Saturday, April 19, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாஎனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?

-

எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?வீடு நியாய வாடகையுடன் இருந்தது.
அமைந்துள்ள இடத்திற்கு
பெரிய சிறப்பில்லை.
வீட்டு உரிமையாளர் பெண்
அங்கு வசிக்கவில்லை என்பதை சொன்னாள்.
வேறொன்றும் பேச இருக்கவில்லை
வாக்குமூலமாக சொல்ல ஒன்றை தவிர.

‘மேடம்’ நான் ஆரம்பித்தேன்.
‘ஒரு தேவையற்ற பயணத்தை
தவிர்க்க விரும்புகிறேன்– நான் ஒரு ஆப்பிரிக்கன்’.

மறுமுனையில் நிசப்தம்.
அந்த மவுனம் செயற்கையாக
அழுத்தம் பெற்ற ஒரு நற்குணம்.
குரல் உயிர் பெற்ற போது
உதட்டு சாயம் பூசப்பட்டிருந்தது.
தங்க உருளையான நீண்ட சிகரட்-
பிடியின் ஒலி கேட்டது.
நான் சிறைபட்டிருந்தேன்

‘எவ்வளவிற்கு கருமை?…..’
எனக்கு சரியாகவே கேட்டது……..
‘நீங்கள் லேசான கருப்பா?
அல்லது ரொம்ப கருப்பா?’ பட்டன் B , பட்டன் A
வெளியேறாத மூச்சுக்காற்றின் துர்நாற்றம்
அந்த பொது தொலைபேசியகத்தை நிறைத்தது.
சிவப்புநிற தொலைபேசியகம்.
சிவப்பு அஞ்சல் பெட்டி.
சிவப்பு நிற ஈரடுக்கு ஆம்னி பேருந்து சாலையில்.

ஆம். எதுவும் கனவல்ல.
அமைதியும், சரணாகதியும் அவமானகரமாக இருந்தது.
அது வாய்ப்பூட்டை மெல்ல
திறந்து விளக்கம் கோரியது.
மீண்டும் அவள், அழுத்த மாறுபாடுடன்– நீங்கள்
‘ரொம்ப கருப்பா? அல்லது லேசான கருப்பா?’
உண்மை இப்போது மிகவும் உறைத்தது.

‘உங்கள் கேள்வி– சாதாரண சாக்லேட்டா?
அல்லது பால் சாக்லெட்டா? என்று கேட்பது போலவா’.
அவளின் அணுகுமுறை உணர்ச்சியற்றும்
எதிர்கொள்ள இயலாமலும் இருந்தது.
மெதுவாக ஒலி அளவை வேறுபடுத்தி நான் குறிப்பிட்டேன்.

‘மேற்கு ஆப்ரிக்க சீப்பியா’ — ஏதோ யோசித்தவனாக,
‘அது எனது கடவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது’.
எனது மனம் உடல் வண்ணத்தை
ஆராய மவுனம் பூண்டது.
அவள் குரலை வேறுபடுத்தி கடுமை காட்டினாள்.

‘என்ன அது? எனக்கு அது
என்னவென்று புரியவில்லை.
கருப்பு தலைமுடியை உடைய
வெள்ளைப் பெண் போலவா?
அப்படியிருந்தாலும் கருப்பு தான் இல்லையா?’

‘முழுவதுமாக அப்படியில்லை.
முகவமைப்பில் நான் ஒரு ப்ரூனட்’
‘ஆனால், மேடம் என்னுடைய மற்றவற்றையும்
பார்க்க வேண்டும்,நீங்கள்’.
‘எனது உள்ளங்கையும், கால்பாதமும்
வெளிறிய மஞ்சள் நிறம்’.
‘உட்காருவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக–

மேடம் —
எனது பின்புறக் குண்டி பளபள
கரும் பறவையின் நிறத்தில் இருக்கிறது’.
‘ஒரு நிமிடம் மேடம்’–
மறுமுனையில் இடியோசை கேட்டது— ‘

மேடம்’ —
நான் குழைந்தபடி,
‘நீங்கள் அதனை பார்க்க விரும்புகிறீர்களா?’

வோல் சோயிங்கா

குறிப்புகள்:

சீப்பியா (sepia) — அடர் மாநிறம்
ப்ரூனட் (brunette)– கரும் பழுப்பு தலைமயிரும் வெள்ளைத் தோலும் உடையவர்.

Telephone Conversation by Wole Soyinka

ஆசிரியர் குறிப்பு:
மேற்கு நைஜீரியாவின் யோருபா நாட்டில் 1934 -இல் பிறந்த வோல் சோயிங்கா லீட்ஸ் பல்கலைக்கழக படிப்புக்கு பின்னர் லண்டனில் குடியேறினார். தனது எழுத்து இயக்கத்தின் பெரும் பகுதியை லண்டனில் மேற்கொண்டார். அவருடைய The Lion and the Jewel நாடகம் பெரும் கவனத்தை பெற்றது. ஒரு வெள்ளை இளைஞனின் ‘முற்போக்கு’ வசியம் ஒரு ஆப்ரிக்க இளம்பெண்ணிடம்  தோற்பதை அழகாக சொல்லியிருப்பார். வெள்ளையர்களின் ‘நாகரிக’ உலக கண்ணோட்டம் கறுப்பின மக்களின் யதார்த்த, எளிமையான வாழ்க்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டிருப்பதை நாம் அறிய முடியும்.

இக்கவிதை 1950 –களில் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் வோல் சொயிங்காவால் எழுதப்பட்டது. வீடு தேடும் கறுப்பினத்தவருக்கு அவரின் நிறம், இனம் காரணமாக ஒரு வெள்ளையினப் பெண் மறுக்கிறாள். அவளுடைய கேள்வியில் தொனித்த கேலியை புரிந்து கொண்டவர், அதே மொழியில் பதிலடி  தருகிறார். சென்னையில், ‘வெஜிட்டேரியன் ஒன்லி’ என்று அட்டை தொங்க விடப்படும் மாம்பலம், மைலாப்பூர் பகுதிகளில், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் பார்ப்பன சூழ்ச்சியை, நமது பேச்சிலர்கள், தலித்துக்கள் இவ்வாறு தான் எதிர்கொள்கிறார்களோ?

_____________________________________________________________

சம்புகன்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்