செய்தி-44

செங்கற்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் செந்தூரன் என்பவர் கடந்த 4 ஆம் தேதி பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். காரணம் எதுவும் குறிப்பாக சொல்லப்படாத நிலையில் தன்னையும் தன்போல வாடும் 8 பேரையும் திறந்தவெளி முகாமுக்கு மீண்டும் அனுப்புமாறு கோரி உண்ணாவிரதம் துவங்கிய செந்தூரன், கடந்த சில நாட்களாக நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செந்தூரனை சந்தித்த வைகோ உண்ணாவிரதத்தை கைவிடக் கோரினார். ஆனால் இதன்மூலமாவது எங்கள் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருக்கிறேன். மன்னித்து விடுங்கள். தொடருவதைத் தவிர வேறு வழியில்லை என்றாராம் செந்தூரன். செந்தூரனிடம் கோரிக்கை வைத்த வைகோ அதே போன்று மன்மோகன் சிங்கிடமோ இல்லை இந்திய அரசிடமோ எத்தனையோ முறை கோரிக்கைகளை வைத்திருக்கிறார். குற்றவாளியான இந்திய அரசிற்கு ஒரு நியாயவான் வேடத்தை தந்ததைத் தவிர அந்த கோரிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை.
செந்தூரன் கேட்பதெல்லாம் ஒரு எளிய கோரிக்கைதான். ஆனால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் ஈழ அகதிகளுக்கு அதைக் கூட தர மறுக்கிறது அரசு. ஏற்கெனவே திறந்தவெளி முகாம் என்பது ஒரு திறந்தவெளிச் சிறைதான். வேறு முகாமில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால் வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும், வெளி வேலைக்கு போவதற்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள், போதாத குறைக்கு பள்ளிப்படிப்புக்கு பிறகு எந்த அகதியின் குழந்தையாவது படிக்க நினைத்தால் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடையாது என சர்வதேச அகதிகளின் உரிமை அனைத்தையும் அரசு குழிதோண்டிப் புதைத்து விட்டது. இங்கிருப்பதை விட முள்வேலி முகாமே மேல் எனக் கருதுமளவுக்குத்தான் செங்கல்பட்டு போன்ற திறந்தவெளி முகாம்களே உள்ளது.
சிறப்பு முகாம்களோ சுயமரியாதை உள்ள ஈழத்தமிர்களை காயடிக்க போலீசார் வைத்திருக்கும் சிறப்பு வைத்திய சாலை. இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மத்திய அரசு தமிழகத்திலுள்ள பரவலான எதிர்ப்பையும் மீறி குன்னூர் வெலிங்டன் ராணுவப்பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தருகிறது. கேட்டால் நட்பு நாடு என்கிறார் மத்திய அமைச்சர். தமிழர்களை கொல்லும் சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி. அதே சிங்கள ராணுவத்திற்கு பயந்து வரும் தமிழர்களுக்கு முகாம் என்ற பெயரில் சிறை.
அகதிகளைப் பொறுத்தவரையில் ஏதோ ரவுடிகள், சோம்பேறிகள் போல ஒரு தோற்றத்தை ஆளும்வர்க்கம் உருவாக்க நினைக்கிறது. ஆனால் வெளியே கூலிக்குப் போகுமிடத்தில் கூட அவர்களுடைய கூலி பிறருக்கு சமமாக எங்கேயும் தரப்படுவதில்லை என்பதுதான் எதார்த்தம்.
ஆனால் இம்முகாம்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரத்தில் ஏறி சில அகதிகள் போராடினார்கள். போராட முடியாத அகதிகள் 107 பேர் கடந்த ஜூன் மாதம் சுமார் 30 பேர் மட்டுமே அமரக் கூடிய படகில் ஆஸ்திரேலியா வுக்கு தப்ப முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 15 நாள் நின்று கொண்டேதான் பயணிக்க வேண்டியிருக்கும் என்ற இந்தப் படகில் இருந்தவர்களில் 19 பெண்களும், 25 குழந்தைகளும் அடக்கம். தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19.916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். க்யூ பிராஞ்ச் போலீசாரின் கண்காணிப்பில் தான் அனைவரும் சிறுநீர் கூட கழிக்க வேண்டும் என்ற அவலம் தான் இங்கு நிலவுகிறது.
ஆம், முள்வேலி முகாமிலிருந்தால் ராஜபக்சேவின் பாசிச ராணுவத்துக்கு அடிபணிய வேண்டும், தமிழக அகதி முகாமிலிருந்தால் இந்திய அரசுக்கு அடிபணிய வேண்டும். அகதியாக இருந்து காசு சேர்த்து தப்பிக்க நினைத்தால் ஆஸ்திரேலியா போகும் கள்ளத் தோணிக்கு பணம் தர முடியும். ஆனால் போய்ச் சேருவற்குள் படகு கவிழ்ந்தால் மரணம்தான். மாட்டிக்கொண்டால் மீண்டும் படகு காசு திரட்ட வேண்டி அகதி முகாமிலிருந்து உழைக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள் செந்தூரன் கேட்பது மான்கொம்பா?
ராமேஸ்வரம் மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைக் கண்டித்து கடிதம் எழுதும் ஜெயலலிதா இந்த வதை முகாம்களை மூடாமல் பராமரிப்பது ஏன்? மீனவத் தமிழன் மீதான கருணையும் சரி, ஈழத்தமிழர் மீதான இரக்கம் என்பதும் சரி எல்லாமே நாடகம்தான் என்பதற்கு செந்தூரனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு சான்று.
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: