Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் - நள்ளிரவுக் கூட்டம்!

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டக்-காட்சிகள்-13

நேற்று மாலை திட்டமிட்டபடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இடிந்தகரைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால் இதுவே ஒரு சாகச பயணம் போல இருந்தது. ஏனெனில் இடிந்தகரைக்கு செல்லும் இரு சாலைகளையும் ஆயிரக்கணக்கான போலீஸ் தடுத்து பெரும் நந்தி போல காவல் காத்து வருகிறது. கிராமத்திலிருந்து 3, 4 கீ.மீட்டர்களில் இருக்கும் போலீசின் கண்காணிப்பைத் தாண்டி யாரும் ஊருக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது.

இந்நிலையில் இடிந்தகரை இளைஞர்களின் உதவியோடு கடற்கரையோரப்பாதை, காட்டுப்பாதை என 3 கி.மீட்டர்கள் சுற்றி நடந்து, போலிசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் போராட்டப் பந்தலை அடைந்தனர். இடிந்தகரைக்கு சென்றே ஆகவேண்டுமென்ற ம.உ.பா.மையத்தின் போராட்டம் நேற்றுதான் வெற்றிபெற்றது.

வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாத நிலையில் வழக்கறிஞர்களை பார்த்த உடன் தெருவெங்கும் கூடியிருந்த மக்கள் மகிழ்வுடன் வரவேற்று போராட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இடிந்தகரை போராட்ட பந்தலில் சுமார் பத்தாயிரம் மக்கள் குழுமியிருந்தனர். மேலும் ஒரு பத்தாயிரம் பேர் பந்தலுக்கு வெளியே கடற்கரையோரம் மற்றும் ஊர் முழுவதும் தங்கியிருக்கின்றனர். இங்கு இருப்பவர்களில் சுற்றுவட்டார மீனவ கிராமங்கள் மற்றும் சில விவசாயக் கிரமங்களைச் சேர்ந்தவர்களும் உண்டு. கூடங்குளத்தில் திங்கட்கிழமை முதல் கடையெடுப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதே போல இடிந்தகரை வட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் திங்கட் கிழமை முதல் கடலுக்கு செல்லவில்லை. அந்த வகையில் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமையாக இங்கு குழுமியிருக்கின்றனர். அவர்களின் போராட்ட உணர்வு இப்போதும் குன்றாமல் துடிப்புடன் இருந்து வருகிறது.

ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள் போராட்ட மேடைக்குச் சென்று உதயக்குமாரிடம் வழக்கு விவரங்களை தெரிவித்தனர். அதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மக்களிடம் தெரிவிக்குமாறும் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சுமார் ஒரு மணிநேரம் பேசினார்.

“கடலூரிலும், திருச்சியிலும் சிறை வைக்கப்பட்டவர்களை பிணையில் கொண்டு வர வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அணு உலை வேண்டும் என்று கூறுபவர்களுக்கு உள்ள உரிமை, வேண்டாம் என்று சொல்வதற்கும், போராடுவதற்கும் அரசியல் சட்டப்படியே உரிமை இருக்கிறது. அந்த உரிமையைத்தான் தமிழக அரசும், காவல்துறையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது. இன்று இடிந்தகரை வந்து போராட்டக்குழவினரை கைது செய்வதற்கு போலீஸ் அஞ்சுவதற்கு காரணம் இங்கே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கம் மக்கள்தான். அந்த மக்கள் சக்தியைப் பார்த்துத்தான் போலீசு அஞ்சுகிறது. அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி 17 இலட்சம் கோடி ரூபாய்க்கு இங்கே அணு உலைகள் வரவிருக்கின்றன. உங்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வணிகம் முதலாளிகளுக்கு நட்டமாகிவிடும் என்பதால் அரசும், காவல்துறையும் இங்கே போர் தொடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்”

என்று அவர் பேசி முடித்ததும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது மணி இரவு 11 இருக்கும். மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கறிஞர்கள் இரவு அங்கேயே தங்கினர். இடிந்தகரையின் இரு சாலைகளும் போலீசால் தடுக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை. மின்சாரமும் நேற்றுதான் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கடலில் படகுகள் மூலமாக அத்தியவாசிய பொருட்கள் இடிந்தகரைக்கு வருகின்றன. அங்கேயே கூட்டாக மக்களுக்கு கஞ்சி, சாதம் சமைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது.

உதயகுமாருடன் சுமார் 15 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஊடகங்களுக்கும் அங்கே செல்வதற்கு தடை இருந்தது. பின்னர் நேற்று மாலை முதல் அது விலக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இன்னமும் போலீசு ஊருக்குள் வரவில்லை. அப்படி வாகனங்கள் வருவது போல இருந்தால் மக்கள் உடன் கேள்விப்பட்டு ஊர் எல்லையில் குழுமிவிடுகின்றனர். சுற்று வட்டார மீனவ கிராமங்களிலிருந்து மக்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். போலீசின் பிரம்மாண்டமான அணிவகுப்பு அந்த மக்களின் உறுதியை கிஞ்சித்தும் குறைத்துவிடவில்லை.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.

____________________________________________________________

– மனித உரிமைப்பாதுகாப்பு மையம்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: