Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்த கையோடு அடக்குமுறை தர்பாரையும் ஏவிவிட்டிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. ஏற்கனவே முன்னணியாளர்கள் 11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறது. இந்தக் கைதை எதிர்த்துக் கிளம்பிய கூட்டப்புளி கிராம மக்கள் 178பேர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் 45 பேர் பெண்கள். மேலும்20க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இதில் உண்டு. அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறை அங்கிருக்க இப்படி தொலைவில் உள்ள வேறு மத்திய சிறைகளில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? தொலை தூரமென்றால் போராடும் மக்கள் விரக்தியடைவார்கள், சொந்த பந்தங்கள் யாரும் சடுதியில் பார்க்க முடியாது என்ற பாசிச நோக்குடன் தமிழக போலீசு இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

அதன்படி கூட்டப்புளி மக்கள் நேற்று இரவு பத்து மணி அளவில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் விரைவாக அணிதிரண்டு சிறை வாசலில் காத்திருந்தனர். பேருந்துகள் வந்த உடன் போராடும் மக்களை வாழ்த்தியும், பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் போடப்பட்டன.

தமது கிராமத்தை விட்டு தொலைவில் இருக்கும் திருச்சியில் நம்மை யார் கவனிப்பார்கள் என்று இருந்த மக்கள் இந்த உற்சாகமான வரவேற்பைப் பார்த்து அவர்களும் முழக்கம் இட்டனர். மேலும் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் ஏற்கனவே இடிந்தகரை வட்டாரத்தில் விரிவான பிரச்சாரம் செய்திருந்த படியால் மக்கள் தோழர்களை அடையாளம் கண்டு கொண்டதோடு கைதான கவலையை விடுத்து அச்சமின்றி சிறை வாசலில் முழக்கமிட்டனர்.

கைதான மக்களை சிறையில் தள்ளிவிடும் நேரம் என்பதால் போலீசு உணவு ஏதும் வழங்கவில்லை. சிறைத்துறையோ நேரம் கடந்துவிட்டபடியால் உணவு இல்லை என்பதாக கைவிரித்து விட்டது. பொதுவில் கைதாகி செல்லுபவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் ‘வரவேற்பு’ இருக்கும். இந்நிலையில் தோழர்கள் போலீசின் அலட்சியத்தை கண்டித்ததோடு உடனே அருகாமை கடைகளில் இருந்து பிரட், பழம் வாங்கி மக்களுக்கு அளித்தனர்.

இதே போன்று கைது செய்யப்பட்ட 11 முன்னணியாளர்களும் நள்ளிரவில் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் அணிதிரண்டு இரவு 1.30 மணிக்கு சிறை முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தனர். அந்த நேரத்திலும் தம்மை வரவேற்க திரண்டிருந்த தோழர்களை கண்டு கூடங்குளம் முன்னணியாளர்கள் நெகிழ்ந்து போயினர்.

திருச்சி, கடலூர் சிறைகளுக்கு கொண்டு சென்று விட்டால் இந்த மக்களை தனிமைப்படுத்தி முடக்கிவிட முடியும் என்று நினைத்த போலீசின் திமிரை முறியடிக்கும் வண்ணம் இந்த சிறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறைக்கு செல்லுமுன்னே மக்களிடம் தோழர்கள் உணர்ச்சிகரமாக உரையாற்றினர். தொடர்ந்து தமது புரட்சிகர அமைப்புகள் அவர்களுடன் உடனிருப்பதாக உறுதி அளித்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– செய்தி, புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி, பு.மா.இ.மு, கடலூர்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: