Monday, April 21, 2025
முகப்புசெய்திமாருதி போராட்டம் - சென்னைக் கருத்தரங்க செய்தி!

மாருதி போராட்டம் – சென்னைக் கருத்தரங்க செய்தி!

-

மாருதி ஆலை மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு மரணபீதியை ஏற்படுத்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு புதிய ‘நல்ல’ தொழிலாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறது நிர்வாகம்.

பழைய தொழிலாளிகள் தான் ஆலைக்குள் இல்லையே தவிர முதலாளித்துவ பயங்கரவாதிகளை எப்படி கையாள வேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொடுத்த பாடம் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன் இருக்கிறது. எனவே மாருதி தொழிலாளர்கள் மானேசரில் பற்ற வைத்த தீயை கையிலெடுத்து இந்திய தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தீக்கிரையாக்கும்.

மாருதி தொழிலாளர்களின் வீரம் செறிந்த அந்த போராட்டத்தை வரவேற்று ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழகத்தில் பிரச்சார இயக்கம் எடுத்து வருகிறது.

திரண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள் !                
தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம் !                    
எது வன்முறை ? யார் வன்முறையாளர்கள் ?

என்கிற மைய முழக்கத்தின் கீழ் தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள், கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.

கடந்த 25.8.2012 ஆம் தேதி திருவெற்றியூர் பெரியார் நகரிலுள்ள பொது வர்த்தகர் சங்க மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு வின் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு மாநில இணைச் செயலாளர் தோழர் ம.தி.சுதேஷ்குமார் கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றார். தனது தலைமை உரையில் மாருதி தொழிலாளர்களை ஆதரித்து ஆலைப்பகுதிகளில் பு.ஜ.தொ.மு ஒட்டிய சுவரொட்டிகள் தொழிலாளிகளிடம் எத்தகைய தாக்கத்தையும், ஆலை நிர்வாகிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளிடம் பயபீதியையும் ஏற்படுத்தியது என்பதை விளக்கிப்பேசி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக எது வன்முறை ? யார் வன்முறையாளர்கள் ? என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயக்குமார் பு.ஜ.தொ.மு எதிர்கொண்ட முதலாளித்துவ அடக்குமுறைகளை பற்றியும், மாருதி தொழிலாளர்களின் போராட்டம் எந்த வகையில் சரியானது என்பதையும், அதை ஆதரித்து நாம் ஒட்டிய சுவரொட்டிகளை கூட பொருத்துக்கொள்ள முடியாமல் பு.ஜ.தொ.மு வை தடை செய்யச் சொல்லி முதல்வரிடம் கடிதம் கொடுத்த முதலாளிகளின் தொடை நடுங்கித்தனம் ஆகிவற்றையும் அம்பலப்படுத்தினார்.

மேலும், 20ஆம் நூற்றாண்டில் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தை அன்றைக்கு இருந்த பிரிட்டீஷ் ஆளும் வர்க்கம் எப்படி ஒடுக்க நினைத்ததோ அதைப்போலவே தான் இப்போதுள்ள இந்திய ஆளும் வர்க்கமும் மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை அவதூறு செய்து, அவர்களை வன்முறையாளர்கள் என்று கூறி ஒடுக்க நினைக்கிறது. இதை முறியடிக்க வேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு ஒன்றிணைவதன் மூலம் மட்டு தான் முதலாளித்துவ பயங்கரவாத்த்தை தகர்த்தெறிய முடியும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம் என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசினார்.

மறுகாலனியக்கக் கொள்கை என்பது அனைத்து பிரிவினர் மீதும் திணிக்கப்படும் சுரண்டல் என்பதை விளக்கிக்கூறியவர், ஓட்டுப்பொறுக்கிகள் செய்யும் முறைகேடுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி அதை தற்போதுள்ள சட்டத்தின் மூலம் ஏன் தண்டிக்க முடியாது என்பதோடு அந்த சட்டமே அவர்களுக்கு உதவியாக இருப்பதையும் விளக்கினார்.

மேலும், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை சுட்டிக்காட்டி அதற்கும் ஏகாதிபத்திய அடிவருடி கொள்கைகள் தான் காரணம் என்பதை விவரமாக பதிவு செய்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அழிவுக்குள் தள்ளும் இந்த மறுகாலனியாக்க கொள்கைகளை மாய்க்கவல்ல ஒரே மாற்று நக்சல்பாரி பாதையே என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை மறுக்கும் CII, EFSI, FIKY போன்ற முதலாளிகளின் சங்கங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்கிற தீர்மானம் பார்வையாளர்களின் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டது.

கருத்தரங்கத்தில் 350 க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முதலாளித்துவத்தை சவக்குழிக்கும் அனுப்பும் உணர்வையூட்டிய பு.ஜ.தொ.மு கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியோடு கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க