செய்தி-10
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை மறைமலை நகரில் மூன்று நாள் உண்ணா விரதப் ‘போராட்டத்தை’ ‘வெற்றிகரமாக’ நடத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையின் உட்பொருள் என்ன?
” மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல், முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”. குமுதம் ரிப்போர்ட்டரில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் விளக்கம் இது.

இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு உதவித் தொகைகளும் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில் காவிக் கும்பல் கோரும் ஏழை இந்து மாணவர்கள் யார்? வெளிப்படையாக பார்ப்பன – ‘மேல்’ சாதி மாணவர்கள் என்று கேட்க வேண்டியதுதானே? அதன்படி இந்துக்கள் என்றால் பார்ப்பன – மேல்சாதியினர் மட்டும்தான் என்றாகிறது.
அடுத்து முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குரிய சலுகை கிடையாது என்பதால் உண்மையில் அம்மதங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது காவிக் கும்பலுக்கு பொறுக்கவில்லை. சிறுபான்மை இன மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்று கோருவதை இப்படி ஏழை இந்து மாணவர்களுக்கு உதவி வழங்கு என்று கோல்மால் பாசிச அரசியல் மொழியில் கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்க வேண்டும் என்ற கொலைவெறிதான் காவிக் கும்பலின் ஒரிஜினல் வெறி.
தமிழகத்தின் அரசியல் அநாதையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க ஏதாவது செய்து செல்ஃப் எடுக்க முடியுமா என்று போராடுகிறது. கடைசியில் சென்னையில் மூன்று நாள் கூத்துக்கு அனுமதியில்லை என்று மறைமலை நகரில் டேரா போட்டு, ஊடகங்களுக்கு ஃபோட்டோ கொடுத்து இந்த காமடி ஷோ முடிந்திருக்கிறது.
போகட்டும். ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?
குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? முயன்றால் இந்து மதவெறியர்களை ஒழிக்கும் வேலையினை இந்து கல்வி முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்!
______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: