Monday, April 21, 2025
முகப்புசெய்திஅரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!

அரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!

-

செய்தி-60

மீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரது ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை சுட்டிக்காட்டிய போது, ஏன் சார் கேக்குறீங்க, மூணு பேரு வேல செய்யுற எடத்துல ஒருத்தருதான் இருக்கோம். புதுசா ஆள் எடுக்க மாட்டேங்குறாங்க. என்று எதார்த்தத்தை போட்டு உடைத்தார். அவரிடமிருந்து மாத்திரை வாங்கும் செக்சனுக்கு போனபோது அங்கே விபத்தில் சிக்கியிருந்த தனது மகனை காட்ட வந்திருந்த ஆந்திர மாநில அரசு ஊழியர், தனது அடையாள அட்டையை மருத்துவமனை ஊழியர்களிடம் யார் வந்தாலும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார். அந்த அட்டைக்காக தனது மகனை நன்றாக கவனிப்பார்கள் போலும் எனக் கருதிக் கொண்டார். மருத்துவர்கள் வயதான முதியவர்களிடம் கூட அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முகம் சுழிக்காமல் பதில் சொல்லி, என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

நண்பருக்கு காயத்திற்கு மருந்துவைத்துக் கட்டிய பிறகு மருத்துவமனையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினோம். பசியாக இருந்ததால் பிஸ்கட் ஒன்று வாங்கினோம். அப்போது நாய் ஒன்று அங்கு வரவே அதற்கு பிஸ்கட் போட்டோம். அடுத்தமுறை நாம் அங்கு போனால் அந்த நாய் வராது. ஏனெனில் இப்போது மருத்துவமனைக்கு எலி பிடிக்க போன இருளர்களோடு ப்ளூ கிராசு அமைப்பினரை வைத்து அலைந்து கொண்டிருந்த நாய்களைப் பிடித்திருக்கிறார்கள்.

எலி கடித்து இறந்து போன குழந்தைப் பிரச்சினை காரணமாக கோஷா மருத்துவமனையில் இரண்டு மருத்தவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மஞ்சள் காமாலை கண்ட குழந்தை இறந்தால் கூட இப்படி காயம் பட்டது போல தோல் சுருங்கிவிடும் என மருத்துவர்கள் வாதிட்டாலும் தடயவியல் சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர். எலிக்கு என்ன செய்ய என யோசித்த மாநில அரசு மருத்துவமனையில் உள்ள பொந்துகளை சிமெண்டு வைத்து அடைத்து வருகிறது.

நீதிமன்றத்தில் சிலர் வழக்குப்போட்டு பூனை, எலி, நாயை மருத்துவமனை வளாகத்தில் இருந்து விரட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளனர். அதனால் இனி உணவுப்பொருட்களை மருத்துவமனைக்குள் விற்பனை செய்ய எடுத்துச் செல்ல என கட்டுப்பாடு விதிக்க அரசு முடிவுசெய்துள்ளது. ஆக இனிமேல் அந்த மருத்துவமனைக்கு போய் தேநீர் குடிக்க வேண்டுமென்றால் பக்கத்துல உள்ள சரவண பவன் மாதிரி உயர்ரக ஓட்டல்கள்தான் கதி. அங்கே தேநீர் விலை 25 ரூபாய்.

எலியைத் தேடும் அரசு சுகாதாரத்தை பேணுவதற்கு அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால் எல்லோரும் அரசு மருத்துவமனைக்கு வருவார்கள். அப்புறம் எப்படி அப்பல்லோ போன்றவர்கள் எல்லாம் பிழைப்பது? தீவிர முதலாளித்துவ ஆதரவாளர்கள் இப்படி வாதிப்பார்கள். இதெல்லாம் தனியார் முதலாளி செஞ்சா இப்படி நடக்குமா என்று. புகழ்பெற்ற கிண்டி பாலாஜி மருத்துவமனை பணம் கறப்பதற்காக பிணத்துக்கே 3 நாள் மருத்துவம் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மாட்டினார்கள். ஆம்புலன்சு சேவையை ஊழல் புகழ் சத்யம் ராஜூவின் மச்சானுக்கு கொடுத்திருக்கிறார்கள். அவன் சுரண்டுவதைப் பற்றி தனியாக முன்னர் எழுதியுள்ளோம்.

அமைச்சர் பெருமக்கள் அப்பல்லோ போவதும், ஒரு விளம்பரத்துக்காக அம்மாமார்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பவதும் நாடறிந்த உண்மை. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சு என பினாமி பெயரில் ரூ 1 லட்சத்தில் எல்லா மக்களுக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் லண்டன் போகிறார். ஜெயலலிதாவும், சோனியாவும் அமெரிக்கா போகிறார்கள்.

மருத்துவத்தில் தனியார்மயம் வந்தபிறகு நோய் வந்தால் கூட ஏழைகள் பாடு அதோ கதிதான் என்றாகி விட்டது. நோய் என்ன வேண்டிக் கிடக்கிறது, போகிற வழியில் எதாவது விபத்து நடந்தால் கூட 1 லட்ச ரூபாய் கார்டை வைத்துக் கொண்டு எந்த தனியார் மருத்துவமனைக்கும் போக முடியாது. போனாலும் பத்தில் ஒரு பங்கு கட்டணத்தைக்கூட கட்ட முடியாது.

அரசு மருத்துவமனைகளில் எலிகளை பிடிப்பது இருக்கட்டும்; அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவக் கொள்ளை திமிங்கலங்களை பிடிக்க முடியுமா?

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

___________________________________