Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்"கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! - புதிய ஆதாரங்கள்!!

“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! – புதிய ஆதாரங்கள்!!

-

செய்தி-58

நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி  மத்தியில் ஆளும் காங்கிரசும் நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த  மாநிலங்களை ஆளும் பாரதிய ஜனதாவும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்று ஊடகங்களில் கசியத் துவங்கியுள்ளது.

நிலக்கரியை தனியார்களுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதைப் பரிந்துறைக்க கண்காணிப்புக் குழு (Screening Committee) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. காபினெட் மந்திரிகள் மற்றும் துறைச்செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக நிலக்கரித் துறைச் செயலாளர் இருக்கிறார். இந்த கண்காணிப்புக் குழுவில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பாக அதன் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேற்படிக் கமிட்டி நடத்திய அதிகாரப்பூர்வமான சந்திப்புகளில் நடந்த விவதங்களின் பதிவேடுகள் (minutes of meeting) தான் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. அம்பலமாகியுள்ள இந்த ஆயிரம் பக்க ஆவணங்களின் பக்கங்கள் நெடுக அதிகார வர்க்கமும் தேசத்தின் வளங்களைக் கொள்ளையிடுவதில் ஆளும் வர்க்கமும் தரகு முதலாளிகளோடு எந்தளவுக்குத் தோளோடு தோள் நின்று செயல்பட்டுள்ளனர் என்கிற உண்மை ஆபாசமாகப் பல்லிளிக்கிறது.

விண்ணப்பங்களைச் சமர்பித்த நிறுவனங்களில் சிலவற்றுக்கு நிலக்கரிச் சுரங்கம் பற்றியோ நிலக்கரி பற்றியே கடுகளவும் தெரியாது என்கிற விவரங்களை விவாதிக்கும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், மேற்படி நிறுவனங்களை பிற நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து நிலக்கரி வயல்களை எடுத்துக் கொள்ளுமாறு வழிகாட்டியுள்ளனர். திருடுவது எப்படி என்று போலீசே ஸ்கெட்சு போட்டு திருடனின் கையில் கொடுத்து வழியனுப்பி வைத்த கதை இது.

நிலக்கரி வயல்களைக் கேட்டு ஒன்ரறையணா விண்ணப்பத்தை அனுப்பியதோடு அது தொடர்பான நேர்முக விளக்கக் கூட்டங்களுக்குக் (presentation) கூட வராமல் விட்ட 17 நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த விளக்கக் கூட்டத்தில் தான் நிலக்கரி வயல்களைக் கோரிய நிறுவனங்கள் தமக்கு எத்தனை டன் நிலக்கரி தேவை உள்ளது, அதன் பயன்பாடு என்ன, தம்மிடம் எந்தவிதமான தொழில் நுட்பங்கள் உள்ளது, தமது மூலதன பலம் என்ன, இதற்கு முன் நிலக்கரி வெட்டுவதில் உள்ள அனுபவம் என்று சகலமும் விளக்க வேண்டும்.

ஆனால் மேற்படி தகுதிகள் எதுவுமில்லாத நிறுவனங்கள் இவ்வாறு பெற்ற ஒதுக்கீட்டின் மூலம் தமது பங்கு மதிப்பை உயர்த்திக் கொண்டு பின்ன பங்குச் சந்தை சூதாட்டத்தில் கொள்ளை லாபம் அடித்துள்ளனர்.

இவர்கள் பின்பற்றிய நடைமுறைக்கு துலக்கமான எடுத்துக்காட்டு ரம்பையா நிலக்கரி வயலை ஒதுக்கீடு செய்த முறை. இந்த வயலைக் கோரி வந்த 108 விண்ணப்பங்களில் முதலில் இரண்டை மட்டும் தெரிவு செய்துள்ளனர். பின்னர் மேலும் நான்கு நிறுவனங்களைச் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களிடம் அந்த வயலை ஒப்படைத்துள்ளனர். நிறுவனங்களை விலக்கியதற்கும் காரணம் குறிப்பிடப்படவில்லை பின்னர் சேர்த்துக் கொண்டதற்கும் காரணங்கள் சொல்லவில்லை.

தற்போது ஊடகங்களில் இந்த ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. கண்காணிப்புக் குழு என்பது மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்ல  மாநில அரசின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். மேலும், குறிப்பிட்ட சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க மாநில அரசுகளின் பரிந்துறைகளையும் சிபாரிசுகளையும் கண்காணிப்புக் கமிட்டி கவனத்தில் எடுத்திருக்கிறது.

சம்பந்தப் பட்ட மாநிலங்கள் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின் ஆளுகையின் கீழ் உள்ள நிலையில், தற்போது இந்த ஆவணங்களை கசிய விட்டதன் மூலம் மத்தியில் ஆளும் காங்கிரசு வலையை விரிவாகப் போட்டு வைத்துள்ளது.  பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டுவரும் எதிர்கட்சிகளிடம் காங்கிரசு ‘நீ மட்டும் என்ன யோக்கியமா’ என்கிறது.

ஆளும் வர்க்கங்களிடையேயும் முதலாளிகளிடையேயும் ஏற்படும் முரண்பாடுகளின் ஊடாகத் தான் ஊழல்கள் கசிந்து வெளியே வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பங்கு பிரித்துக் கொள்வதில் காங்கிரசு இன்னும் கொஞ்சம் தாராளமாக நடந்து கொண்டிருந்தால் பாரதிய ஜனதா இப்போது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதி காத்திருக்கும்.

ஆக பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் செல்லும் திசைவழியில் இதையும் மடைமாற்றி விடும் முயற்சிகள் துவங்கி விட்டதாக நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: