனால் எங்களை பழிவாங்க தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர்  செல்லப்பாவும் அவனது குடும்பமும்.

இந்நிலையில்  23.06.2011 அன்று பு.மா.இ.மு தோழர் தினேஷ் என்பவரின் தாய் மற்றும் தந்தையை கொடூரமாக தாக்கினார்கள் செல்லப்பா மற்றும் அவனது மனைவி ,மகள் ஆகியோர். அவர்களை ஊர் பொது மக்கள் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டனர். அடிபட்ட தோழர் தினேஷ் தாயை தோழர்கள் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மக்களை தாக்கிய சமூக விரோதிகளான செல்லப்பா, அவனது மனைவி மகள் ஆகியோர் எமது தோழர்கள் மீது பொய்ப்புகார் கொடுத்ததன் விளைவாக சந்தோஷ் நகர் கிளையின் செயலர் தோழர்  சுவன் மற்றும் தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் மருத்துவ மனையிலிருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கஞ்சா, சாராயம் விற்று வந்த செல்லப்பா மற்றும் அவனின் குடும்பத்திற்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும் செல்லப்பா மற்றும் அவனது மனைவி, மகள் ஆகியோரை கைது செய்யக்கோரியும் சந்தோஷ் நகர் பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர்  EGMORE F2 காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். செல்லப்பா அவனது மனைவி, மகள் ஆகியோரை கைது செய்ய புகார் அளிக்கப்பட்டது. சமூக விரோதி செல்லப்பா மற்றும் அவனது மனைவி,மகள்  ஆகியோரை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததன்  பேரில் காவல் நிலைய முற்றுகை கைவிடப்பட்டது.

ஆனால் காவல் துறையோ மிகவும் மெத்தனமக இருந்தது. இதனால் செல்லப்பா அவனது மனைவி, மகள் ஆகியோர் சுதந்திரமாக வெளியில் இருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்டு செல்லப்பாவின் மனைவி காவல் துறை ஆணையரகத்தில் தனது மகளை பு.மா.இ.மு தோழர்கள் மானபங்கம் செய்ததாக பொய்ப்புகார் அளித்துள்ளார். இச்செய்தி மாலை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

தொடர்ச்சியாக மக்களின் அடிப்படை தேவைகளுக்காக போராடி வரும் பு.மா.இ.மு-வின் மீது கள்ளச்சாராய , கஞ்சா வியாபாரி செல்லப்பா அவனது மனைவி மகள் மற்றும் காவல் துறையினரின் சதியின் பேரிலேயே இந்த அவதூறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. மாலை ஊடகங்களில் வெளியான, மக்களுக்காக போராடும் தோழர்களின் மீதான இந்த
அவதூறை கண்டித்தும் சமூக விரோதி செல்லப்பா அவனது மனைவி, மகள் ஆகியோரினை கைது செய்யக்கோரியும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 400க்கு மேற்பட்ட மக்கள் சாலை மறியல் செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியலில் சமூக விரோதி செல்லப்பா மற்றும் அவனது மனைவி , மகளை கைது செய்யக்கோரியும், சமூக விரோதிக்கு துணைபோகும் காவல் துறையை கண்டித்தும் முழக்கங்களிடப்பட்டன.

மழையில் நடந்த இச்சாலை மறியல் காரணமாக காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில்மூன்று உதவி ஆணையர்கள், இரண்டு ஆய்வாளர்கள், 15 துணை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ” பு.மா.இ.மு தோழர்களுக்கு இவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கிறது அதனாலேயே நாங்கள் செல்லப்பா மனைவி அளித்த புகாகை நம்பவில்லை, அதன் மீது நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.செல்லப்பா  மனைவி அளித்த புகாரை விரைவில் நிறுத்தி விடுகின்றோம்.செல்லப்பா மற்றும் அவனது மனைவி மகளை விரைவில் கைது செய்து விடுகின்றோம் ” என்று வெங்கடாசலபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய உதவி ஆணையர்கள் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இம்மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் கார்த்திகேயன்” இருநாட்களுக்குள் செல்லப்பா மற்றும் அவனது மனைவி மகளை கைது செய்யாவிட்டால்மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்தார்.

_____________________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

______________________________________________________________________________