Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை!

நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை!

-

செய்தி-13

manmohan-singh-coal-scandal-cartoonதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்?

2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் 1,86,00,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு அதிகாரி தெரிவித்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விடுமுறைக்குப் பிறகு நேற்று கூடிய நாடாளுமன்றத்தில் பா.ஜ.க, தெலுங்கு தேசம், இடதுசாரிகள், அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி உறுப்பினர்கள் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசு கூட்டணி அரசு பதவி விலகுமாறு கோஷமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதே காட்சியை நாம் 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று எண்ணிறந்த முறை பார்த்து விட்டோம். எதிர்க்கட்சிகள் இப்படி நான்ஸ்டாப்பாக கோஷமிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவதன் இரகசியம் என்ன?

இந்த உண்மையை மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் போட்டு உடைக்கிறார்:

” நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் காங்கிரசு ஆட்சி இல்லை. இந்த மாநிலங்களின் முதல் அமைச்சர்கள்தான் ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நிலக்கரி சுரங்க ஏல ஒதுக்கீடு குறித்து அவர்கள் என்ன சொன்னார்கள்? அதை தெரிவித்து விட்டு குற்றம் சாட்ட வேண்டும்”

கபில்சிபல் தெரிவித்திருப்பதின் விளக்கம் என்ன? நிலக்கரி சுரங்கங்களை பகிரங்க ஏலத்தில் விடுவதற்கு பா.ஜ.க, இடதுசாரிகளையும் உள்ளிட்டு எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சுரங்க ஊழலில் ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளிடமிருந்து எல்லாக் கட்சிகளும் நன்கொடையும் பெற்றிருக்கின்றனர். ஆக மன்மோகன் சிங்கை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும் என்பது காங்கிரசின் கேள்வி. நியாயமான கேள்விதான்.

நாமும் அதைத்தான் சொல்கிறோம். இவர்கள் அனைவரும் கூட்டுக் களவாணிகள். மன்மோகன், காங்கிரசு மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக இந்த போலி ஜனநாயக அமைப்பையே தூக்கி எறியப்பட வேண்டுமென்கிறோம். அப்படிச் சொன்னால் நாம் தீவிரவாதி! பாராளுமன்றத்தில் சீன் போட்டால் அவர்கள் ஜனநாயகவாதிகளா?

மத்திய அரசு சிஏஜி அமைப்புக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த குர்ஷித், “சிஏஜி-க்கு மத்திய அரசு எப்போதும் மரியாதை அளிக்கிறது என நம்புகிறேன்” என்றார்.

ஆம். ஜனநாயகம் என்பது வெறுமனே நம்பிக்கைதான். ஊழல் என்பது யதார்த்தம்தான். அரசியல் என்பது இந்த கூத்துக்களிலிருந்து ஆதாயம் அடையும் ஒரு தொழில். அந்த தொழிலுக்கு ஸ்பான்சர்கள் டாடா, பிர்லா, அம்பானி, ஜின்டால், முதலியோர். பிறகு யார்தான் யோக்கியன்?

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: