Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?

தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?

-

செய்தி-25

“எல்லா ஆலைகளிலும் பணிநிலைமைகளைப் பற்றி தொழிற்சங்கமும், நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்துவது அன்றாடம் நடப்பதுதான். ஆனால் ஒருவரைக் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை” என்கிறார் ஜப்பானிலிருந்து இந்தியா வந்திருக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிபர் ஒபாமு சுஸுகி. தொழிலாளர்களை வாட்டி வதைப்பதெல்லாம் மாருதி நிறுவனத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது போலும்.

ஜூலை 18 அன்று மனேசார் கிளையில் தங்களது மனிதவள மேம்பாட்டு அதிகாரியை காவு கொடுத்த பிறகு முதன்முதலாக இந்தியா வந்துள்ள அவர் மனேசார் ஆலைக்கு செல்லாமல் குர்ஹான் கிளையில் மட்டும் அதுவும் போலீசு பாதுகாப்போடு பார்வையிட்டு திரும்புகிறார். வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள 500 நிரந்தர தொழிலாளர்களை மறுபடியும் வேலைக்கமர்த்த கோரும் மாருதி தொழிற்சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த அவர், “சட்டத்தை கையிலெடுப்பவர்களோடு எப்படி இணைந்து பணியாற்ற முடியும்” என கேள்வி கேட்கிறார். மன்னிக்க முடியாத அக்குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்கிறார். ஆனால் குறைந்த பட்ச தொழிலாளர் சட்டத்தைக் கூட அமல்படுத்தாமல் மாருதி நிறுவனம் சட்டத்தை கையிலெடுத்திருப்பது தவறில்லையாம்.

மாருதி நிறுவனத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஹரியாணா முதல்வர் பூபேந்திர்சிங் ஹோடா இவரிடம் உறுதி அளித்திருக்கிறாராம். பிறகு மாருதி சுஸுகி நிறுவனத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் முன்னேற்ற இணைந்து பணியாற்ற சுஸூகி அரசுத்துறை அதிகாரிகளிடம் உறுதியளித்திருக்கிறார். இதன்படி மாருதி நிறுவனம் தொழிலாளர்களை சுரண்டி பெறும் வளர்ச்சியும், இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்தையே இந்தியப் பொருளாதார வளர்ச்சியாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த செவ்வாயன்று மனேசார் ஆலையில் உற்பத்தி துவங்கினாலும் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளிகளை செப்டம்பர் 2 முதல் எடுக்கவுள்ள மாருதி நிறுவனம் இனி ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக நிரந்தர தொழிலாளர்களை மாத்திரமே வேலைக்கெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த சிறு வெற்றி இது. ஆனால் இதற்காக தொழிலாளிகள் கொடுத்திருக்கும் விலை அதிகம். அதாவது பலநூறு தொழிலாளிகள் வேலையிழந்திருக்கிறார்கள். பலர் சிறையில் இருக்கிறார்கள்.

இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து விடும் என சொத்தைக் காரணம் காட்டி இங்கு உற்பத்தியாகும் ஸ்விப்ட், டிசைர் மற்றும் ஏர்டிகா கார்களின் விலையை கணிசமாக உயர்த்தவும் மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒப்பந்தத் தொழிலாளிகளை விடுத்து நிரந்தரத் தொழிலாளிகளுக்கான சட்டப்பூர்வமான செலவை நுகர்வோர் தலையில்தான் மாருதி நிறுவனம் கட்டும். யாராவது மலிவான கார் கேட்டால் தொழிலாளிகளை மலிவான கூலிக்கு உழைக்கச் சொல் என்று கூறிவிடும் போலும்.

மோடி-சுசுகி
நரேந்தர மோடியுடன் ஒசாமு சுசுகி

சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மற்றும் கொலைகாரர்கள் என்றெல்லாம் தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு நாடறிந்த கொலைகாரனும், 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்றவனும், கருவிலிருக்கும் சிசுவைக் கூட வெளியில் இழுத்துக் கொள்ளும் இந்துமத வெறியர்களின் தலைவனுமான குஜராத் முதல்வர் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை. ஏனெனில் இங்குதான் மாருதியின் மூன்றாவது பெரிய ஆலை கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் உற்பத்தியை துவங்க இருப்பதால் மோடி மகானின் தயவு சுஸூகிக்குத் தேவை.

மோடியின் குஜராத் இல் தொழிற்சங்க இயக்கம் வலுவாக இல்லை. அப்படி ஏதேனும் கோரிக்கைகள் எழுந்தாலும் அடக்க இந்துமத வெறியர்களின் முதலாளிகள் சார்பு தொழிற்சங்கங்கள் ஒசாமு சுஸுகி போன்றவர்களுக்கு உதவும். அதுனால்தான் டாடாவும் அங்கே போகிறார், சுஸுகியும் அங்கே போகிறார். சுஸுகியை வரவேற்க ஜப்பானுக்கே நேரில் போனார் மோடி. கேட்பாரற்ற பொருளாக தொழிலாளர்களது உரிமைகள் குஜராத்தில் இருக்கும் வரை கொலைகாரப் பட்டம் மோடிக்கு கிடைக்காது. அதுவரை குஜராத்தில் ஒரு மானேசர் உருவாகாது.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________________________________________________

__________________________________________________________________________________