Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நெல்லை - கூடங்குளம்...பேரணி, ஆர்ப்பாட்டம் - படங்கள்!

நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!

-

“கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!”  – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி.

“மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” என்ற முழக்கத்தின் கீழ் ம.க.இ.க; வி.வி.மு; பு.மாஇ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும், பிப்ரவரி 11 அன்று நெல்லையிலும் கூடங்குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணிகளையும் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டே கூடங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்களும் பிறபகுதி மக்களும் அணுஉலைக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதுடன், கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு அவ்வப்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் சதித்தனமான முயற்சிகளையும் விழிப்புடனிருந்து முறியடித்து வருகின்றனர். எனினும், ஊடகங்கள் மற்றும் அப்துல் கலாம் போன்ற ‘அறிவாளிகளின்’ துணையுடன் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் தீவிரமான பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதுடன், அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை போட்டு, இந்தியா வல்லரசாவதைத் தடுக்கிறார்கள் என்ற கருத்தையும் மன்மோகன் அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தப் பிரச்சாரம் தமிழக மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் தாக்கத்தை முறியடிக்காமல், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பொதுக்கருத்தை உருவாக்க முடியாது என்பதைக் கணக்கில் கொண்டு இப்புரட்சிகர அமைப்புகள் தமது பிரச்சாரத்தை விரிவான அளவில் கொண்டு சென்றனர்.

இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள், தெருமுனைக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் போன்ற வடிவங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வியக்கத்தினை ஒட்டிக் கொண்டுவரப்பட்ட சிறு வெளியீடு 50,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரையில் கூடங்குளத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மீனவக் கிராமங்கள், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்கள், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரிகள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் மத்தியிலும் மூன்று மாவட்டங்களில் பிரசாரம் கொண்டு செல்லப்பட்டது. கரையோர மக்கள் பிரச்சாரத்துக்கு சென்ற தோழர்களையும், கலைக்குழுவினரையும் நெகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். உடன் வந்தனர். இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் ம.க.இ.க. கலைக்குழுவினரின் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதனால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அணு உலை ஆதரவு கருத்து கொண்ட சிறு நகரங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் காங்கிரசு, பாரதிய ஜனதா காலிகளுடனான கைகலப்பின் ஊடாகவே பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே கூட ஆளும் வர்க்கத்தின் அணு உலை ஆதரவுக் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தின. எனினும்  அவற்றுக்கு எதிராக வாதிட்டுப் புரியவைக்க முடிகிறது. குறிப்பாக,  கல்லூரி மாணவர்கள் இது குறித்த உண்மைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.மின்வெட்டுக்கு கூடங்குளம்தான் தீர்வு என்ற பொய்ப்பிரச்சாரத்துக்கு பலியான பலர், பேருந்துகளிலும் ரயில்களிலும் பிரச்சாரம் செய்த போது அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து சண்டைக்கு வந்த போதும், அவர்களது கேள்விகளை பொறுமையாக எதிர்கொண்டு பதிலளித்தார்கள் தோழர்கள்.

பிப்ரவரி 11 அன்று காலை நெல்லை ஜவகர் திடல் செங்கொடி ஏந்திய தோழர்களால் நிரம்பி வழிந்தது. பு.ஜ.தொ.மு. மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமை தாங்கி முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து பேசிய பேரா. தொ.பரமசிவம், “இப்பகுதியை இன்னொரு நந்திக்கிராமம் ஆக்காமல் காங்கிரசு அரசு ஓயப்போவதில்லை என்று கூறியதுடன், கூடங்குளம் பிரச்சினையில் இரட்டை வேடமிடும் மார்க்சிஸ்டுகளையும் அம்பலப்படுத்தினார். அணு உலை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியை மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்று திசை திருப்பிய ப.சிதம்பரத்தை அம்பலப்படுத்தினார் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு.  இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான்  மன்மோகன் அரசுக்கு அணுவெறி பிடித்திருக்கிறது என்பதையும், அது ஒரு அமெரிக்க அடிமை ஒப்பந்தம் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆய்வதற்காக மாநில அரசு அமைத்திருக்கும் குழுவையும், அதன் உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தினார், ம.க.இ.க. செயலர் மருதையன்.

போராட்டத்தில் அணிதிரளுமாறு அனைவரையும் அறைகூவும் பாடலை ம.க.இ.க. மையக்கலைக்குழு இசைக்க பெருந்திரளாகப் பேரணி நகரத் தொடங்கியது.  அணு உலைக்கும் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் காவடி எடுக்கின்ற காங்கிரசு, பா.ஜ.க. அடிமைகளை அம்பலப்படுத்தும் காட்சி விளக்கத்தினை நிகழ்த்தியவாறு பு.மா.இ.மு. தோழர்கள் முன்சென்றனர். காட்சி விளக்கத்தையும், பேரணியின் முழக்கங்களையும் கருத்தூன்றிக் கவனித்தனர் மக்கள்.

நெல்லையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ள கூடங்குளத்துக்கு செல்வதற்கு பேருந்து வசதியில்லை என்பதுடன், போலீசு மிரட்டல் காரணமாக வாடகை வாகனங்கள் வர மறுத்தன. எனவே, பேரணியின் ஒரு பகுதியினர் மட்டுமே வாகனங்களில் கூடங்குளம் செல்ல முடிந்தது.

மாலையில் கூடங்குளம் சென்று இறங்கிய தோழர்களை வரவேற்கக் காத்திருந்தது ஒரு பெரும் மக்கள் திரள். தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தோழர்களை வரவேற்குமுகமாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.

கைக்குழந்தைகளுடன் பேரணிக்கு வந்திருந்த பெண் தோழர்களின் கையிலிருந்து குழந்தைகளை வாங்கிக் கொண்டனர் பெண்கள். மற்றவர்கள் கொடிகளை, முழக்க அட்டைகளை உரிமையுடன் பெற்று ஏந்தினர். பேரணி நகரத் தொடங்கியது. தோழர்களும் மக்களுமாக இரண்டறக் கலந்து விட்ட அந்தப் பெரும் மக்கள் திரள் போகும் பாதையெங்கும் இரு மருங்கிலும் இருந்த வீடுகளிலிருந்து பெண்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சாரி சாரியாக இறங்கி வந்து பேரணியில் ஒன்று கலந்தனர். அணு உலைக்கு எதிராக ஆவேசத்துடன்  முழக்கமெழுப்பினர்.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மதியத்திற்கு மேல் கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் நகரின் மையப்பகுதியில் இருந்த தேவாலயத்திற்கு முன்னே திரண்டு நிற்க, போராட்டக் குழுவின் சார்பில், மனோ.தங்கராசு தோழர்களை வரவேற்று உரையாற்றினர். பேரணியில் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களும் கலந்து கொள்வதைச் சாத்தியமாக்கும் பொருட்டு மறியல் போராட்டத்தை மாற்றியமைக்குமாறு தாங்கள் கோரியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து போராட்டக் குழுவின் சார்பில் பேசினார் வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன். தொடர்ந்து கலைக்குழுவினர் நடத்திய நாடகத்தில் ‘நாறவாயன் நாராயணசாமி’ பெரும் வரவேற்பைப் பெற்றார். ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்களைப் பற்றியும், இப்போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக விளக்கிப் பேசினார், தோழர் காளியப்பன். போலீசுக்கோ வழக்குகளுக்கோ அஞ்சவேண்டாம் என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் துணை நிற்பார்கள் என்றும் உறுதி கூறினர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன். பெருந்திரளான பெண்கள் பங்கேற்கும் எந்தப் போராட்டமும் தோற்றதில்லை என்று, ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி எழுந்திருக்கும் இந்தப் போராட்டம்,  ஒரு புதிய துவக்கம் என்றும் பாராட்டினார் வழக்குரைஞர் ராஜு.

வந்திருந்த தோழர்கள் அனைவரையும் வீட்டுக்கு வந்த நெருங்கிய சொந்தங்களாகக் கருதி உணவளித்து உபசரித்தார்கள் கூடங்குளம் மக்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே தேவாலயத்தின் மணி, வழமையான நேரத்தில் ஒலி எழுப்பத் தொடங்கியவுடன், யாரோ ஒருவர் விரைந்து  சென்று அதனை நிறுத்தினார். இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது என்பதற்கு வேறு சான்று தேவையா என்ன?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: