Sunday, April 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!

கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!

-

கூடங்குளம் போராட்டத்தை நசுக்குவதற்க்காக பாசிச ஜெயாவின் போலீசு கிட்டத்தட்ட முழுப் போரையே இடிந்த கரை மக்கள் மீது தொடுத்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அங்கே செல்ல முடியவில்லை. மேலும் அருகாமை இடங்களில் பேருந்து மூலம் செல்லும் மாணவர்களும் முடக்கப்பட்டிருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசு எப்போதும் கண் கொத்திப் பாம்பாக முற்றுகை இட்டு வருகிறது.

கடலூரில் கைது செய்யப்பட்டுள்ள 11 முன்னணியாளர்களில் ஒருவர் பார்வையற்றவர். மற்றொரு முதியவருக்கோ இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட மக்களில் பெண்களும், சிறுவர்களும் கூட உண்டு. இவையெல்லாம் போலீசின் காட்டு தர்பார் எத்தகையது என்பதை விளக்குகின்றன.

இந்நிலையில் இடிந்தகரை நோக்கி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் இன்று செல்கின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பயணத்தில் இருந்ததால் அவரது நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக் கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் இதுவரை அதிகார வர்க்கம் எவரையும் இடிந்தகரை நோக்கி விடவில்லை.

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை போலிசு தடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தார். தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் மக்களை பிணையில் எடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அனைவரும் இடிந்தகரை நோக்கி செல்கின்றனர்.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் காப்போம்.

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனு:

அனுப்புநர்;
எஸ் ராஜூ, வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் / தமிழ்நாடு

பெறுநர்; உயர்திரு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகத்துறை நடுவர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி.

பொருள்; ”கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க கோரி”

அய்யா, வணக்கம்!

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் வாழ்வுரிமைக்கானதாகும். அது ஜனநாயக முறைப்படி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும். சமீபத்தில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தடைசெய்து கு.வி.மு.ச. பிரிவு 144-ன்படி உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

தாங்கள் ராதாபுரம் தாலுக்காவில் பிறப்பித்த பிரிவு 144 தடை உத்தரவின் விளைவாக அந்த சுற்றுவட்டார பல்வேறு கிராமப் பகுதிகளில் குடிநீர் தடைசெய்யப்பட்டுள்ளது. பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிக் கூடங்களில் சென்று படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளார்கள்.

கூத்தங்குளிக்கு சென்று தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்து கிராமமே போர்க்கோலமாக காட்சியளிக்கிறது. சாலை மறியல் செய்ததற்காக 42 பெண்கள் உட்பட 178 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிணையில் எடுக்கவும், அவர்களின் உறவினர்களை சந்தித்து விவரங்களை கேட்டறியவும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கூடங்குளம் காவர்நிலையத்திற்கு சென்று கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டனர். தொலைப்பேசி வாயிலாக D.I.G.-யை கேட்டபோது, அவரும் 144 தடை உத்தரவால் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

மேலும் போராட்டக்குழுவினர் இந்த அணுசக்திக்கு எதிரான நிலுவையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்குளை எங்களிடம் ஒப்படைத்து அவர்கள் சார்பாக நாங்கள் நடத்திவருகிறோம். போலீசாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தற்காத்துக் கொள்வதற்கு அவர்கள் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு உரிமையுண்டு. அதுபோல் வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்து நீதிமன்றத்தில் வாதிட உரிமையுண்டு. இது அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையும், இயற்கை நீதியுமாகும். 144 தடையுத்தரவால் மக்களின் வாழ்வுரிமைகளான அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும் 144 தடையுத்தரவை ரத்துசெய்து காவல்துறையை திரும்ப பெறவேண்டுமென சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து சட்ட உதவிகளை வழங்க காவல்துறை அனுமதி மறுப்பது சட்டபுறம்பானது, மனித உரிமைகளுக்கெதிரானது. எனவே மக்களை சந்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.

இடம்: திருநெல்வேலி

தேதி: 21.03.2012

இப்படிக்கு உண்மையுடன்
(எஸ். ராஜூ)

____________________________________________________________

– தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: