Sunday, April 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!

கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!

-

koodankulam-கூடங்குளம்கூடங்குளத்தை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது போலீசு. போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 11 பேர் நேற்றே கைது செய்யப்பட்டு, போலீசு வேனிலேயே நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர். 2011ஆம் ஆண்டு இறுதியில் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட ராஜத்துரோகம், சதி உள்ளிட்ட பொய்வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜத்துரோகம், சதியில் ஈடுபட்ட அவரையும் உதயகுமார் போன்றோரையும்தான் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சந்தித்து உரையாடினார் என்பது நினைவிருக்கலாம். கைது செய்யப்பட்ட 11 பேரும் கடலூர் சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து கூட்டப்புளி கிராமத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் நேற்று நள்ளிரவு நெல்லை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை இரவோடு இரவாக சிறைக்கு அனுப்பும் முயற்சியை வழக்குரைஞர்கள் முறியடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். மாணவர்களும் அடக்கம். சிறை வைக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் போராடினர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இடிந்தகரையில் உதயகுமார் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். மரியாதையாக வந்து சரணடைந்து விடுமாறு போலீசு எஸ்.பி தன்னை மிரட்டுவதாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் உதயகுமார் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். கைது ஆவதற்குத் தான் தயாரென்றும், ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், மக்களின் விருப்பத்தையே தான் நிறைவேற்ற இயலும் என்றும் அவர் போலீசுக்கு பதிலளித்திருக்கிறார்.

அங்கே கூடியிருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சுமார் 60, 70 ஆயுத போலீசு வாகனங்கள் அதிரடியாக வருவதும் பின்னர் பின்வாங்குவதுமாக ஒரு உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.

இடிந்தகரை செல்லும் சாலை வழிகள் எல்லாம் போலீசால் அடைக்கப்பட்டு விட்டன. 144 தடையாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடல் வழியாக வந்து இடிந்தகரைக்குள் நுழையும் மீனவர்களைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்ப டார்னியர் விமானங்கள் கடலின்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

நேற்று மதியம் முதலே கைது செய்யப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் வள்ளியூர், நெல்லை நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இடிந்த கரைக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 15 பேர் நெல்லை டி.ஐ.ஜி யை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடிந்தகரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க கூடாது என்று அனுமதி மறுக்கவோ, இடிந்தகரைக்கு செல்லக்கூடாது என்று வழக்குரைஞர்களை தடுக்கவோ போலீசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. இப்போது அங்கே நடந்து கொண்டிருப்பது துப்பாக்கியின் ஆட்சி. மத்திய அரசும், ஊடகங்களும், திமுக, காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் தனக்குத் துணை நிற்கும் தைரியத்தில் ஒரு பேயாட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது பாசிச ஜெயா அரசு. நலத்திட்டம் என்ற பெயரில் தான் வீசிய 500 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துக்கு பல்லிளித்து அடிபணியாமல் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்து உறுதியாக நிற்பதால், கூடங்குளம் அணு உலைக்கு முன்னதாக, அம்மாவின் தாயுள்ளம் வெடிக்கத் தயாராக காத்து இருக்கிறது.

இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம். ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் கீழ் இவ்வமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மின்வெட்டைக் காட்டி கூடங்குளத்துக்கு தமிழக மக்களிடம் ஆதரவு தேடும் சதியை திரைகிழிக்கும் வகையில் தமிழகமெங்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. கூடங்குளத்தின் மக்களை அடக்குமுறையால் சிதறடித்து விட்டால், அப்போராட்டம் அடங்கிவிடாது. தமிழகமெங்கும் அதனைக் கொண்டு செல்வோம். அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: