Wednesday, April 16, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்சிவப்புச் சட்டை!

சிவப்புச் சட்டை!

-

சிவப்புச் சட்டை!
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி
உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும்,
கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம், என
இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்
இடியென இறங்கியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் போராட்டம்!

பார்ப்பன பாசிச ஜெ! அரசே
உடனே பாட புத்தகங்களை வழங்கு!
தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை
ஒழித்துக் கட்டுவோம்!
கட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்!

மின்னல் கீற்றுக்களாய் வெடித்துக் கிளம்பிய முழக்கங்களால்,
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பு.மா.இ.மு. மூட்டியத் தீ
போயசு தர்ப்பையை போட்டு பொசுக்கியது!

கல்விக்குத் தெய்வம் சரஸ்வதியாய் இருந்திருந்தால்
இந்நேரம் கல்லாவில் பங்குகொடுத்து அவளையும்
சசிகலாவைப் போல் தோழியாக்கி துணைக்குச் சேர்த்திருப்பார் ஜெ!

தடுமாறும் மாணவர், பெற்றோரை தடுத்தாட்கொண்டு
போராட புதுத்தெம்பளித்து, இன்றைய தேதியில் –
‘கல்விக்குத் தெய்வமாய்’ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
காட்சியளிப்பதால்,
சும்மா விடுவாரா அம்மா!

அம்மாவுக்குப் பிடித்தது இரண்டே இரண்டுதான்,
ஒன்று – அம்மா எழுந்து பேசினால்
எல்லோரும் பெஞ்சைத் தட்ட வேண்டும்;
அம்மாவை எதிர்த்துப் பேசினால்
அவர் நெஞ்சைத் ‘தட்ட’ வேண்டும்!

அம்முவுக்கு அடங்குமோ பு.மா.இ.மு!
அடங்காமல் போராடியதால்
அடித்து உதைத்து கைது, சிறை..

புழல் சிறைக்கு அனுப்பியவர்கள் போக
பதிமூன்று பேர் இருபத்தியோரு வயதுக்கும் கீழே உள்ள
இளங் ‘குற்றவாளிகள்’ என்று சைதை
கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வழிநடத்திச் சென்ற ஒரு தோழரைத் தவிர
மற்ற மாணவர்களுக்கு சிறை புதிது.
ஏற்கனவே அங்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையிருக்கும்
இளம் கைதிகள் புதியவர்களை அடிப்பார்கள், அதட்டுவார்கள்,
வேலை வாங்குவார்கள்… என்ற எண்ணத்தில் புதியவர்கள்
அச்சமுற்ற விழிகளுடன் அடியெடுத்து வைத்தனர்.

சிறை ஒன்றும் உலகை விட்டு தனியே இல்லை
சமூகத்திலுள்ள சகல பிரச்சினைகளும் சிறையிலும் உண்டு!
சிறைபடுத்தலோடு முடிவதில்லை… சிறைக்குள்ளும்
தொடர்கிறது போராட்டம்… என புதியவர்களுக்கு
புரியவைத்து நிமிரவைத்தார் வழிநடத்திய தோழர்.

‘என்ன எல்லாம் சமச்சீரா… சரி, சரி எல்லாரும் சட்டைய கழட்டு!
அங்க மச்ச அடையாளம் காட்டு’ என ஆணையிட்டார் ஜெயிலர்.

‘நாங்க ஒண்ணும் கிரிமினல் அல்ல, அரசியல் கைதிகள்
சட்டையை கழட்டமாட்டோம் என பதிலறுத்தனர் மாணவர்கள்.

ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால்
வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும்
சரத்குமார் வாழும் நாட்டில்,
ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின்
உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள்
வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.

‘ஏய் என்ன… விட்டா எங்கிட்டயே எதுத்து பேசுற?
சட்டப்படி சட்டைய கழட்டி மச்சம் பாக்கணுன்டா?’

‘சார்! வாடா போடான்னு பேசாதீங்க… நாங்க
நக்சல்பாரிங்க… மரியாதை கொடுத்துப் பேசுங்க…
நீங்க என்ன செஞ்சாலும் சட்டையை நாங்க கழட்ட
மாட்டோம். வேணும்னா கைல, முகத்துல பாத்துக்குங்க…’

சட்டத்தை கழட்டுவோமே தவிர, சட்டையைக் கழட்ட மாட்டோம்
என்று தீரத்துடன் அவர்கள் கருத்துரைக்க,

‘எலே சின்னப்பயகன்னு பேசுனா, என்னயே
மிரட்டுறிகளா? பெறவு தனித்தனியா செல்லுல
போட்டுர்வேன் ஆமாம்’ என்று பொரிந்து தள்ளியபடி
அவர்களின் கைகளைப் பிடித்து ஜெயிலர் மச்சம் தேடினார்.

வருகிற போகிறவனின் பையைத் தடவி மிச்சம் பார்த்தே
பழக்கப்பட்ட ஜெயிலர், மச்சம் தேடியது பார்த்த
மற்ற கைதிகளுக்கு ஆச்சரியத்திலும், ஆச்சர்யம்.

‘என்னலே, மச்சம் நிறம் மாறிக் கெடக்கு! இது மச்சமாலே?
பேனா மையால புள்ளி வச்சிகிட்டு ஏமாத்துறீக…
இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம்…’

வெறுப்பேறிய ஜெயிலரின் கோபப்பார்வையை ‘சார்! இது
அதிர்ஷ்ட மச்சம் அப்படித்தானிருக்கும்’ என அலட்சியமாக
மறுத்து ஒதுக்கினர் மாணவர்கள்.

‘என்னமோ போய்த் தொலைவே! சரி எழுதணும்,
நீ என்ன சாதி?’

“சார்! நாங்க சாதி சொல்ல மாட்டோம், சாதி பாக்க மாட்டோம்
இது எங்க கொள்கை!’

‘லே! உன் கொள்கைய நீ வச்சுக்க, ரெக்கார்ட்ல
எழுதணும்ல… என்ன சாதில?’

‘கம்யூனிஸ்டுன்னு எழுதுங்க.. அடிச்சாலும் சொல்லமாட்டோம்!’

என்ன முயற்சித்தும் சாதியை எழுதமுடியாமல்,
முகவரி கேட்பதன் மூலமாக தெரு, ஏரியாவை வைத்து
சாதியை மோப்பம் பிடிக்க முயற்சித்தார் ஜெயிலர்.

‘எலே ஏட்டிக்கு போட்டியாவே போறீக… என்ன பத்தி
தெரியாது. உரிச்சி உப்பு தடவிடுவேன் ஆமாம்!’ என
மிரட்டியும் மாணவர்கள் மசியவில்லை.

பொங்கி வந்த கோபத்தை அங்கிருந்த தண்ணீரைக் குடித்து
தணித்துக் கொண்ட ஜெயிலர்,
‘உங்களப் போல நானும் சிறு வயசுல… கம்யூனிஸ்டு
அது இதுன்னு வெறப்பா திரிஞ்சவன்தான்… படிச்சு
முன்னேற வழிய பாக்கணும்ல. இப்படியே கட்சி
கிட்சின்னு திரியக்கூடாது…’

லத்திசார்ஜ் பலிக்காதபோது புத்திசார்ஜை கையிலெடுக்கும்
போலீசின் தந்திரம் வெளிப்பட்டது ஜெயிலரிடம்.

‘நாங்க பகத்சிங்கைப் போல நாட்டுக்காக இறுதிவரை போராடுவோம்!’
மாணவர்கள் மறுத்துரைக்க…

‘எப்பா.. என்ன ஆளவிட்டா போதுண்டா சாமி…’ என
மேற்கொண்டு பேசாமல் அறைக்குள் அடைத்தார் அவர்களை.

நிமிர்ந்து பார்த்தாலே பொளந்து கட்டும் ஜெயிலர் இந்த
மாணவர்களிடம் இவ்வளவு பொறுமையாக நடந்துக் கொள்வது
மற்ற விசாரணைக் கைதிகளுக்கு புரியாத புதிராகவும், மாணவர்கள்
மேல் ஈடுபாட்டையும் கொடுத்தது.

‘சார்! இது சாப்பாடா? வாய்ல வைக்க முடியல.
நல்ல சோறா கொடுங்க. சாய்ங்காலத்துல டீ வேணும்.
படிக்க புத்தகம் வேணும்…’ என்று
அடுத்தடுத்து தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து
வாதாட ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.

எதுவும் கேட்டாலே, ‘உரிச்சு உப்பு தடவிடுவேன்…’ என
மிரட்டும் ஜெயிலர்… ‘தம்பிகளா… இங்க இவ்வளவுதான் வசதி.
கலாட்டா பண்ணாதீங்க…’ என இறங்கு முகத்தில் பேச ஆரம்பித்தார்.

‘அப்படின்னா எங்களயும் எங்க தோழர்களோட புழல் சிறையிலேயே
சேத்துப் போடுங்க. அதுவரை உண்ணாநிலைப் போராட்டம்தான்’ என
மாணவர்கள் திடமாக முடிவெடுத்து அமர்ந்துவிட்டனர்.

‘சட்டத்துல இடமில்லை புரிஞ்சுக்குங்க.
உங்களுக்காக மேலிடத்துல பேசறேன். சாப்பிடுங்க…’ என்று ஜெயிலர்
எவ்வளவு சமாதானம் பேசியும் ஏற்காமல் மாணவர்கள் தன்நிலையில்
உறுதியாய் இருந்தனர்.

அங்குமிங்கும் ஜெயிலரின் தொலைபேசி பறந்தது.
இறுதியில், ‘எலே! நாளைக்கு புழல் போறீகளே, போய் சாப்டுங்களே…’ என்றார்.
அமைப்பு வழி தகவல் சரிதான் என்று அறிந்த பின்னே மாணவர்கள்
உண்ணாநிலையை முடித்து சாப்பிடச் சென்றனர்.

இரவெல்லாம்… சாதி எதிர்ப்பு, சமூக நடப்பு பற்றி அவர்கள் பாடிய
அமைப்புப் பாடல்கள் அறையைத் தாண்டியும் ஒலிக்க
பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கு
ஓரிரு நாள் பழக்கத்தில் இவர்களோடு நாமும் இல்லையே என்ற ஏக்கம்
இவர்களாக நாமும் இல்லையே என விரிவடைந்தது.

இவர்களைப் பிரியப் போகிறோமே என்ற அவசரத்தில் பலரும்
தங்களுடைய வாழ்நிலை, வழக்கு சூழ்நிலை, மீண்டும் தங்களோடு
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என இரவு நெடுநேரம்
மாணவர்களிடம் உறவாடினர்.

பழகப்பழக விசாரணைக் கைதிகளாக இருக்கும் இளைஞர்களின்
ஆழ்மனதில் கிடக்கும் அழகிய மனித உணர்ச்சிகளை மாணவர்களும்
பயின்றனர்.

விடிந்தது. எல்லா சிறை விதிமுறைகளும் முடிந்து மாணவர்கள்
புழல் சிறைக்குப் புறப்படத் தயாராயிருந்த தருணத்தில்
விடைபெறப்போகும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த
விசாரணைக் கைதிகளில் இளைஞர் ஒருவர்
‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக்
கொடுத்துட்டுப் போங்க!’
‘இது ஏங்க..?’ வியப்புடன் கேட்டார் மாணவத் தோழர்.

‘இல்ல, அதோட
பவர் என்ன, பாதுகாப்பு என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.
தயவு செய்து கொடுத்துட்டுப் போங்க தோழர்…’

இப்போது சட்டையைக் கழட்ட தோழர் தயங்கவில்லை…

_________________________________________________

– துரை.சண்முகம், புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________