Monday, April 21, 2025

உப்பிட்டவனை உடனே கொல்!

-

ஆப்கானிலும், ஈராக்கிலும் அப்பாவி மக்களைக் கொன்று வரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அறிந்திருக்கிறோம். குஜராத்திலும் இப்போது ஒரிசாவிலும் சிறுபான்மை மக்களை நரவேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தையும் இதன் எதிர் விளைவாய் குண்டுகளை வெடிக்கச் செய்யும் இசுலாமிய தீவிரவாதத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் படித்தவர்களின் பயங்கரவாதம்? நாளிதழ்களின் மூலையில் சிறுசெய்தியாய் வந்து போன இச்சம்பவத்தைப் படியுங்கள்.

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த அறுபது வயது ராமசாமி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஒரு மகனுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். மற்ற மூன்று வாரிசுகளும் வெவ்வேறு நகரங்களில் வாழ்கின்றனர். ராமசாமி மட்டும் சென்னை தாம்பரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது உடன்பிறந்தவரின் மகனான அருணுடன் வசித்து வந்தார். பிள்ளைகள், மனைவி அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருக்க ராமசாமி பெரும்பாலும் தனியாகவே வாழ்வைக் கழித்து வந்தார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெஞ்சமின் பெர்னார்டு ஊரிலேயே ராமசாமிக்கு அறிமுகமானவன். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கும் இவனுக்கு சென்னையிலேயே ஒரு வேலையை ராமசாமி வாங்கித் தந்திருக்கிறார். அச்சுதன்(24), ராஜா டேவிட்(24) இருவரும் பெர்னார்டின் நண்பர்கள். மூவரும் தாம்பரத்திற்கு அருகேயுள்ள சீலையூரில் சேர்ந்து தங்கியிருக்கின்றனர். இதில் டேவிட் வங்கி ஒன்றில் வசூல் முகவராகவும், அச்சுதன் நகரத்துக் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.ஸி படிக்கும் மாணவனாகவும் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் அடிக்கடி ராமசாமியின் வீட்டுக்கு சென்று வருவது உண்டு.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் இது போன்ற இளைஞர்களுக்கு தேவைப்படும் முக்கியமான விசயம் பணம். விலையுர்ந்த உடைகளும், இரு சக்கர வாகனங்களும், மேட்டுக்குடியினர் சங்கமிக்கும் உணவகங்கள், திரையரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள் முதலானவற்றிற்கு செல்வதும் என எல்லாவற்றுக்கும் பணம் சற்று அதிக அளவில் தேவைப்படும். இவற்றைச் செலவழிப்பதற்கு அருகதை இல்லையென்றால் கேவலம் ஒரு சுமாரான பெண்ணின் நட்பைக்கூட கைப்பற்ற முடியாது. தன் வயதினையொத்தவர்கள் இந்த ஆடம்பர வாழ்வை வாழும்போது அவற்றுக்கு வழியில்லாதவர்கள் அடையும் மனஅழுத்தம் சற்றே அதிகம்தான். கண்ணெதிரே இன்பத்தை அளிக்கத் தயாராக ஒரு சொர்க்கம் காத்துக்கொண்டிருக்கும் போது அதில் நுழைவதற்கு அனுமதி இல்லையென்றால் என்ன செய்வது?

இந்த மனப்போராட்டத்தில் தத்தளித்த நண்பர்கள் எப்படியாவது இந்த சென்னை சொர்க்கத்தில் நுழைவது என்று கொள்கை முடிவெடுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் வந்தடைந்த முடிவு பெரியவர் ராமசாமியைக் கொலை செய்து வீட்டிலிருக்கும் நகை, பணத்தை அபகரிப்பது. கடந்த 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை தங்கள் முடிவை அரங்கேற்றுவதற்காக ராமசாமியின் வீட்டிற்கு மூவரும் சென்றனர். ஆனால் அச்சுதனுக்கும், டேவிட்டுக்கும் சற்று தயக்கம் இருந்ததால் காரியம் கைகூடவில்லை. தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிய மூவரும் மீண்டும் விவாதித்திருப்பார்கள் போலும். கிடைக்கப்போகும் பணமும் அது தங்களுக்கு தரப்போகும் இன்பத்தையும் பெர்னார்டு விளக்கி இருவரையும் வசமாக்கியிருக்கக்கூடும்.

இந்த தெளிச்சலுக்குப் பின்னர் அடுத்த நாள் அருண் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மூவரும் மதியம் அந்தப் பெரியவர் வீட்டிற்குச் சென்றனர். மூவரையும் வரவேற்ற அந்தப் பெரியவர் தானே சமையல் செய்து சாப்பாடு கொடுத்தார். பணியாள் இன்றி தன் பணிகளே தானே செய்து கொண்டு வாழும் அந்த மூத்த குடிமகனின் கையால் சாப்பிட்ட கையுடன் அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தனர். இரவும் வந்தது.

அதுவரை கலகலப்பாய் பேசிக்கொண்டு இருந்தவர்கள் நள்ளிரவை நெருங்கும் நேரம் பெரியவர் தொலைக்காட்சியை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் பொது அதை அரங்கேற்றினார்கள். பெர்னார்டு ஒரு துண்டினால் ராமசாமியின் முகத்தை இறுக்கமாக மூடிக்கொள்ள அச்சுதன் ஒரு சுத்தியலால் தலையில் ஓங்கி பலமுறை அடிக்க என்ன ஏது என்று அறியாமலே ராமசாமி அமைதியானார். பின்னர் அவரை குளியலறையில் இழுத்துப் போட்டுவிட்டு எல்லா குழாய்களையும் திறந்து வைத்தனர். அப்போது அவரது கை மட்டும் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் டேவிட் ஒரு கத்தியால் அவரது தொண்டையை அறுத்து இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தினான்.

பிறகு வீட்டிலிருந்த 85,000 மதிப்பிலான நகைகளையும், 35,000 ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அன்றிரவே நாகர்கோவிலுக்கு சென்று விட்டனர். உடனே நகைகளை விற்றவர்கள் காசோலை மூலம் ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்த ஐந்து இலட்சத்தை சென்னை வந்து எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தக் கொடூரமான கொலையை விசாரித்த போலீசு முதலில் பெரியவருடன் தங்கியிருந்த அருணின் மேல் சந்தேகப்பட்டது. சம்பவம் நடந்த அன்று அருண் வேறொரு நண்பர் வீட்டிற்குச் சென்றது தெரிய வந்ததோடு, பெர்னார்டும் மற்ற நண்பர்களும் அடிக்கடி வந்து போவதை அருண் தெரிவித்ததும் புலனாய்வுக்கு வழி பிறந்தது. குற்றவாளிகளும் பிடிபட்டார்கள். குற்றத்தையும் செய்த விதத்தையும் ஒப்புக் கொண்டார்கள்.

உயர் கல்வி கற்ற இந்த சமவயதினையொத்த இளைஞர்கள் தங்களின் குடும்ப நண்பரும் வயோதிகருமான ஒரு பெரியவரை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்து பணத்தை திருடியிருக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இவர்கள் எவரும் தொழில் முறைக் குற்றவாளிகள் இல்லை. உச்சந்தலையில் சுத்தியலால் அடித்து மண்டை ஓட்டைப் பிளந்து ஒரு முதியவரை விகாரமாக கொல்லும் மனநிலையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?

எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வருவதாக சொல்லப்படும் இந்தியாவில் இப்பொது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல பொருட்கள் வந்து விட்டன. ஐ போனும், பல நூறு வசதிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், அதி நவீனக் கார்களும், நட்சத்திர விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும் சனி, ஞாயிறு நடக்கும் நடன மது-மாது விருந்துகளும், இலட்சக்கணக்கான பொருட்களை அடுக்கி அழகு பார்க்கும் ஹைப்பர் மார்ட்டுகளும், நூற்றுக்கணக்கான வகைகளைக் கொண்ட காஃபி ஃஷாப்புக்களும், இலட்சங்களை அள்ளிக் கொடுக்கும் ஐ.டி துறையும் எல்லாமும் வந்துவிட்டன.

வாழ்வதற்காக பொருட்கள் என்பது போய் பொருட்களை நுகர்வதற்காக வாழ்க்கை என்றாகி விட்டது. விதவிதமான பொருட்களை நுகருவதற்கு கற்றுக் கொண்ட நடுத்தர வர்க்கம் அதற்கேற்றவாறு மனித உறவுகளையும் மாற்றிப் போடுகிறது. பொருட்களின் மேல் கொண்ட பாசம் மனிதர்களின் மேல் வருவதில்லை. வசதியான வாழ்க்கைக்கு ஏங்கும் மனது, அதற்காக சில உறவுகளைப் பலியிட வேண்டும் என்றாலும் தயங்குவதில்லை. பொருட்களைத் தர வக்கில்லாத உறவுகள் இரக்கமின்றி கைகழுவப்படுகின்றன. வாழ்வில் முன்னேறுவதற்கு நேர்மையும், அறமும் தடையென்றால் அவற்றைத் தூக்கி எறிவதற்கு இன்றைய தலைமுறை தயங்குவதில்லை. அதே போல தனது முன்னேற்றத்திற்க்கு அநீதியான காரணங்கள் தடை செய்கின்றன என்றால் அதற்காக போராட்டப் பாதையை விடுத்து குறுக்கு வழிகளையே நாடுகிறார்கள்.

படிப்பும் வசதியான வாழ்க்கையும் மட்டுமே நல்ல விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. இன்றைய கிரிமனல்கள் ஆனந்த விகடன் சித்தரிக்கும் பெரிய மீசை வைத்த முரடர்கள் போன்று இருப்பதில்லை. அவர்கள் உயர் கல்வி கற்றவர்கள். பங்குச் சந்தை வர்த்தகமோ, ரியல் எஸ்டேட் வணிகமொ எதிலும் ஏமாற்றுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

வாழ்வின் முன்னேற்றமே கிரிமினல் மயமாகி வரும்போது இளைய தலைமுறை இப்படி வக்கிரமான செயல்களுக்குள் இறங்குவதில் வியப்பில்லை. இது இந்தக் காலம் கற்றுக் கொடுக்கும் பண்பு. உலகமயமாக்கம் மேற்கில் குடி கொண்டிருந்த இந்த சமூக வன்முறைகளை – காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக குடும்பத்தினரையே கொலை செய்வது போன்ற – இப்போது கிழக்கிற்கும் இறக்குமதி செய்திருக்கிறது.

ஆயினும் கை நனைத்த வீட்டில் திருடக்கூடாது என்பது தொழில் முறைத் திருடர்கள் கூட கடைபிடிக்கும் ‘தர்மம’. பிக்பாக்கட் அடிக்கும் திருடர்கள் கூட இத்தகையக் கொடூரக் கொலைகளைச் செய்வதில்லை. கிரிமினல் தொழிலில் புதிய அறங்களை உருவாக்கியிருக்கும் இந்த இளைஞர்கள் யார்?

சுருங்கக் கூறின் நம்மைச் சுற்றியிருப்பவர்களில் யார் கிரிமினல்களை என்பதும், அவர்கள் எப்போது குற்றமிழைப்பார்கள் என்பதையும் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. ஏனெனில் அவர்கள் படித்தவர்கள்! சுற்றியிருக்கும் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க அவர்களுக்குத் தேவைப்படும் பணம் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். இனிய வாழ்வின் புதுமைகளை புதிய விளம்பரங்கள் போதிப்பதற்கேற்ப இவர்களது வெறியும் அதிகரிக்கும். அது எப்போது வெடிக்கும் என்பது தெரியாது.

நமத்துப் போன வாழ்வை சூடேற்றுவதற்குத் தேவைப்படும் பணம் அவர்களுக்குத் தேவை. அது கிடைப்பதற்காக குரல் வளையை அறுப்பார்கள் அல்லது குடலையும் உருவுவார்கள். இந்தப் படித்த தீவிரவாதிகளை அரசியல் தீவிரவாதிகளைப் போல முன்கூட்டியே கைது செய்வது நடக்கக் கூடிய காரியமா என்ன? ஆதலால் அடுத்த தீவிரவாதிகள் தங்கள் செயலை அரங்கேற்றுவதற்காக காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்வது?