செய்தி-08

“நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாடீல் மற்றும் மும்பை போலீசு கமிசனர் அரூப் பட்நாயக் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அரிவாள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்களுடன் முசுலீம்களது ஊர்வலம் நடந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அங்கே பச்சை வண்ண பங்களாதேஷ் பாஸ்போர்ட் கிடந்ததாகவும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிற மாநில முசுலீம்கள் மராட்டிய பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பேசவே உற்சாகமடைந்த போலீசு கான்ஸ்டபிள் ஒருவர் மேடைக்கே வந்து தாக்கரேக்கு ரோஜாப்பூ ஒன்றையளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்து தர்மம் மட்டுமல்ல மராட்டிய தர்மமும் தனது தர்மம்தான் எனக் கூறிய ராஜ் தாக்கரே மராட்டியத்திற்கு எதிராக எவராவது வந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் சூளுரைத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு அசாமி, கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதைக் குறிப்பிட்ட தாக்கரே காயமடைந்த மராட்டிய காவலர்களைப் பற்றி அவருக்கு கவலையில்லையா எனக் கேள்வியெழுப்பினார்.
கலவரக்காரர்கள் உ.பி, பீகார் மற்றும் ஜார்கண்டிலிருந்தும் வந்ததாகவும் இவர்களால் மராட்டியர்கள் ஒடுக்கப்படுவார்களோ என தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். மறுகாலனியாக்க கொள்ளை மற்றும் கொள்கையின் காரணமாக உள்நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் அந்த வடநாட்டு கூலி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு இனி மும்பையில் இடம் தரக் கூடாதாம்.
குறைவான கூலி என்பதற்காக முதலாளிகளும், இதை விட்டால் வேறு வழியேயில்லை என்ற நிலைமையால் இந்தத் தொழிலாளிகளும் மும்பைக்கும், சென்னைக்கும், டெல்லிக்கும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களைத்தான் மராட்டிய இந்து தேசிய இனத்தின் வில்லனாகக் காட்டுகிறார் ராஜ் தாக்கரே. தமிழகத்தில் இவர்கள் மழைக்கு ஒதுங்கினால் கூட ஜேப்பியாரின் கான்கிரீட் தூண் உயிரை வாங்குகிறது. ஆனால் மணியரசன் போன்றவர்களோ சிவசேனா பங்காளிகள் போல இவர்களையும் வில்லனாகத்தான் சித்தரிக்கிறார்கள்.
தணிந்து போயிருக்கும் இனவெறி மற்றும் இந்துமதவெறியை மீண்டும் கிளப்புவதற்கு இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எப்போதும் குறியாக இருக்கிறார்கள் என்பதற்கு ராஜ்தாக்கரேவின் கட்சியும், அதை கண்டிக்க வக்கில்லாத அரசு, போலீசும் சாட்சியாக இருக்கின்றன.
மும்பையில் நடந்த ராஜ்தாக்கரே கட்சியின் பேரணிக்கு தடைவிதித்திருந்த போலீசு தடையை மீறி பேரணி நடந்தபோதும் தடுக்க முற்படாமல் வெறும் சாதாரண வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளது. மும்பை பத்திரிகையாளர்களையும் ஆகஸ்டு 11 அன்று முசுலீம்கள் தாக்கியதாகவும், அவர்கள் சார்பாகவும் தான் பேசுவதாகவும் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். தங்கள் சார்பில் பேச தாக்கரே தான் தகுதியானவர் என மும்பை பத்திரிகையாளர்கள் கருதுகிறார்களா ?
______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: