Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காபோபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

-


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர். அப்சல் குருவைத் தூக்கில் போட்டால்தான் பா.ஜ.க மற்றும் அன்றைய அரசாங்க சதிகள் மறைக்கப்படும் என்பதால் அவர்களும் ஊடகங்களும் இதை வலியுறுத்துகின்றனர். அப்சல்குருவைத் தண்டிக்க போதிய முகாந்திரங்கள் இல்லையென்றாலும் தேசத்தின் பொதுப்புத்தியை கணக்கில் கொண்டு இந்த தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. கசாப்பும் மற்றைய பயங்கரவாதிகளுடன் சுமார் 150 பேரை கொலை செய்திருக்கின்றனர். இதையும் தேசத்தின் மனசாட்சி வரவேற்கவே செய்கிறது.

ஆனால் போபால்?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?

1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.

1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.

இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.

கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?

பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.

ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!