
மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் .
அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்கள். உடனே தோழரும், வேறு சிலரும் கண்டித்தும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். தோழரின் எச்சரிக்கையை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கருதிய அந்த கும்பல். அன்று இரவே தங்கள் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு தோழரை கொல்ல வந்துள்ளனர். அன்று இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தோழரை கிரிமினல் கும்பல் வயிற்றில் கத்தியால் குத்தி சாய்த்து ஒடிவிட்டனர்
குத்துப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தோழரை மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் உயிர் அடங்கி விட்டது. பின்பு உடலைப் பிரேதப் பரிச்சோதனை முடித்து அக்டோபர் 27ம் தேதி அன்று மதியம் பெறப்பட்டு, யா.ஒத்தக்கடையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களும், சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை ஊர்வலமாக விண்ணதிர முழக்கமிட்டனர்.
தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. மற்றவர்களை சாட்சியங்கள் இல்லை என பூசி மெழுகி வருகிறது. மறுநாள் பிற குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். இந்த படுகொலையினால் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யா.ஒத்தக்கடையில் அமைந்துள்ள யானை மலையை சிற்ப நகரம் உருவாக்கப் போகிறோம் என்று கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு திட்டம் போடப்பட்டது. இத்திட்டத்தை எதிர்த்து “யானை மலை பல்லாயிரம் கோடி மதிப்புடைய கிரானைட் கற்களால் ஆனது”, “அதை கொள்ளையடிப்பதற்கான சதி தான் சிற்ப நகரம்” என்றும் , ” இத்திட்டம் எவ்வாறு மக்கள் விரோதமானது” என்றும் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு மக்களிடையே இயக்கம் எடுத்தது. அந்த இயக்கத்தில் பு.ஜ.தொ.முவின் சரியான அரசியல் நிலைப்பாடும், செயல்பாடு கண்டு ஈர்க்கப்பட்டு அமைப்போடு அறிமுகமாகி நெருக்கமானார் தோழர் செந்தில்.
அமைப்பில் இணைந்த பின் அவர் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு அமைப்பு, அரசியல் வேலையும், அது புதிய ஜனநாயகம் பத்திரிகையை மக்களிடம் அறிமுகபடுத்துவதிலாகட்டும், நிதி வசூலாகட்டும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலாகட்டும், அனைத்திலும் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்கிற அளவிற்கு தோழர் உற்சாகத்தோடும், முனைப்போடும், முன்னணியாகவும் செயல்ப்பட்டார்.
சமச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி நடந்த போராட்டங்களில் தனி ஆளாக நின்று மக்களிடையே பிரசுரம் வினியோகிப்பது, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களிடம் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசி அப்போராட்டங்களுக்கு ஆதரவை திரட்டினார். அரசு பள்ளி மாணவர்களை திரட்டி போராட முயற்சி எடுத்தார்.
ஒரு முறை வியாபார விசயமாக வெளியூர் சென்று திரும்பும் போது, சாலையில் விபத்தில் சிக்கி அடிப்பட்டு கிடந்தவரை பார்த்தவுடன், தான் வந்த பேருந்தை நிறுத்தி இறங்கி கொண்டு ஆம்புலன்ஸை வரச் செய்து விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி பின் தான் வீடு வந்து சேர்ந்தார். முகம் தெரியாத நபர்களை கூட நேசிக்கும் பண்பாளர்.
ஒரு விசயம் தவறு என்று கருதினால் அதற்கு எதிராக விடாப்பிடியாக போராடக் கூடியவர், அதில் நண்பர்கள் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளாத நேர்மையாளர். ஒரு முறை தனியார் பள்ளியின் வேனை தோழரின் நண்பர் ஒருவர் மது அருந்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு விட டிரிப் அடிக்க போனார், அதை கண்டித்து, “மது அடித்து விட்டு டிரிப் அடிக்க கூடாது பல குழந்தைகள் உன்னை நம்பி வருகிறது” என்று வேனை எடுக்கவிடவில்லை. பள்ளி நிர்வாகத்திடமும் போராடி வேனை எடுக்கவிடவில்லை, பின்பு வேறு ஒரு ஒட்டுநரை வைத்து வேன் எடுக்கப்பட்டது.தோழரின் நடவடிக்கையை பார்த்த பொதுமக்களில் பலரும் பாராட்டினர்.
அதே போல மற்றொரு நண்பர் ஒரு பெண்னை காதலித்து ஏமாற்றி விட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியமால் அந்த நபருக்கு எதிராக காவல்துறை வரை சென்று போராடினார்.
தோழர் அமைப்பில் இணைந்த பிறகு சாதி சங்கத்தினர் ஒரு நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தை பேனரில் போட்டதற்கு எதிராக சாதி சங்கத்தினரை அம்பலப்படுத்தி, சண்டையிட்டு தனது புகைப்படத்தை பேப்பர் வைத்து அவர்களை வைத்தே ஒட்டி மறைக்க வைத்தார்.
யார் எப்போது உதவி கேட்டாலும் செய்வது, அவசர தேவைக்கு இரத்ததானம் செய்வது, இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என மனிதாபிமான இதயத்தொடும் இருந்தார்.
தனது வியாபாரத்தில் எப்போதும் நேர்மையையும், மக்களின் மீது அக்கறையும் கொண்டிருந்தார். டிமாண்ட் அதிகம் உள்ள சரக்குகளுக்கு கூட எப்பொதும் வைக்கும் லாபத்திலேயே விற்பனை செய்வார், கூடுதலாக லாபம் வைக்க மாட்டார், கேட்டால் இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தானே என்று ஈரம் சொட்ட பேசுவார்.
டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதில் பேப்பர் கப்பை பயன்படுத்த தொடர்ந்து வலியுறித்தி சுற்று சூழலை நேசித்தார்.
காவல்துறையினரையும், அதிகாரவர்க்கங்களையும் எதிர்க்கொள்வதில் துணிச்சலும், போர்க் குணமும் கொண்டவர். ஒரு முறை உயர்நீதிமன்ற சுவரில் அமைப்பு சுவரொட்டியை ஒட்ட சென்றபோது இங்கே சுவரொட்டி ஒட்ட கூடாது என காவல்துறையினர் எச்சரித்தனர். நீதிபதிகளை பாராட்டி சுவரொட்டி ஏன் இங்கே ஒட்டப்பட்டுள்ளது என காவலரை கேள்வி கேட்டு திணறடித்தார். பின் நாங்கள் மக்களுக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்யதான் சுவரொட்டி ஒட்டுகிறோம் ஆகையால் இங்கே தான் ஒட்டுவோம் என்று போராடி சுவரொட்டியை அங்கேயே ஒட்டி விட்டுவந்தார்.
தோழர் அமைப்பிற்க்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தனது பழைய வர்க்க பண்புகளை துச்சமாக தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு வெகுவிரைவில் தன்னை போர்க்குணமாகவும், எளிமையாகவும் மாற்றிக் கொண்டார். தோழர் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே யாராவது அவருக்கு அறிமுகமானவர் இருப்பார்கள், அந்த அளவிற்கு மிகவும் சரளமாக பழகக் கூடியவர். எந்த ஒரு சூழலிலும் ஒரு விசயத்தை முடியாது என்று கைவிடமாட்டார்.
சோர்வுற்றிருக்கும் தோழர்களையும் உற்சாகப்படுத்தி அமைப்பு வேலைகளுக்கு அழைத்து செல்வார். வியாபார விசயமாக செல்கிற ஊர்களில் கூட புரட்சிகர அரசியலை பிரச்சாரம் செய்யக் கூடியவர். விரைவில் மிகச்சிறந்த, தகுதிவாய்ந்த தோழராக வளர்வார் என்று அமைப்பின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார்.
தனது குடும்பத்தையும் கூட அரசியல்படுத்தினார், காதல் மனைவி கலைவாணியையும் அமைப்பு , அரசியலை ஏற்கச் செய்து வேலைகளில் ஈடுபடச் செய்தார். அமைப்பு போராட்டங்களுக்கு, கூட்டங்களுக்கு குடும்பத்தோடு பங்கேற்று மற்ற தோழர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக திகழ்ந்தார். தோழருக்கு 3 வயதேயான ஒரு குழந்தையும், பிறந்த ஏழு நாள்களே ஆன ஒரு குழந்தையும், என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
தோழர் கொல்லப்படுவதற்கு சற்று முன் கூட அத்வானியின் ரத யாத்திரையை அம்பலபடுத்தி அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவதற்கு தேவையான பசையை கரைத்தும், சுரொட்டிகளை தயாராக வைத்து விட்டும் சென்றார். இறுதியில் அவர் கரைத்த பசையிலேயே அவரின் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்படும் துயரம் தோழர்களின் நெஞ்சை பிழிந்தது.
” துரோகிகளின் மரணம் இறகை விட இலேசானது, மக்களின் நலன்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம் மலையை விட கனமானது”
என்றார் மாவோ. அதேபோல நம்மை எல்லாம் யானை மலையை விட கனமான துயரத்தில் ஆழ்த்தி விட்டது தோழரின் மரணம்.
தோழரின் உயிரைப் பறித்தது நான்கு இளம் கிரிமினல்கள் என்றாலும், அவர்கள் ஒரு கருவி மட்டுமே. கருவி தயாரான இடம் இந்த செல்லரித்த சமூகம் தான். வாழ்க்கையைப் பற்றி எந்த மதிப்பிடுகளும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கண்ணேட்டமும், ரவுடியிசத்தை கொண்டாடுகிற சினிமாக்கள், மனித பண்புகளை இழக்கச் செய்யும் சாராய வியாபாரமும் தான் கருவி தயாராகும் களம்.
இந்த கொலைக்களங்களை ஒழிக்காத வரை நாம் இன்னும் இத்தகைய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையோடும், இந்த அழுகி நாறும் சமூகத்தை வெட்டி வீசும் வரை தோழர் செந்திலின் புரட்சிகர உணர்வையும், போர்க்குணத்தையும், இலட்சியக்கனவுகளையும், நற்பண்புகளையும் நெஞ்சில் ஏந்தி போராட உறுதியேற்போம்.
____________________________________________________________
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மதுரை
____________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்