Monday, April 21, 2025
முகப்புசெய்திபாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது!

பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது!

-

செய்தி-12

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.

அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அவளை தாக்கியிருப்பார்கள்’ என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்குள் வீட்டை காலி செய்து கொண்டு போய் விடச் சொல்லி விட்டதாக அந்த பகுதியில் வசிக்கும் கிருத்துவ குடும்பங்கள்  தெரிவிக்கின்றனர். பலர் வெளியேறியும் வருகின்றனர். வெளியேறும் குடும்பங்களுக்கு போலிசார் பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டு வெறுமனே வேடிக்கை  பார்ப்பதாக பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

பாகிஸ்தானின் இறைமறுப்புச் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை. குரான் அல்லது இஸ்லாமை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம். அப்படி தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் 2010-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா நொரீன்  என்ற பெண்மணி. அவரது வழக்கறிஞர்கள் கருணை மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆசியா நொரீனுக்கு சார்பாக பேசியவர்களில் முக்கியமானவர் சல்மான் தசீர். பஞ்சாப் மாகாணத்தின் கவர்னராக இருந்த அவர் இறை மறுப்பு சட்டங்களை மாற்ற வேண்டும் என்று பேசியதால் அவரது பாதுகாவல் படையினரில் ஒருவரால் ஜனவரி 2011-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். தசீர் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி அதே காரணத்துக்காக தலைநகரில் கொல்லப்பட்டார்.

சிறைத்தண்டனை முடிந்து வெளியில் வருபவர்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. ஜூலை மாதம் பகவல்பூர் நகரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்ட கும்பல் ஒன்று குரானை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீஸ் நிலையத்திலிருந்து வெளியில் இழுத்து அடித்துக் கொன்று உடலை தீக்கிரையாக்கினர்.

குரான் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுபவர்களில் பெரும்பாலானோருக்கு அரபி மொழி பேசவோ படிக்கவோ தெரியாது. அதனால் அரபி மொழியில் எழுதப்பட்ட எதையும் குரான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கு மத்தியில் ‘இந்த இறை மறுப்பு சட்டங்கள் இறைவனால் நேரடியாக விதிக்கப்பட்டவை’ என்ற கருத்து நிலவுகிறது. உண்மையில் தனது அரசியல் லாபத்துக்காக இந்தச் சட்டங்களை கொண்டு வந்தவர் 1980களில் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்த ஜியா உல் ஹக். அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தானின் மத வெறி பிடித்த கும்பல்கள் இந்த சட்டங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பது இஸ்லாமிய உலகின் பிற்போக்கு அவலங்களுக்கு ஒரு உதாரணம்.

இந்தியாவில் இந்து மதவெறி போல பாகிஸ்தானில் முசுலீம் மதவெறி செல்வாக்கு செலுத்துகிறது. இரண்டு மதவெறிகளையும் ஒழிப்பது இருநாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும்.அந்த வகையில் மதவெறி பாசிசத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை நாம் ஆதரிக்க வேண்டும்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: