Wednesday, April 23, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து!

இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து!

-

செய்தி-09

புதுதில்லியில் 21.8.12 அன்று நடந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசும் போது,

“1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை.

1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன. நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அரசியல் சூழலில் அணு ஆயுதங்கள் நமக்குப் பாதுகாப்பு அளிப்பதில் உறுதுணையாக இருந்து வருகின்றன. இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என வெளிப்படையாக அறிவித்ததன் நோக்கம் அந்த அளவில் வெற்றி அடைந்திருக்கிறது.” என்றார்.

மேலும், வேறு சில நாடுகள் தமக்குப் போதிய ராணுவ பலமில்லாததால் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. ராணுவ பலத்தில் தங்களுடைய குறைபாட்டை ஈடு செய்யவே அணு ஆயுதம் வைத்துள்ளதாக பாகிஸ்தானை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். (நன்றி: தினமணி)

சிவ-சங்கர்-மேனன்
சிவசங்கர் மேனன்

பேசுவது இராமயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற கதையாக அணு ஆயுத ஒழிப்பு கூட்டத்தில் ஆயுதப் பெருமை! மேனன் குறிப்பிட்டிருக்கும் மற்ற நாடுகளின் மிரட்டல் என்பது உண்மையா என்ன? காட் ஒப்பந்தத்திலும், உலக வர்த்தக கழகத்திலும், அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு இந்தியாவை மலிவாக விற்ற கதையை விட கேவலமான மிரட்டல்களுக்கு பணிந்த கதையை எங்கே தேடினாலும் கிடைக்காதே?

இந்தியாவின் அணு ஆயுதம் உண்மையில் என்ன சாதித்திருக்கிறது? பொக்ரான் சோதனைக்குப் பிறகு பாகிஸ்தானும் சோதனை செய்து பகிரங்கமாக அணு ஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதுதானே ஒரே பலன்! மற்றபடி இலங்கை, வங்க தேசம், நேபாள், மாலத்தீவுகள் முதலான நாடுகள் மீதான மேலாதிக்கத்திற்கு அணு ஆயுதமெல்லாம் தேவையில்லையே? அதுவும் முள்ளிவாய்க்கால் போரின் போது இலங்கையை இந்திய அரசு சார்பில் வழிநடத்திய மேனனுக்கு அது தெரியாத என்ன?

தெற்காசியாவில் இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசு அடியாளாக பயன்படுத்த நினைக்கிறது அமெரிக்கா. அதற்க்காக மட்டுமே இந்தியாவின் அணு ஆயுத கெட்டப்பை அங்கீகரித்திருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தானையும் அப்படி அங்கீகரித்ததற்கு காரணம் இரு நாடுகளும் ஆயுதப் போட்டியில் கணிசமான பொருளாதரத்தை இழப்பது அமெரிக்காவிற்கு ஆதாயம்.

தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் கூட குறைந்த பட்ச வாழ்க்கையை அளிக்காமல் சித்திரவதை செய்யும் நாட்டில் அணு ஆயுத சவுடால் யாருக்கு பயன்படும்? வீக் எண்டில் – மல்டிபிளக்சில் சினிமா பார்த்து விட்டு பிசாவை முழுங்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மேட்டுக்குடியினர் ,” நாங்களும் வல்லரசுதான்” என்று பீர் நிறைந்த வாயில் ஊளையிடுவது தவிர வேறு என்ன பயன்?

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: