Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

-

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

மூவர் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு போர்க்குணமிக்க போராட்டங்களை தமிழக மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட உணர்விற்கு பொருத்தமில்லாத கோழைகளாக, துரோகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாகத்தான் பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் தூக்குதண்டனையை ரத்து செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை என்று பாசிச ஜெயா கூறியிருப்பதும், அதில் கருணாநிதி இரட்டை வேடம் ஆடுவதாக சொல்லியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. உள்ளூர தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆசை கொண்டிருக்கும் ஜெயலலிதா ஒரு புறம் என்றால் மறுபுறம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அரசியல் நியாயத்தை தூக்கிலேற்றுகிறார் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.”

கருணாநிதி அறிக்கையின் பின்னே பல மறைபொருள் விசமத்தனங்கள் மறைந்திருக்கின்றன.

முதலில் அவர் ஆட்சியில் இருந்த போது 2000ஆம் ஆண்டு கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது அவர்தான். அப்போது இந்த அறிக்கை வாசகங்கள் அவருக்கு நினைவில் வரவில்லை போலும். அப்போது கருணாநிதி ஏன் அப்படிச் செய்தார்? உண்மையிலேயே அவருக்குத் தமிழுணவர்வு இல்லையா? அப்படி இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.

ஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சாமி, தினமலர், இந்து முதலான பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி அப்படிச் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கனவே இந்தக்கும்பலின் சதியால் ஆட்சியிழந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவும் கூட அவர் அக்கும்பலை எதிர்த்து நடந்ததல்ல. என்றுமே கருணாநிதியை பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொண்டவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அத்தகைய ஜென்ம பகை அந்தக் கும்பலோடு கிடையாது. தன்னை ஏன் அவர்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி அவருக்கு இப்போதும் உண்டு.

கொள்கையை விட தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம் என்ற வகையிலும் கருணாநிதி அப்படி ஒரு முடிவை எடுத்து கருணை மனு நிராகரிக்க காரணமாக இருந்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் பிழைப்புவாதப் பாரம்பரியம் தந்திருக்கும் மரபுச் சொத்து.

சரி, இப்போது ஆட்சியில் இல்லையே, தற்போதாவது கொள்கையை வெளிப்படையாக சொல்லி மரண தண்டனையை ரத்து செய்யக் கோரலாமே? யார் தடுத்தது? அதிலும் பிரச்சினை இருக்கிறது. காங்கிரசு கூட்டணி அரசின் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் கருணாநிதி, 2ஜி ஊழலில் செருப்படி பட்ட பிறகும், கனிமொழி, ராஜா சிறையில் நீடித்திருந்தாலும் காங்கிரசு அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஜெயா அரசின் கைது நடவடிக்கைகளால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் நிலையில் காங்கிரசின் தயவு என்பது கொள்கையை விட மதிப்பு வாய்ந்த விசயம்.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தாலும் அவர் தூக்குத் தண்டனையை விரும்பியிருக்க மாட்டார் என்று சோனியா மனக் குளிர உளற வேண்டிய அவசியம் என்ன? இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர்? அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே? அந்த வகையில் போர்க்குற்றவாளி என்றாலும், போர்க்குற்றத்திற்கு தண்டனை என்ற முறையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜீவ் காந்திதானே?

சரி நேரடியாக ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லாமலே அவரது  கொலை என்பது அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான எதிர்வினை என்றாவது சொல்லலாமே? அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே? இத்தனை சந்து பொந்து இருந்தும் அதையெல்லாம் விடுத்து இப்படி அப்பட்டமாக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அப்பாவிகளை ஏன் இழிவு படுத்த வேண்டும்?

பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா? அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன?

கருணாநிதி அவர்களே, நீங்கள் மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் சற்று அமைதியாக இருங்கள். நான் வடிப்பது முதலைக் கண்ணீர்தான் என்று அந்த அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தாமலாவது இருங்கள். அதுவே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டாக இருக்கட்டும். மேலும் உங்கள் வாரிசுகள் சிலர் சிறையில் இருக்க, அவர்கள் ‘சம்பாதித்த’ சொத்துக்களை காப்பாற்றும் அவஸ்தையில் சிறை செல்லாத வாரிசுகள் இருக்க, நீங்கள் வாரிசுகளை காப்பாற்றும் அரசியலை மட்டும் கவனியுங்கள். தூக்குத் தண்டனை ரத்து குறித்து தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: