Monday, April 21, 2025
முகப்புசெய்திகசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?

கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?

-

செய்தி-56

நீதிமன்றம்

சாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக.

குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 97 பேரை திட்டமிட்டு கொன்றதாக தெகல்காவில் பகிரங்கமாக பாபு பஜரங்கி போன்றவர்கள் ஒத்துக்கொண்ட பிறகும் கைதான 62 பேரில் 32 பேரை மட்டும்தான் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளார் நீதிபதி. ஆனால் சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையானதை விசாரித்த மத்திய அரசின் பானர்ஜி கமிசன் நடந்தது விபத்து எனச் சொன்னதும், அதன் அறிக்கையை 2005-இல் சட்டவிரோதமானது என்றது குஜராத் உயர்நீதி மன்றம். 58 பேர் இறந்த சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையான வழக்கில் நிரபராதிகளான 11 முசுலீம்களுக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்தண்டனையும் கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

குஜராத் இனப்படுகொலை கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா-நானாவதிக் கமிசனின் ஆட்கள் தங்களவர்கள் என முன்னாள் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியா தெகல்காவிடம் போட்டுடைத்த பிறகும் அந்த கமிசன் ஷா இறந்தபிறகும் மற்றொரு நீதிபதியோடு தொடருகிறது. மோடி வந்த பிறகு போலீசார், நீதிபதி என அனைத்து அதிகார வர்க்கமும் காவிமயமானது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் இவர்கள் கூட்டணி அம்பலமானது அனைவருக்கும் தெரிந்ததே. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிகாரியாக மாநில அரசு நியமித்த நோயல் பார்மர் முசுலீம்கள் அனைவருமே அடிப்படைவாதிகள் என முதலிலேயே வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின் அவரது நண்பரான ரமேஷ் படேல் எனும் அதிகாரியை நியமித்துள்ளது மோடியின் அரசு.

சபர்மதி வண்டி விபத்துக்குள்ளான 27 பிப்ரவரி 2002 அன்று நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலவரம் செய்யும் இந்துக்களை கண்டுகொள்ள வேண்டாம் என உத்தரவிடுகிறார் மோடி. இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிகாரியான சஞ்சீவ் பட் வெளிப்படையாக பேசத் துவங்கியவுடன் மோடியின் போலீசு அவர்மீது பாயத் துவங்கியது. இந்துமதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இசான் ஷாப்ரியின் மனைவி ஜாகியா ஷாப்ரி இதனை சுட்டிக்காட்டியவுடன், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளை வைத்து பொய் சாட்சியம் சொல்ல வைத்தும், ஞாபகமில்லை என சொல்ல வைத்தும் சஞ்சீவ் பட்டையே வில்லனாக்கினர் மோடியின் புலனாய்வுக்குழுவினர். 3 வழக்குகளையும் அவர் மீது பதிவு செய்தனர்.

97 பேரைக் கொன்ற நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகள் பலரும் ஆம், நாங்கள் அப்படித்தான் கொன்றோம் என்பதை தெகல்விடம் பெருமையோடு ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் எதுவும் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாது. ஆனால் சபர்மதி வண்டி விபத்துக்கான பகுதியில் வசித்தவர்கள் முசுலீம்களாக இருந்த காரணத்துக்காக தூக்குத் தண்டனையும், மரண தண்டனையும்.

2000 க்கும் மேற்பட்டோரை கொன்ற கொலைகாரன் மோடிக்கு பிரதமர் பந்தயக் குதிரை பதவி. இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும். கசாப்பை தூக்கிலடக் கோருவோருக்கு பாபு பஜ்ரங்கியும், மோடியும் தூக்கிலிடப்பட வேண்டியவர்களாக படாமல் போன காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்திய அத்வானியும், மும்பை கலவரத்தை நடத்திய பால் தாக்கரேவும் கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பேற்று என்ன தண்டனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________