Saturday, April 19, 2025
முகப்புகலைகவிதைமார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

-

பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

மார்ச் 23 – பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள்.

இன்னும் எத்தனை வார்த்தைகள்
நமக்காக பேசியிருப்பானோ!
தூக்குக் கயிறு அதற்குள்
பகத்சிங்கின் தொண்டையை இறுக்கியது.

இன்னும்,
எத்தனை உணர்ச்சிகளை
உருவாக்கியிருப்பானோ!
அதற்குள்,
ராஜகுருவின் கண்களை
பிதுக்கிவிட்டது கயிறு.

இன்னும் எத்தனை தூரம்
மக்களைத் திரட்ட நடந்திருப்பானோ?
அதற்குள்,
துடித்து அடங்கிவிட்டன
சுகதேவின் கால்கள்.

சட்லெஜ் நதியில்
கரைந்த சாம்பல்
முல்லைப் பெரியாறில்
முழங்கும்போது,

லாகூர் சிறையில்
முழங்கிய குரல்கள்
இடிந்தகரையில்
எதிரொலிக்கும்போது,

அவர்கள் இல்லையென்று
எப்படிச் சொல்வது?

நாலாபக்கமும்
சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்
இடிந்தகரை
இன்னுமொரு ஜாலியன்வாலாபாக்காய்
நம் கண்ணில் தெரியுது!

கூட்டப்புள்ளியில் படகினிலேறி
சீருடை கயவரை
துடுப்பினில் ஒதுக்கி,
இடிந்தகரையினில் கால்வைக்கும் துணிச்சலில்
இருக்குது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு உணர்ச்சிகள்!

போராடும் மக்களுக்கு
மின்தடை, பஸ்தடை, பால்தடை
என வெறியாடும் போலீசின்
பயங்கரவாதத்துக்கு மத்தியில்,

உண்ணாவிரதப் பந்தலில்
தாயின் பசியறிந்து
தானும் நீரருந்தி
சகல படைகளுக்கும் சவால்விட்டு
பயமறியா குழந்தைகளின்
பார்க்கும் விழிகளில்
பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!

கொளுத்தும் வெயிலில்
கண்கள் செருகுது,
கண்ணிமை நுனியில்
பொழுதுகள் கருகுது

முன்னேறும் போலீசை தடுக்கும்
அந்த மூதாட்டியின்
போராட்டக் குரலில்…
சுகதேவின் தீவிரம் தெரியுது!

என்னமாய் படையைக் குவித்தாலும்
துரோகி கருணாநிதி, ஜெயலலிதா இணைந்தாலும்
தெலுங்கானா போராட்டம் போலவே
மார்க்சிஸ்டும், தா.பாவும் காட்டிக் கொடுத்தாலும்
இன்னுமென் உயிர் உள்ளவரை
அந்நியன் கால் மிதிபட்டு
என் தாய்மண் அழுக்கடைய
அனுமதியோம்! என
திண்ணமாய் போரிடும்
தெக்கத்திச் சீமை இளைஞர்களின் ஆவேசத்தில்
ராஜகுருவின் பிடிவாதம் தெறிக்கிறது!

சுற்றி வளைக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால்!
கழுத்து இறுக்கப்படுகிறது
இடிந்தகரை!

மறுகாலனியச் சுருக்கில்
மாட்டித் தவிக்கிறார்கள் மக்கள்.

இப்படியொரு சூழலில்,
சும்மாய் நினைவுகளை
சுமந்து நிற்பது
பகத்சிங்கிற்கு பாரம்!

நீ பகத்சிங்காய் இயங்குவதொன்றே
பகத்சிங் பார்வையில் நியாயம்!

__________________________________________

–  துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: